தலையங்கம் – அக்டோபர் 2022

Editorial_Oct_2022

அன்புடையீர்!

வணக்கம். அக்டோபர் 02 காந்தி பிறந்த நாள்! நாடெங்கும் வன்முறையும், மத துவேஷமும் தலை விரித்தாடும் இந்நாளில், காந்தி நமக்கு மிக அதிகமாகத் தேவைப்படுகிறார். அவர் போதித்த அஹிம்சை, மத நல்லிணக்கம், உண்மை, எளிமை ஆகியவற்றைப் பின்பற்றுவதே, நாம் அவருக்குச் செய்யும் சிறப்பான நினைவஞ்சலி ஆகும்.  

மதுரை, திண்டுக்கல், மயிலாடுதுறை எனத் தொடர்ச்சியாகத் தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும் புத்தகக் காட்சிகள் நடந்த வண்ணம் உள்ளன. நவீன சிந்தனைகளை உள்ளடக்கிய சிறுவர்க்கான புத்தகங்கள் தற்காலத்தில் அதிகளவு வெளியாகின்றன. புதிதாக அதிலும் குறிப்பாகப் பெண்கள் பலர் எழுதத் துவங்கியிருப்பது வரவேற்கவேண்டிய நல்ல செய்தி!

பதிப்பகங்களும் சிறார் நூல்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டத் துவங்கியிருக்கின்றனர். பெற்றோர் குழந்தைகளுக்குப் புத்தகங்களை வாங்கிக் கொடுப்பதே வாசிப்பை ஊக்குவிக்கும் முதல் வழி! அடுத்து ஆசிரியர்களும் சிறந்த புத்தகங்களைக் குழந்தைகளுக்கு வகுப்பில் அறிமுகம் செய்ய வேண்டும். அதற்கு அவர்களும் வாசிக்க வேண்டியது அவசியம்!

பாரதி புத்தகாலயத்தின் ‘புக்ஸ் ஃபார் சில்ரன்’ குழந்தைகளுக்கென்று புத்தகங்களை வெளியிடுகின்றது. காந்தி பிறந்த நாளன்று (02/10/2022) ‘அரும்பு சிறார் நூலரங்கம்’ என்ற பெயரில், தமிழ்நாட்டில் முதன்முறையாகச் சிறுவர்க்கென தனியாக நூலரங்கு ஒன்றைத் திறந்துள்ளது. இது பாரதி புத்தகாலயத்தின் மற்றொரு மைல்கல்லாகும். இதைக் காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தி துவக்கி வைத்தார். சிறார்க்கான அனைத்து நூல்களும் (ஆங்கிலம், தமிழ்) ஒரே இடத்தில் கிடைக்கும் என்பது இந்த நூலரங்கத்தின் சிறப்பு!

சுட்டி உலகத்தில் பல்வேறு சிறுவர் நூல்கள் பற்றிய அறிமுகங்கள் வயது வாரியாகக் கொடுக்கப்பட்டுள்ளன. புத்தக காட்சிக்குப் போவதற்கு முன் குழந்தையின் வயதுக்கேற்ப கொடுக்கப்பட்டுள்ள புத்தகங்களின் பெயர்களைப் பெற்றோர் தெரிந்து கொண்டு சென்றால் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்க வசதியாகவிருக்கும். 

கதைகளும், குழந்தைப்பாடல்களும் கொண்ட காணொளிகள், சுட்டி உலகத்தில் அவ்வப்போது வெளியாகின்றன. இப்பாடல்களை உங்கள் குழந்தைகளுக்குப்  போட்டுக் காட்டினால், தமிழைத் திருத்தமாக உச்சரிக்க அவர்கள் கற்றுக்கொள்வதற்குப் பெரிதும் உதவும்.

சுட்டி உலகத்தின் பார்வை 22000 ஐ நெருங்குகிறது என்பதை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி!

மீண்டும் அடுத்த மாதம் சந்திப்போம்,

நன்றியுடன்,

ஆசிரியர்,

சுட்டி உலகம்.

Share this: