பறம்பின் பாரி

Parambinpari_pic

கடையெழு வள்ளல்களில் சிறந்தவனான பாரி, அறம்,கொடை, நட்பு, வீரம் ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்ந்த வரலாற்றையும், அவன் வேள்பாரியாக உருவாவதற்கு முன், அவன் குணாதிசயங்கள் எப்படி இருந்திருக்கும் என்பதையும், சங்கப் பாடல்களை அடிப்படையாகக் கொண்டு, இந்நாவல் விவரிக்கின்றது.

பாலு ஒரு நாள் “பாரி பாரியென்று பல ஏத்தி’ என்ற கபிலரின் பாடலை வாசிக்கிறான். அவன் மனத்தைக் கபிலர், பாரியின் நினைவுகள் ஆக்கிரமிக்கின்றன. மூவேந்தர்களைத் தனியொருவனாகக் களத்தில் சந்தித்து, மண்ணைக் கவ்வ வைத்த பாரியின் வீரமும், துணிச்சலும் பாலுவை வியப்புக்கு உள்ளாக்குகிறது.   

பாரியின் நினைவுகளுடன் தூங்கிவிட்ட பாலுவின் அருகில், ஆதன் தோன்றுகின்றான். ஏற்கெனவே ‘ஆதனின் பொம்மை’ என்ற இளையோர் நாவலில், பாலுவை ஆதன் தான், சிந்துசமவெளி நாகரிகக் காலத்துக்குக் கூட்டிச் சென்று, தமிழர்களின் நாகரிகத் தொன்மையை விளக்குகிறான்.

இந்நாவலிலும் ஆதன் கேப்டன் பாலுவை பாரியின் இளமை காலத்துக்குக் கூட்டிச் செல்கின்றான். பாலு பழங்கால உடையுடுத்திய திரையனாகவும் ஆதன் சாத்தனுமாக மாறுகின்றனர். பாரியும் பதின்பருவத்து இளைஞனாக இருக்கின்றான். அப்போது பாரியின் தந்தை வேள் எவ்வி, வேளிர்குலத் தலைவனாக இருக்கின்றான்.

பாரியின் உற்ற தோழர்களாகத் திரையனும், சாத்தனும் இருக்கின்றார்கள். இளைஞர்கள் மூவரும் சிறு விலங்குகளை வேட்டையாடும் சமயம், சிலர் காட்டுக்குள் நுழைந்து திருட்டுத்தனமாக மரங்களை வெட்டுகின்றனர். பாரி சிவிங்கிப்புலிகளின் உதவியுடன் அவர்களை உயிருடன் பிடிக்கின்றான். சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்கள், வறுமையினால் திருட்டுத் தொழிலில் ஈடுபடுகின்றார்கள் என்பதையறிந்து, அவர்களை மன்னிப்பதுடன், பக்கத்தில் இருக்கும் கற்குகைகளில் தங்கி விவசாயம் செய்யவும், பாரி சம்மதம் தெரிவிக்கின்றான்.

இந்த நிகழ்வின் மூலம், மனுவின் பெயரால், இப்போது இருக்கும் சாதிப் பாகுபாடுகளின் வேர்கள், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டன என்பதையும், ஆசிரியர் இந்தச் சம்பவம் மூலம் இளையோர்க்குச் சொல்லியிருக்கின்றார்.

கரந்தைப் போர் என்ற அத்தியாயம், பறம்பு மலைக்குள் திருட்டுத்தனமாக நுழைந்து ஆநிரைகளைக் கவர்ந்து சென்ற பாண்டிய வீரர்களிடமிருந்து ஒரு மனித உயிரைக் கூடக் கொல்லாமல், பாரி எப்படிச் சிறப்பாக போர் வியூகம் அமைத்து, வெற்றி காண்கிறான் என்பதைச் சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் விவரிக்கிறது.  

வகைஇளையோர் நாவல்
ஆசிரியர்உதயசங்கர்
வெளியீடு:-வானம் பதிப்பகம், சென்னை-89 +91 91765 49991
விலைரூ 120/-
Share this: