சுட்டிக் குழந்தைகளுக்கு அன்பு வணக்கம்.
47வது சென்னை புத்தகத் திருவிழா-2024, சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. சென்னையைச் சுற்றியுள்ள குழந்தைகள் எத்தனை பேர், இந்த அறிவுத் திருவிழாவுக்குச் சென்று வந்தீர்கள்?
என்ன என்ன தலைப்புகளில் சிறுவர்க்கான புத்தகங்கள் தமிழில் வெளிவந்துள்ளன என்று, சுற்றிப் பார்த்தீர்களா? வழக்கமான தெனாலிராமன். பஞ்சதந்திர கதைகளை விடுத்துப் புதிய புத்தகங்களை வாங்கினீர்களா? வாங்கி வந்தவற்றில், ஒன்று, இரண்டு புத்தகங்களையாவது வாசித்து முடித்தீர்களா?
இந்த ஆண்டு தமிழில் பல புதிய சிறார் நூல்கள் வெளிவந்துள்ளன. குழந்தைகள் புத்தக அரங்குகளுக்குச் சென்று, புத்தகங்களைக் கையில் எடுத்துப் புரட்டிப் பார்ப்பதே, சுகமான அனுபவம் அல்லவா?
இரண்டாவது ஆண்டாக இம்முறையும், சென்னையில் பன்னாட்டுப் புத்தகக் காட்சி நடந்து முடிந்துள்ளது. தமிழ்நாடு அரசு எடுத்துள்ள இந்த முயற்சியை, எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஏற்கெனவே உலக மொழிகள் பலவற்றில் இருந்து, தமிழுக்குச் சிறந்த படைப்புகள் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. இந்தப் பன்னாட்டுப் புத்தக காட்சியின் பயனாகச் சிறந்த தமிழ்ப் படைப்புகள், மற்ற மொழிகளுக்கு மாற்றம் பெற்று, உலகளவில் கவனம் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்காகத் தமிழ்நாடு அரசு இந்த ஆண்டு, இலக்கிய முகவர்கள் சிலரைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சி கொடுத்துள்ளது. இவர்கள் உலகப் பதிப்பாளர் களுக்கும், தமிழ்ப் படைப்பாளர்க்கும் இடையே பாலமாக இருந்து, தமிழ்ப் படைப்புகள் உலகின் மற்ற மொழிகளுக்கு மாற்றம் பெற்று, வெளிவர உதவுவார்கள்.
சுட்டி உலகத்தில் சிறுவர்களின் வயதுக்கு ஏற்ற, புத்தக அறிமுகங்கள் உள்ளன. பெற்றோர் உங்கள் குழந்தைகளின் வயதுக்கேற்ற புத்தகங்களை வாங்கிக் கொடுப்பது மிகவும் அவசியம். இல்லையேல், வாசிப்பில் குழந்தைகளுக்கு விருப்பம் இல்லாமல் போய்விடும்.
பாடப்புத்தகம் தாண்டிய வாசிப்பு, குழந்தைகளுக்கு மிகவும் அவசியம். அவர்களின் பன்முகத் திறமையை வளர்ப்பதில் புத்தக வாசிப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. சிறு வயதில் புத்தக வாசிப்பின் சுவையை அறிந்து கொண்டால், வாழ்நாள் முழுக்க புத்தகம் சிறந்த துணையாக இருக்கும். முதுமையில் பொழுது போக வில்லை என்ற புலம்பலுக்கு, இடமே இருக்காது.
குழந்தைகளுக்கு இயற்கையில் நாட்டம் ஏற்படுத்தும் விதமாகச் சுட்டி உலகத்தில் மாதம் ஒரு விலங்கு, பறவை, மரம் ஆகியவற்றை அறிமுகம் செய்கின்றோம். இவற்றை உங்கள் குழந்தைகள் வாசிக்கச் செய்து, இயற்கையை நேசிக்கக் கற்றுக் கொடுங்கள்.
சென்னை புத்தகக் காட்சியினைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் புத்தகக் காட்சிகள் நடந்தவண்ணம் உள்ளன. அவசியம் உங்கள் குழந்தைகளை அருகில் நடக்கும் புத்தகக்காட்சிக்கு அழைத்துச் செல்லுங்கள். அவர்கள் விரும்பும் புத்தகங்களை வாங்கிக் கொடுத்துப் புத்தக வாசிப்பை ஊக்குவியுங்கள்.
இனிய வாழ்த்துகளுடன்,
ஆசிரியர்.
சுட்டி உலகம்.