இது சிறுவர் பாடல் தொகுப்பு. இதில் 50 பாடல்கள் உள்ளன.
குழந்தை பிறந்தவுடனே, தாலாட்டைக் கேட்டுத் தான் தூங்குகிறது. அதற்குப் பிறகு, ‘நிலா! நிலா! வா வா! என்று நிலாவைப் பாடி அழைத்துச் சோறு ஊட்டுகிறோம். குழந்தைப் பருவத்தில் எதையும் பாடலாகச் சொல்லும் போது, எளிதில் புரிந்து கொள்கிறார்கள். புதிய சொற்களை எளிதாகக் கற்றுக் கொள்ளவும், திருத்தமாக உச்சரிக்கவும், பாடல்கள் அவர்களுக்கு உதவுகின்றன. எனவே சிறார் இலக்கியத்தில், குழந்தைப் பாடல்களின் பங்களிப்பு, மிகவும் அவசியம்.
குழந்தைகள் எளிதில் கற்றுக் கொண்டு பாடுவதற்கேற்ற வகையில், இத்தொகுப்பில் உள்ள பாடல்கள் அமைந்திருக்கின்றன. குழந்தைகளை எளிதில் ஈர்க்கும் விதத்தில், இவற்றில் இனிய ஓசையும், சந்தமும் அமைந்துள்ளமை சிறப்பு.
‘ஆலோலங்கிளி தோப்பிலே’ என்ற பாடலிலிருந்து, சில வரிகள்:-
“பஞ்சவர்ணக் கிளியுண்டு
பச்சை நிறக் கிளியுண்டு
வெள்ளை நிறக் கிளியுண்டு
வெண்கொண்டைக் கிளியுண்டு;
குட்டிக் குட்டிக் கண்கள் கொண்டு
குறுகுறுன்னு பார்க்குது!
படகு போல இறகைக் கொண்டு
காற்றைக் கிழித்துப் பறக்குது!”
‘வண்ண வண்ணப் பொம்மை’ என்ற பாடலிலிருந்து சிலவரிகள்:-
“வண்ண வண்ணப் பொம்மை
வண்டி நிறைய பொம்மை
சின்ன சின்ன பொம்மை
சிரிக்கும் பாப்பா பொம்மை
……..
எட்டி எட்டிக் குதிக்கும்
காட்டு முயல் பொம்மை
குட்டிக் கரணம் போடும்
சுட்டிக் குரங்கு பொம்மை”
நேரு, பாரதி, கலாம், காமராஜர், தெரஸா போன்று, குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டிய ஆளுமைகள் குறித்த பாடல்களும், மரம் வளர்ப்பு குறித்த சூழலியல் பாடல்களும், இக்காலத்துக்கேற்ற புதிய பாடுபொருள்களும் இதில் உள்ளன.
முகம் பார்க்கும் கண்ணாடியில் தொடங்கும் பாடல், தொலைநோக்குக் கண்ணாடியில் முடிகிறது. ‘டிரிங்க் டிரிங்க் செல்போனு’ பாடலும், இத்தொகுப்பில் உள்ளது.
குழந்தைகள் பாடுவதற்கேற்ற, இனிய ஓசையும், சந்தமும் நிறைந்த பாடல் தொகுப்பு.
வகை | குழந்தைப் பாடல்கள் |
ஆசிரியர் | மோ.கணேசன் |
வெளியீடு:- | புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை-18 9444960935 |
விலை | ரூ 50/- |
சிறுவர் பாடல்கள்