தலையங்கம் – ஜூன் 2024

Kids_reading_pic

சுட்டிக் குழந்தைகளுக்கு, அன்பு வணக்கம். கோடை விடுமுறை முடிந்து, பள்ளி திறக்க இருக்கின்றது. புதிய கல்வி ஆண்டில், பள்ளி செல்ல இருக்கும் எல்லாச் சுட்டிகளுக்கும், எங்கள் சுட்டி உலகத்தின் வாழ்த்துகள்! குழந்தைகளுக்கும், அவர்களை நேசித்து வழி நடத்தும் ஆசிரியர்களுக்கும் புதிய கல்வியாண்டு சிறக்க வாழ்த்துகள்!

இம்முறையும் பிஜேபி வென்றால், இந்தியா ஃபாசிச நாடு ஆகிவிடுமோ என்ற பயம், பெரும்பாலோர்க்கு இருந்தது. கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 400 சீட் வெல்வோம் என்று, ஆணவத்துடன் அறைகூவல் விடுத்த  பிஜேபிக்கு, நல்லவேளையாக ஆட்சியமைக்கத் தேவையான தனிப் பெரும்பான்மை கூடக் கிடைக்கவில்லை.

அரசுப் பள்ளிகளில் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு, 20 நிமிடம் சிறார் இதழ் வாசித்தல், புத்தகம் வாசித்தலுக்குத் தனிப் பாடவேளை அறிமுகம் செய்யப்பட உள்ளது என்ற தகவலைத் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிகளில் வாசித்தலை ஊக்குவிக்க, இது சிறப்பான முன்னெடுப்பு.

ஏற்கெனவே மாணவர்க்காக அரசு வெளியிடும் ஊஞ்சல், தேன்சிட்டு இதழ்கள், பள்ளிகளுக்கு வருகின்றன. மாணவர்களின் வாசிப்புத் திறனை ஊக்குவிக்கக் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை முன்னெடுத்துள்ள வாசிப்பு இயக்கம், கடந்த ஆண்டு 53 நூல்களை வெளியிட்டது.

மேலும் 70 கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, விரைவில் அச்சுக்குச் செல்ல உள்ளன. இந்த வாசிப்பு நூல்கள் மிகக் குறைந்த வார்த்தைகளுடனும் வண்ணப் படங்களுடனும், 16 பக்கம் ஒரு புத்தகம் என்ற அளவிலும் இருக்கும். குழந்தைகளின் வாசிப்புத் திறனுக்கேற்ப, இவை நுழை,நட,ஓடு,பற என நான்கு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

நுழை,நட பிரிவுக் கதைகளில், வண்ணப்படங்கள் அதிகமாகவும், வார்த்தைகள் குறைவாகவும் இருக்கும். இவை திக்கித் திணறி, எழுத்துக் கூட்டி வாசிக்கும் மாணவர்க்கானவை. ஓடு, பற பிரிவுகளில் படங்கள் குறைந்து, வார்த்தைகள் அதிகமாக இருக்கும். இப்புத்தகங்கள் வகுப்பிலேயே கைக்கு எட்டும் தூரத்தில் இருப்பதால், மாணவர்கள் நேரம் கிடைக்கும் போது, எடுத்து வாசிக்க முடியும். அவசியம் இவற்றை வாசித்து, மாணவர்கள் வாசிப்புத் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். வாசிப்புத் திறன் மேம்பட, மேம்பட, பாடப்புத்தகம் வாசிப்பது, எளிதாகிவிடும்.

கோடை விடுமுறையில் எத்தனை பேர், உங்கள் ஊரில் உள்ள நூலகம் சென்றீர்கள்? புத்தகம் எடுத்து வாசித்தீர்கள்? இந்த ஆண்டு முதல், உங்கள் வீட்டில் உங்களுக்கு என்று, ஒரு தனி நூலகம் தொடங்குங்கள். ஓர் அலமாரியில் ஒரு தட்டு உங்களுக்காக ஒதுக்கிக் கொண்டு, புத்தகம் வாங்கிச் சேர்க்கப் பழகுங்கள். 

உங்கள் பிறந்த நாளுக்குப் பரிசாக, புத்தகங்களைப் பெற்றோரிடம் கேளுங்கள். தமிழ்நாடு முழுதும் மாவட்டத் தலைநகர்களில் தொடர்ந்து புத்தகத் திருவிழா நடந்த வண்ணம் உள்ளது. வாய்ப்புள்ளோர் அவசியம் புத்தகத் திருவிழாவுக்குச் சென்று வாருங்கள்.

குழந்தைகளின் பன்முகத் திறமை பெருக, பாடப்புத்தகம் தாண்டிய வாசிப்பு அவசியம். எனவே பெற்றோர் அவசியம், குழந்தைகளுக்குச் சிறு வயதிலேயே வாசிப்பை அறிமுகம் செய்யுங்கள். கதைப் புத்தகங்கள் வாங்கி வாசிக்கக் கொடுங்கள். கதைப் புத்தகம் குழந்தைகளின் கற்பனையைத் தூண்டி, அவர்களின் படைப்புத் திறனை வெளிக் கொண்டு வரும்.

இனிய வாழ்த்துகளுடன்,

ஆசிரியர்,

சுட்டி உலகம்.

Share this: