நண்பர்கள் – கதிர் கண்மணி (8 வயது)

Nanbarkal_story

(சுட்டி உலகமும், லாலிபாப் சிறுவர் உலகமும் இணைந்து நடத்திய கதைப்போட்டியில் ஊக்கப்பரிசு பெற்ற கதை)

ஒரு அடர்ந்த காட்டின் நடுவே பெரிய மலை ஒன்று இருந்தது. அதில் ஒரு சிறு குருவி வழி தெரியாமல் வந்து மாட்டிக்கொண்டது. இங்கும் அங்குமாய் அலைந்து சோர்ந்து போனது.

பிறகு வழியைக் கண்டுபிடிக்க முடியாமல், அங்கேயே இருந்து விட்டது. பல நாட்கள் ஆகியும் அங்கே வேறு எந்த குருவியையும் காணவில்லை. பின்பு சில நாட்கள் கழித்து அங்கு வேறு குருவி தென்பட்டது. முதல் குருவி “என் பெயர் மணி. உன் பெயர் என்ன?” என்று கேட்டது.

அதற்கு இரண்டாம் குருவி “முதலில் எனக்குத் தாகமாய் இருக்கிறது. இங்கு எங்காவது தண்ணீர் இருக்கிறதா?” என்று கேட்டது. “ஓ இருக்கிறது, என்னுடன் வா, நான் கூட்டிச் செல்கிறேன்” என்று கூறி, இருவரும் சேர்ந்து பறந்து சென்று தண்ணீர் இருக்கும் இடத்தைப் பார்த்து,  தாகம் தீரக் குடித்துவிட்டு “என் பெயர் செழியன்” என்றது.

“சரி வா, நாம் மரத்திற்குப் போவோம். கீழே இருந்தால் ஆபத்து.” என்று பறந்து சென்று தன் கூட்டில் அமர்ந்தது. மணி, செழியனிடம் “நீ எப்படி தனியாக இருக்கிறாய்? உன்னுடன் யாரும் இல்லையா?” என்று கேட்டது.அதற்கு செழியன் “ஆம், நான் வழிதவறி இங்கு வந்துவிட்டேன்” என்று தன் கதையைக் கூறியது.

மாலை ஆனவுடன் இரண்டுக்கும் ஒரே பசி. மணி “எனக்குப் பசிக்கிறது,  நீ பலநாட்களாக இங்கே இருக்கிறாய். இங்கே உனக்கு ஏதாவது சுவையுள்ள பழங்கள் கொண்ட மரம் எங்கே இருக்கிறது என தெரியுமா?” என்றது.

“இந்த மரத்திற்குப் பின்னால் சென்று வலது பக்கம் திரும்பி, இடது பக்கம் திரும்பினால் அங்கே மாமரம் ஒன்று இருக்கும். வா போகலாம்” என்றது. மணியும் செழியன் சொன்ன வழியிலேயே அதன் பின்னால் சென்றது. இருவரும் மாம்பழங்களை வயிறார உண்டார்கள்.

இவர்கள் இருவருமே ஆண் குருவிகள் என்பதால் முட்டை போட்டுக் குஞ்சு பொரிக்க முடியாது. திடீரென்று மணி அதிர்ச்சியடைந்தது. ழியனைக் கூப்பிட்டது.

“செழியன்! இங்கே பார்! நாம் வருவதற்கு முன்பே ஏதோ ஒரு பறவை இந்தப் பழத்தில் உள்ள கால்வாசியைத் தின்றுவிட்டது!” அதற்குச்  செழியன் “அட ஆமா! மூன்று பக்கங்களும் சுவர்களால் மூடப்பட்ட இடத்தில் வளர்ந்திருக்கும் இந்த மரத்தைப் பற்றி என்னைத் தவிர வேறு எந்தப் பறவைக்கும் தெரியாது என்று நினைத்தேன். எப்படித் தெரிந்திருக்கும்?” என்றது.

அதற்கு மணி “வா, எதற்கும் இந்த மரத்தைச் சுற்றித் தேடிப்பார்த்து விடுவோம்!” என்றது.

இருவரும் மரத்தைச் சுற்றித் தேடினார்கள். கிளி ஒன்று கிளை ஒன்றில் சோகமாக அமர்ந்திருந்தது. இருவருமே அந்தக் கிளியைப் பார்த்து வியப்படைந்தார்கள். அந்தக் கிளியும் இவர்களைப் பார்த்தவுடன் மகிழ்ச்சியடைந்தது. செழியன் அந்தக் கிளியிடம் பேச ஆரம்பித்தது. “உன் பெயர் என்ன?” என்று கேட்டது. 

அதற்கு அந்தக் கிளி “என் பெயர் வள்ளி. நான் இந்த காட்டு எல்லையில் மனிதர்கள் வாழும் இடத்தில் வசிக்கிறேன். அங்கே மனிதர்கள் வைத்திருந்த தோட்டங்களில் பல்வேறு பழங்கள் இருந்ததால் நான் மற்றும் என் குடும்பத்தினரும் மனிதர்கள் வாழும் இடத்திலேயே தங்கிவிடலாம் என்று முடிவெடுத்தோம்.

ஒருநாள் கிளி ஜோசியன் ஒருவன், என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று அறிந்து தப்பிக்க முயற்சி செய்யும் முன்பே, என்னைப் பிடித்து ஒரு கூண்டிற்குள் அடைத்துவிட்டான். இப்படியே ஐந்து நாட்கள் ஆகின.

ஒருநாள் அவன் கூண்டிலிருந்த என்னை அவனுக்கு அருகாமையில் வைத்துவிட்டுப் படுத்தான். அப்படியே அசந்து தூங்கிவிட்டான். சரியான நேரத்தில் அம்மாவும், அப்பாவும் வந்து என்னைக் காப்பாற்றினார்கள்.

பிறகு நாங்கள் இந்த மலையைச் சுற்றியிருக்கும் காட்டில் வாழலாம் என்று முடிவெடுத்தோம். பிறகு இந்த மலைக்கு வந்தோம். கடைசியாக இந்த மாமரத்தின் கிளைகளில் நாங்கள் மூவரும் தூங்கினோம். இன்று காலையிலிருந்து என் பெற்றோர்களைக் காணவில்லை.

அவர்களைத் தேடினேன். அவர்கள் கிடைக்கவில்லை. அதனால்தான் நான் சோகமாக இருக்கிறேன்” என்று தன்னைப் பற்றி முழுமையும் விளக்கியது அது.  அவ்வளவு நேரமும் அமைதியாக இருந்த மணி, வள்ளி தன்னைப் பற்றி விளக்கி முடித்தவுடன் பேச ஆரம்பித்தது.

“சரி. இன்னும் சில நேரத்தில் வானம் இருண்டுவிடும். அதற்குள் நாம் இருந்த மரத்திற்கே போய்விடுவோம்” என்றது மணி.

மணி சொன்னது போலவே இருட்டிவிட்டது. கூட்டிற்குச் சென்று மூவரும் உறங்கினர். வள்ளி கனவு கண்டபடி காலால் செழியனை உதைத்தது. உடனே செழியன் விழித்துக் கொண்டது. சலசலவென ஏதோ சத்தம் கேட்டது.

மிகவும் பயந்துபோன செழியன் மணியையும், வள்ளியையும் எழுப்பிவிட்டது.  மணி “என்ன?” என்று கேட்டது. அது  தூக்கக் கலக்கத்தில் இருக்கிறது என்று அதன் கண்களைப் பார்த்தவுடன் தெரிந்தது.

“மணி, இங்கு ஏதோ வினோதமான சத்தம் கேட்கிறது. எனக்குப் பயமாக இருக்கிறது” என்றவுடன் மணி ஆபத்தை உணர்ந்து, “உடனே என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள்.” என்று கூறிப் பறந்து சென்றது.

இருவரும் மணியை பின்தொடர்ந்து சென்றனர். பின் சிறிது தொலைவு சென்று ஒரு மரத்தில் அமர்ந்தது.

அங்கே ஏற்கனவே கட்டியிருந்த கூட்டில் உறங்கின. காலை விழித்தவுடன் வள்ளி மணியிடம் “நேற்று ஏதோ ஆபத்து என்று கூறினாயே, எனக்கு ஒன்றுமே புரியவில்லை. என்ன நடந்தது என்று தெளிவாக சொல்.” என்றது.

அதற்கு மணி “சொல்கிறேன் வள்ளி. அது ஒரு மலைப்பாம்பு. அது பார்க்க உடல் வழவழப்பான கண்ணாடிபோல் அழகாக இருக்கும். அது  மரத்தில் படரும் கொடிபோல் தன் உடலை வளைத்து நெளித்து மேலே நம்மை விழுங்க வந்துகொணடிருந்தது. அதனால்தான் உங்கள் இருவரையும் உடனே பறக்கச் சொன்னேன். அப்போது அனைத்தையும் விளக்க நேரமில்லை.” என்றது.

வள்ளியும், செழியனும் வியப்படைந்து, பெருமுச்சு விட்டனர். மணிக்கு நன்றி கூறினர். அதற்கு மணி “செழியன் என்னை எழுப்பவில்லை என்றால் நாம் அனைவரும் மாட்டிக்கொண்டிருப்போம்.” என்றது.

உடனே செழியன் “வள்ளி கனவு கண்டு என்னை உதைக்கவில்லை என்றால் நானும் உறங்கித்தான் இருப்பேன்” என்று கூறியபின் மூவரும் மகிழ்ச்சியுடன் சிறகுகளால் அணைத்துக் கொண்டனர்.

(நடுவர் கருத்து:-  நல்ல கற்பனையுடன் கூடிய கதையைச் சுவாரசியமாகக் கொண்டு சென்று முடித்தமைக்குப் பாராட்டுகள்! 

விலங்குகளைப் பற்றி எழுதும் போது அஃறிணையில் தான் எழுத வேண்டும். மனிதர்கள் மட்டுமே உயர்திணை.  விலங்கு, பறவை ஆகியவற்றை அவர்கள், இவர்கள் என்று எழுதுவது தவறு.  மூன்றும் மகிழ்ச்சியுடன் சிறகுகளால் அணைத்துக் கொண்டன என்று எழுதுவதே சரி. உங்களுக்கு 8 வயது தான் என்பதால் தொடர்ச்சியாக வாசித்து எழுதும் போது, இந்தத் தவறுகள் தானாக சரியாகிவிடும்.)

அன்பு கதிர் கண்மணி,

கதைப்போட்டியில் ஊக்கப்பரிசு பெற்றதற்குப் பாராட்டுகள்!  தொடர்ந்து கதைப்புத்தகங்களை வாசித்தால், எழுத்து வசப்படும்.  வருங்காலத்தில் சிறந்த எழுத்தாளராகத் திகழ வாழ்த்துகிறோம்!

அன்புடன்,

ஆசிரியர்,

சுட்டி உலகம்.

Share this:

One thought on “நண்பர்கள் – கதிர் கண்மணி (8 வயது)

  1. நன்றி. இந்த போட்டியில் கலந்துகொண்டது எங்கள் மகனுக்கு ஒரு பெரும் ஊக்கமாக அமைந்தது. ஊக்கப்பரிசு பெற்றது மேலும் மகிழ்ச்சி.

Comments are closed.