காணாமல் போன ஐந்து கரடிகள்- ஸ்ரீநிதா சீனிவாசன் (9 வயது)

Kanamal_Karadikal_pic

(சுட்டி உலகமும், லாலிபாப் சிறுவர் உலகமும் இணைந்து நடத்திய சிறுவர்க்கான கதைப்போட்டியில் ஊக்கப்பரிசு பெற்ற கதை)

ஒரு அடர்ந்த காட்டில் ஐந்து கரடிகள் இருந்தன. அவற்றின் பெயர் டிங்கு, பிங்கு, மிங்கு, பங்கு மற்றும் சிங்கு.

அவை மிகவும் வித்தியாசமான கரடிகள். எல்லா கரடிகளுக்கும் தேன் பிடிக்கும் ஆனால் இந்த ஐந்து கரடிகளுக்கும் சாக்லேட் கேக்தான் பிடிக்கும். தேன் கொஞ்சம் கூட பிடிக்காது. காலையில் எழுந்து ஊருக்குள் சென்று குழந்தைகளுடன் விளையாடுவார்கள். ஊரே குழந்தைகளுடைய குரலாலும், கரடிகளுடைய குரலாலும் நிறைந்திருக்கும்.

ஒரு நாள் ஊருக்குச் செல்லும் போது கரடிகள் வழி தவறி வந்து விட்டன. “இப்போது நாம் என்ன செய்யப் போகிறோம்??” என்று கேட்டது மிங்கு. “இந்த இடம் மிக இருட்டாக உள்ளது. நம் வீடு போல் இல்லயே… தட்டான் பூச்சிகள், வண்ணத்துப்பூச்சிகள் கூட இல்லை” என பயத்துடன் சொன்னது பங்கு.

“பயப்படாதீர்கள், நமக்கு ஏதாவது வழி கிடைக்கும்” என்று சொன்னது சிங்கு. சிங்கு சொல்வது சரிதான் என்று மீதி இரு கரடிகள் கூறின. அப்போது கர்ர்ர்ர்ர்ர்….. என ஒரு சத்தம் கேட்டது.

கரடிகள் திரும்பிப் பார்த்தபோது ஒரு புலி அவர்கள் பின்னால் நின்று கொண்டு இருந்தது. அந்தப் புலி அவர்களைத் துரத்த ஆரம்பித்தது. நிறைய தூரம் ஓடிய பின்னர் புலி சோர்ந்து போய் துரத்துவதை நிப்பாட்டி விட்டது.

கரடிகள் நின்ற இடம் ஒரு பெரிய நகரம் போல இருந்தது. அந்த இடம் மிக வித்தியாசமாக இருந்தது. வித்தியாசமாக என்றால் அழகாக இல்லை. அதற்கு நேர் எதிராக இருந்தது. மரங்கள் வாடிப் போய் இருந்தன. சற்று கூட ஒளி இல்லை. அசுத்தமான காற்று, மாசடைந்த மண், அழுக்கான நீர் என இருந்தன.

கரடிகளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. நடந்து கொண்டே இருக்கும்போது ஒரே ஒரு செடி மட்டும் ஆரோக்கியமாக இருந்ததைப் பார்த்தன.

அது சோகமாக இருந்தது. டிங்கு, “செடியே ஏன் சோகமாக இருக்கிறாய்?” என்று கேட்டது. அதற்கு அந்தச் செடி, “உங்களாலேயே பார்க்க முடிகிறது, இந்த இடம் மிக மாசடைந்து போய் இருக்கிறது. மழையே பெய்யவில்லை. எல்லா செடிகளும் மரங்களும் வாடிப்போய் இருக்கின்றன. இந்த இடத்தில் ஆரோக்கியமாக இருக்கும் ஒரே செடி நான்தான். இப்படியே போனால் நானும் வாடி விடுவேன்” என்று சொன்னது. டிங்கு, மிங்கு, பிங்கு, பங்கு அப்புறம் சிங்குவிற்கு இதைக் கேட்டுச் சோகமாக இருந்தது.

“எங்களை மன்னித்து விடு செடியே… எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. நாங்களே தொலைந்து போய் விட்டோம், என்ன செய்வதென்றே தெரியவில்லை.

எங்கள் வீட்டிலிருந்து இருபது கிலோ மீட்டர் ஓடி வந்திருக்கிறோம். இங்கிருந்து வீட்டுக்குத் திரும்பிப் போக ஒரு வரைபடம் கூட இல்லை. குழந்தைகளோடு விளையாட வந்தோம். ஆனல் வழி தவறி விட்டது. அப்போது ஒரு புலி துரத்த ஆரம்பித்து விட்டது.

அதில் ஒரு ஆறு கிலோ மீட்டர் ஓடி இருப்போம்….இல்லை இல்லை ஒரு பதினைந்து…இல்லை இல்லை ஒரு பத்து… இல்லை இல்லை ஒரு பதினெட்டு கிலோ மீட்டர் …. ஆஆ ஆமாம், பதினெட்டு கிலோமீட்டர் ஓடியிருப்போம்.  ஏற்கெனவே வீட்டில் இருந்து ஒரு இரண்டு கிலோ மீட்டர், புலி துரத்த ஒரு பதினெட்டு…மொத்தம் இருபது கிலோமீட்டர். மிகவும் களைப்பாக இருக்கிறது. இப்போது நீ வேற” என்று சொன்னது பங்கு.

இதைக் கேட்ட செடி, இன்னும் சோகமாகி ஓ…ஓ….ஓ…ஓ என அழ ஆரம்பித்தது.

“சரி சரி அழாத…நாங்கள் உனக்கு உதவுகிறோம், நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கரடிகள் கேட்டன.

“கொஞ்ச தூரம் போனால் ஒரு ஆடு மேய்க்கும் சிறுவன் இருப்பான். அவனிடம் கேட்டால் அவன் உங்களுக்கு ஒரு மந்திரக் குளத்தைக் காட்டுவான். அதில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து எங்களுக்கு ஊற்றினால் நாங்கள் பசுமையாக மாறிவிடுவோம்’ என்று சொன்னது செடி.

சரி என்று ஐந்து கரடிகளும் புறப்பட்டன. கொஞ்ச தூரம் கழித்து மாடு மேய்க்கும் ஒரு சிறுவன் இருந்தான். அவனிடம் என்ன நடந்தது என்று சொல்லி மந்திரத் தண்ணீர் கேட்டனர்.

அந்த சிறுவன், “எனக்குப் பசியாக இருக்கிறது, எனக்கு நீங்கள் சாப்பாடு கொண்டு வந்தால் நான் தண்ணீர் தருகிறேன்” என்று சொன்னான். எனவே ஐந்து கரடிகளும் உணவைத் தேடிப் புறப்பட்டன. போகும் வழியில் ஒரு உழவரைப் பார்த்தன.

“உழவர் அண்ணா, எங்களுக்குக் கொஞ்சம் தானியம் தருகிறீர்களா?” என்று கேட்டது மிங்கு. அந்த உழவர், “எனக்குத் தாகமாக உள்ளது, கொஞ்சம் தண்ணீர் கொண்டு வந்தால் தானியம் தருகிறேன்” என்று சொன்னார்.

சரி என ஐந்து கரடிகளும் தண்ணீரைத் தேடிச்சென்றன. அருகிலேயே ஒரு குளம் இருந்தது. “குளமே, எங்களுக்குக் கொஞ்சம் தண்ணீர் தருகிறீர்களா?’ என்று கேட்டன கரடிகள்.

‘உங்களிடம் தண்ணீர் எடுக்க பாத்திரம் இருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள்” என்றது குளம்.

டிங்கு அதன் பையில் எப்போதும் வைத்திருக்கும் ஒரு கிண்ணத்தை எடுத்து குளத்தில் இருந்து தண்ணீர் முகந்து கொண்டது. அதை எடுத்துக் கொண்டு போய் உழவரிடம் கொடுத்தன. உழவர் தண்ணீரைக் குடித்து விட்டு தானியம் கொடுத்தார். கரடிகள் அந்தத் தானியத்தைச் சிறுவனிடம் சென்று கொடுத்தன.

சிறுவன் மந்திரத் தண்ணீர் இருந்த குளத்துக்குக் கூட்டிப் போய் நீர் எடுத்துக் கொடுத்தான். மந்திரத் தண்ணீரைக் கொண்டுபோய் கரடிகள் செடிகளுக்கு ஊற்றின.

சிறிது நேரம் கழித்து செடிகள், கொடிகள், மரங்கள் எல்லாம் பசுமையாக ஆகிவிட்டன. கரடிகளுக்கு நன்றி சொன்னது தண்ணீர் கேட்ட செடி.

எல்லா மரங்களும் பசுமையானவுடன் தூசிகள் விலகி, கரடிகளின் வீட்டுக்குச் செல்லும் வழி தெரிந்தது. செடி நண்பனுக்கு டாட்டா சொல்லி விட்டு கரடிகள் மகிழ்ச்சியுடன் வீட்டுக்குத் திரும்பின.

(நடுவர் கருத்து:-  நல்ல கற்பனையுடன் கூடிய கதையைச் சுவாரசியமாகச் சொன்னதற்குப் பாராட்டுகள்!  .

மனிதர்கள் மட்டும் தான் உயர்திணை; விலங்குகள் அஃறிணை.  கரடிகள் விளையாடுவார்கள் என்று சொல்லக்கூடாது. அவர்கள் விளையாடுவார்கள் என்பதற்குப் பதில், அவை விளையாடும் என்றே சொல்ல வேண்டும்).  

அன்பு ஸ்ரீதா சீனிவாசன்!

தொடர்ந்து கதைப் புத்தகங்களை வாசித்து எழுதி, உங்கள் எழுத்துத் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்.  வருங்காலத்தில் சிறந்த எழுத்தாளராகத் திகழ எங்கள் வாழ்த்துகள்!

அன்புடன்,

ஆசிரியர்,

சுட்டி உலகம்.

Share this: