பூமித்தாயின் குமுறல் – – ஜீ-மைத்ரேயி (12 வயது)

poomithayin_Kumural_story

(சுட்டி உலகமும், லாலிபாப் சிறுவர் உலகமும் இணைந்து நடத்திய கதைப்போட்டியில் ஊக்கப்பரிசு பெற்ற கதை)

 “நமது பூமித்தாய் எப்பொழுதும் பசுமையாகவும், மிக அழகாகவும் கண்களுக்குக் காட்சி தரும். கொஞ்ச நாட்களாக அப்படி இல்லை. ஏன் என்று புரியவில்லை?” என்று கோபியும், அபிராமியும் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

இவர்கள் இருவரும் சிறந்த நண்பர்கள். ஒன்றாக விளையாடுவார்கள். ஒரே வகுப்பு, ஒத்த வயது உடையவர்கள். இருவரின் வீடும் அருகருகே இருக்கின்றன.    

கோபிக்குக் காலை முதல் இரவு வரை விளையாடிக் கொண்டே இருப்பதே மகிழ்ச்சி. அபி எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டே இருப்பாள்.

அவ்வாறு ஒரு நாள் பேசும்போது தான் “இப்பொழுது எல்லாம் ஏன் இவ்வளவு வெயில் காய்கிறது?” எனக் கோபியின் தாத்தாவிடம் கேட்டாள் அபி. கோபி “ஆமா சொல்லுங்கள் தாத்தா” என்றான்.

தாத்தா “நான் சிறுபிள்ளையாக இருந்தபோது.. 1942 ஆம் ஆண்டு பிறந்தேன்” என தாத்தா ஆரம்பித்தார்.

“அப்பொழுது எல்லாம் வீடு இது போல உயர்ந்து காணப்படாது. எங்க  வயதில் உள்ளவர்களுக்கு AC, Fridge இது எதுவும் அப்போது கிடையாது. இயற்கையான முறையில் எளிய முறையில் நாங்கள் வாழ்ந்தோம் ஆகையால் பூமித் தாய்க்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆகையால் அப்பொழுது மகிழ்ச்சியாக காணப்பட்டாள்.

மழை மும்மாரி பெய்ததால், தாவரங்கள், விலங்குகள், செழித்து வளர்ந்தன. மக்களுக்கு இடையே போட்டி பொறாமையின்றி, ஒற்றுமையாக ஒன்று கூடி வாழ்ந்தார்கள். ஆனால் இப்பொழுது நாகரிக வளர்ச்சியின் காரணமாக வாகனங்கள் (வாகன புகை ஓசோன் மண்டல பாதிப்பு), அடுக்குமாடி குடியிருப்பு காரணமாகக் காற்றோட்டம் குறைவு ஏற்படுகிறது.

எண்ணிலடங்காத் தொழிற்சாலைகள் இருப்பதால், சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை, இந்த காலத்தில்” என்று சொல்லிவிட்டுத் தாத்தா உள்ளே போனார்.

அப்பொழுது கோபியும், அபியும் “நமக்கும் இயற்கையான காற்று, தூய்மையான நீர் வேண்டும்” என பேசிக் கொண்டு இரவு தூங்கச் சென்று விட்டனர்.

அபியின் கனவில் பூமித்தாய் வந்து “அனைத்து உயிர்களைத் தாங்கும்  எனக்கு இந்த அவல நிலை” என அழத் தொடங்கியது. இதைக் கண்ட அபியும், கோபியும் “நாங்க உங்களுக்கு உதவி செய்கிறோம்” என வாக்குறுதி கொடுத்தார்கள்.

திடீரென்று எழுந்து பார்த்தால் இவை அனைத்தும் கனவு என அபிக்குப்  புரிந்தது. காலையில் பள்ளிக்குச் செல்லும் வழியெல்லாம் கோபியிடம் இரவில் கனவில் நடந்ததையும், வாக்குறுதி கொடுத்ததையும், அதை எப்படி நிறைவேற்றுவது எனவும் பேசிக் கொண்டே போனாள்.

 கோபி ஆசிரியரிடம், “பூமித் தாயை இயற்கை முறையில் பாதுகாக்க என்ன வழி?” என்று கேட்டான்.   

அதற்கு ஆசிரியர், “சொல்கிறேன் கேள். அனைவரும் கேளுங்கள். அதை அனைவரும் கட்டாயமாகச் செயல்படுத்த வேண்டும்” எனச் சொன்னார்.

 “சரி சரி” என அனைவரும் தலையாட்டினார்கள்.

  “நாம் கண்டிப்பாக வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும். நெகிழியை கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது. குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை எனப் பிரித்துப் போட வேண்டும். சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் இருக்க வாகனங்களைக் குறைவாக, தேவைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். இயற்கை உரங்களை மட்டுமே பயிர்களுக்குப் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் மண் மலட்டு தன்மையை அடையாது. ஆழ்குழாய்க் கிணறு அதிகமாக போடக்கூடாது. அதனால் பூமியில் நீரின் தன்மை குறைகிறது.”

ஆசிரியர் கூறக்கூற, அனைத்து மாணவர்களும் புதிதாய்ப் பார்த்துக்கொண்டே இருந்தார்கள். அப்பொழுது கோபி எழுந்து, “சார், இது எல்லாம் செய்தால் பூமி அழுவது நிறுத்துமா?” எனக் கேட்டான்.

  “அப்படியில்லை! இவை அனைத்தும் நாம் அனைவரும் பின்பற்றினால் வறட்சி நீங்கிப் பசுமையாகக் காணப்படும்.”

கோபியும், அபியும், மட்டுமில்லாமல் அனைத்து மாணவர்களும் உறுதிமொழி எடுத்தார்கள்.

        “பூமித்தாயைப் பாதுகாப்போம்”     

        “பசுமையைப் பேணுவோம்”     

        “சுற்றுச்சூழலைக் காப்போம்”

  “உறுதி எடுத்தது மட்டுமில்லாமல் அதையே பின்பற்ற அனைவரும் முயற்சி செய்யவேண்டும்” என்று ஆசிரியர் கூறினார்.

இதைக்கேட்ட அபிக்கு அளவற்ற மகிழ்ச்சி. “பூமித்தாயின் குமுறல்  தவிர்ப்போம்” என கோபியிடம் கூறிக்கொண்டே மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தாள் அபி.

(நடுவர் கருத்து)

சுற்றுச்சூழல் காப்பது பற்றிய நல்ல கருவை எடுத்துக் கொண்டு சிறப்பாக்க் கதை எழுதியதற்குப் பாராட்டுகள்!  ஆனால் நடை எளிமையாக இல்லாமல் கடினமாக இருக்கின்றது.  சிறுவர்கள் வாசிப்பதற்கேற்றவாறு தெரிந்த சொற்களுடன் நடை எளிமையாக இருக்க வேண்டும்).

அன்பு மைத்ரேயி,

கதைப்போட்டியில் ஊக்கப் பரிசு பெற்றமைக்குப் பாராட்டுகள்!  தொடர்ந்து கதைப்புத்தகங்கள் வாசித்தால், எழுத்து வசப்படும்.  வருங்காலத்தில் சிறந்த எழுத்தாளராகத் திகழ எங்கள் வாழ்த்துகள்!

ஆசிரியர்

சுட்டி உலகம்.       

Share this:

One thought on “பூமித்தாயின் குமுறல் – – ஜீ-மைத்ரேயி (12 வயது)

  1. வாழ்த்துக்கள் ஜீ-மைத்ரேயி,

    தொடக்கம் முதல் கடைசி வரை தொய்வில்லாமல் ரசிக்கும்படி ஒரு கதையை படைத்ததற்கு.. தொடர்ந்து எழுதுங்கள்.

    அன்புடன்
    கண்மணி தமிழ்ச்செல்வி

Comments are closed.