மீனாவின் துணிச்சல் – பி.கீ.பிரணவி (8 வயது)

Meenavin_Thunichal_pic

(சுட்டி உலகமும், லாலிபாப் சிறுவர் உலகமும் இணைந்து நடத்திய சிறுவர்க்கான கதைப்போட்டியில் ஊக்கப் பரிசு பெற்ற கதை)

  “அம்மா, போயிட்டு வர்றேன்” மீனாவின் குரலுக்கு அம்மா கவிதா “சரிம்மா பத்திரமாகப் போய் வா..” என்று பதில் குரல் கொடுத்தபடியே, வெளியே வந்தார்.

மூன்றாம் வகுப்பு படிக்கும் மீனா பள்ளிக்கு செல்லத்தான் கிளம்பிக் கொண்டிருந்தாள்.  மிகவும் புத்திசாலியான மீனா, வீட்டில் இருந்து சிறிது தொலைவில் உள்ள பள்ளிக்கு, தானே சென்று விடுவாள். வருவதும் அப்படித்தான்.

ஒரு மாதம் மட்டுமே அவள் தந்தை விஜயன் அழைத்துச் சென்று வந்தார். பின்னர் அவர் பின்னால் வர மீனாவே முன்னால் செல்லப் பழகி, இப்போது தன்னம்பிக்கையோடு அவளே சென்று வரும் அளவிற்கு, முன்னேறி விட்டாள்.

அவளின் தந்தை அவளுக்குப் படிப்புடன் தற்காப்புக்கலை கற்றுக் கொள்ளச் செய்ததால், தைரியத்துடன் எதையும் எதிர் கொள்ளும் திறமையும் இருந்தது அவளுக்கு!

இன்று அவள் பள்ளி செல்லும் வழியில், ஒரு குழந்தை அழுதபடியே நிற்க, அந்தக் குழந்தையின் அருகில் ஒரு முரட்டுத்தனமான ஆள் நின்று மிரட்டிக் கொண்டிருந்ததைக் கண்டாள்.

அந்தக் குழந்தை அவள் பள்ளி செல்லும் வழியில் மரத்தடியில் அமர்ந்து பாசி மணிகள் விற்பவரின் அருகில் அமர்ந்திருப்பதை, அடிக்கடி மீனா பார்த்திருக்கிறாள்.

இந்த ஆள் யார்? எதற்காக இந்தக் குழந்தையை மிரட்டுகிறார் என்று தோன்றியது அவளுக்கு.

உடனே அந்த குழந்தையின் அருகில் சென்று “பாப்பா.. அம்மா எங்கே? ஏன் தனியாக வந்தாய்?” என அவள் கேட்டாள்.

இவளைப் பள்ளி செல்லும் வழியில் அடிக்கடி பார்த்துப் பழகி, டாட்டா காண்பித்து விளையாடி இருந்த அந்த குழந்தை, இவளைப் பார்த்த உடனே லேசாக சிரிக்க, அருகில் நின்ற அந்த முரட்டு ஆள், “ஏய்… யார் நீ?” எனக் கத்தியபடியே மீனாவின் அருகில் வந்தான்.

மீனாவோ சற்றும் பதட்டப்படாமல், “நீங்கள் யார்? உங்களை இதற்கு முன் நான் பார்த்ததேயில்லையே.. பாப்பாவுக்கு நீங்கள் என்ன வேண்டும்?” என்று தொடர்ந்து கேள்விகள் கேட்க, அந்த முரடன் வெகுவாக பதட்டமாகிப் போனான்.

அதற்குள் குழந்தையைத் தேடிக் கொண்டு, அவள் பெற்றோர்களும் வந்து விட, முரடன் அந்தக் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்ட ஆரம்பித்தான்.

ரோட்டில் சென்று கொண்டிருந்த அனைவரும் திகைத்து நின்றனர். அந்தக் குழந்தையின் பெற்றோர்கள் வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தனர். சிலர் காவல்துறைக்குத் தெரிவிக்க முயற்சி செய்தனர்.

மீனாவின் வீட்டிற்கு சிறிது தொலைவில் தான் இச்சம்பவம் நடந்தது. வீட்டின் அருகே பெரும் சத்தம் கேட்டு, மீனாவின் தாய் கவிதாவும் வெளியே வந்தார்.

மகளும், மகளுக்கு அருகே நிற்கும் குழந்தையும் ஆபத்தில் இருப்பது கண்டு அவர் பதட்டமடைந்தாலும், மீனாவைக் கண்களாலேயே கவலை கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.

பின்பு மீனாவிடம் கண்களாலேயே கீழே இருக்கும் கற்களை எடுத்து தாக்குமாறு ஜாடைகாட்ட, மீனா தாயின் கண் அசைவுகளைப் புரிந்துகொண்டு, மின்னல் வேகத்தில் கீழே குனிந்து பெரிய கல் ஒன்றை எடுத்து அந்த முரடன் முகத்தை நோக்கி வீசினாள்.

அந்தக் கல் மிகச் சரியாக முரடனின் முகத்தைத் தாக்கிக் காயத்தை ஏற்படுத்தி இரத்தம் வரச் செய்ய, அவன் கையில் இருந்த கத்தியையும், குழந்தையையும் விட்டு விட்டான்.

உடனேயே அருகில் இருந்த மற்றவர்கள் அந்த முரடனை மடக்கிப் பிடிக்க, போலீசாரும் வர பிரச்சினை முடிந்து, குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.

அனைவரும் மீனாவின் துணிச்சலையும், புத்திக்கூர்மையையும் பாராட்டினார்கள்.  கவிதா பெருமிதத்துடன் மகளை அணைத்துக் கொண்டார்.

நடுவர்களின் கருத்து:-

குழந்தைகளின் பாதுகாப்புக்கு அதிக அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கும் தற்காலத்தில் அது குறித்த கருவைத் தேர்வு செய்து கதை எழுதியமைக்குப் பாராட்டுகள்!  மேலும் தற்காப்பு கலையைக் கற்றுக் கொண்டு பெண் குழந்தைகள் தைரியமாக இருக்க வேண்டும் என்ற கருத்தையும் இக்கதை விதைப்பதற்கு மேலும் பாராட்டுகள்!

அன்பு பிரணவி!

கதைப் போட்டியில் ஊக்கப்பரிசு பெறுவதற்குப் பாராட்டுகளும், வாழ்த்துகளும்!  மேலும் வாசித்துத் தங்கள் எழுத்துத் திறமையை வளர்த்துக் கொண்டு தொடர்ந்து எழுதுங்கள்.  வருங்காலத்தில் சிறந்த எழுத்தாளுமையாகத் திகழ வாழ்த்துகிறோம்!

அன்புடன்

ஆசிரியர்

சுட்டி உலகம்.  

Share this:

5 thoughts on “மீனாவின் துணிச்சல் – பி.கீ.பிரணவி (8 வயது)

  1. மனமார்ந்த நன்றிகள். நிச்சயமாக நல்ல முறையில் குழந்தைகளை ஊக்கப்படுத்துவோம். மேன் மேலும் பிரணவ் மற்றும் பிரணவி வளர இது ஒரு நல்ல தூண்டுகோலாக அமையும். நன்றியுடன் இருவரின் தாய். நன்றி, வணக்கம்.

    1. மிக்க நன்றி. தங்கள் குழந்தைகள் இருவருக்கும் எங்கள் வாழ்த்துகள்!

  2. வாழ்த்துக்கள் செல்லம் நல்ல கதை வாழ்க வளமுடன்

    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி!

  3. அருமையான கதை.எங்க பாட்டி சொல்லும் கதை போலவே இருந்தது.

Comments are closed.