அனுபவம் – மா.கிருத்திக் (15 வயது)

Anupavam_story_pic

(சுட்டி உலகமும், லாலிபாப் சிறுவர் உலகமும் இணைந்து நடத்திய சிறுவர்க்கான கதைப்போட்டியில் ஊக்கப்பரிசு வென்ற கதை) 

அம்மா நேரமாயிருச்சுனு குரல் கொடுக்க, காலை எழுந்து பல் துலக்கி குளித்து, பிடித்தால் சாப்பிட்டு, மதிய சாப்பாட்டைக் கையில் எடுத்துக் கொண்டு, புத்தகப் பையை முதுகில் போட்டுக் கொண்டு சாலை ஓரத்தில் நின்றால் பள்ளி பேருந்து வந்தவுடன் அதில் ஏறி அமர்ந்து பள்ளி செல்லும் வரை வகுப்புத் தோழர்கள் சிறு பையன்களோடு முந்தைய நாள் வீட்டுப் பாடம், கிரிக்கெட் டெஸ்ட் ரிசல்ட், சினிமா அல்லது வேறு கதை பேசியபடி பள்ளி சென்று ஒரு வகுப்பு திட்டு, ஒரு வகுப்பு பாராட்டு வாங்கி, மதிய  உணவைப் பங்கு போட்டுச் சாப்பிட்டு, விளையாட்டு நேரத்தில் செல்லச் சண்டை போட்டு வீடு திரும்பிய கனாக்காலம், கொரோனாவுக்கு முந்தைய  சராசரி பள்ளி வாழ்க்கை.

கொரோனா வந்த பிறகு, ஆரம்பத்தில் விடுமுறை நாளில் படம் பார்க்க, வித விதமாகச் சமைத்துச் சாப்பிட இனிமையாக நாட்கள் சென்றன. நாளடைவில் ‌யாரையும் பார்க்காமல், எங்கேயும் போக முடியாத, விளையாட முடியாத வீட்டுச் சிறை வாழ்க்கை மிகவும் கொடுமையாகத் தெரிந்தது.

உடல் உழைப்பு இல்லாமல், சாப்பிடப் பிடிக்கவில்லை. என்ன, இப்படி இளைச்சு போயிட்டேனு கேட்கும்படி உடல் மெலிந்தது. இணைய வழிக் கல்வி தலைவலியாக மாறியது. கண்ணில் நீர் வடிய கையில் கைபேசியை எடுக்கப் பயமாக இருந்தது. தொலைக்காட்சியில் எப்போதும் நோய்ப் பரவல் தகவலாக வர‌, ஒரு கட்டத்தில் பார்க்கப் பிடிக்கவில்லை.

இந்த நேரத்தில் புது வரவாக நியூ ஜெர்சியில் இருந்து வந்தான் அனீஸ். என் வயதுத் தோழன். பிறந்ததில் இருந்தே அமெரிக்க வாசம். இந்தியாவிற்கு விடுமுறைக் காலத்தில் வருவதும் தெரியாமல், போவதும் தெரியாமல் வந்து சென்றவன். இந்தியக் கலாச்சாரம், பழக்க வழக்கம் அவ்வளவாகத் தெரியாது. அவன் பெற்றோர் இருவரும் பணிபுரிபவர்கள்‌.

வீட்டிற்கு வருபவர்களை முகம் மலர்ந்து ‘வாங்க’ என வாய் நிறைய அழைத்து, அவர்களுக்குக் குடிக்க நீர், தேநீர், ஸ்நாக்ஸ், உணவு என்று பரிமாற, அவன் வெகுவாக ஆச்சரியப்பட்டுப் போனான். இந்தியா விருந்தோம்பலில் கோடீஸ்வர நாடு எனப் புகழ, என் நாட்டைப் பற்றிய அவனின் எண்ணம் என்னைப் பெருமை கொள்ள வைத்தது.

என்னுடைய அத்தனை சங்கடங்களும் மறந்து போய் சந்தோஷமாக மாறியது. வீட்டிற்குள் விளையாடிய தாயம், பல்லாங்குழி, மூனு கல், பாண்டி, பச்சக்குதிரை, பட்டம் விடுதல், பம்பரம் விடுறது எல்லாம் நாங்களே கொஞ்சம் மறந்து போன விளையாட்டு. அனீஸுக்கு! கேட்கவே வேண்டாம்! அவனுக்கு எல்லாம் ஆச்சரியம். அதைவிட தெரிந்து‌ கொள்ளும்‌ ஆர்வம் அதிகம். அவனுடைய‌ உற்சாகம் எங்களை மட்டும் அல்ல‌, எங்கள் தெரு பாட்டி தாத்தாவையும் தொற்றிக்‌ கொண்டது.

காரமே சாப்பிடாதவன் என்னுடன் சேர்ந்து இட்லிக்கு மிளகாய் சட்னி தொட்டுச் சாப்பிடப் பழகி விட்டான். கமர்கட், தேன்மிட்டாய், எலந்த வடை‌ என்று ‌அவனுடைய ஸ்நாக்ஸ் மாறியிருந்தது. பாத்டப்பில் குளித்தவன் இப்போது நீச்சல் பழகி விட்டான். என் நண்பன் அவன். சற்றே ஊரடங்கு தளர்வு‌ கிடைக்க, நாளெல்லாம் கையில் மட்டை பந்து எடுத்துக் கொண்டு வெயிலைப் பற்றிக் கவலைப்படாமல் பேட்டிங், பவுலிங் என மாஸ் காண்பித்தோம்.

முதல் நாள் மண் புழுதி பார்த்துத் தயங்க, “நீங்க வாரக் கடைசி நாளில் சூரியக் ‌குளியல் என்று கடற்கரையில் ‌படுத்து இருப்பீர்கள். எங்களுக்கு தனியாக‌த் தேவையில்லை” என்ற விளக்கம் அனீஸுக்குப் புரிந்தது.

என்னுடனே அவனும் இணைய‌வழியில் பாடங்கள் கேட்டான். நான் ஆங்கில வழிக் கல்வி பயின்றதால் அவனால் ‌புரிந்து கொள்ள முடிந்தது. வாழை மரத்தின் நுனியில் கூடு கட்டி முட்டை இட்டிருந்த தேன்சிட்டு குஞ்சுகளைப் பூனையிடம் இருந்து காப்பாற்றியதை ‌நாளெல்லாம் சாதனையாக எல்லோரிடமும் பறை சாற்றினான். இதற்கு முன் பலமுறை செய்தது, இப்போது மிகவும் பெருமையாக இருந்தது.

நானும் வீட்டிற்கு ஒரே பிள்ளை. அவனும் அப்படியே! எங்களுக்குச் சீக்கிரம் மற்றவர்களோடு சேர்ந்து விளையாடுவது பழகுவது கடினம். ஆனால் ஆரம்பத் தயக்கம் விலகி பழகி விடுவேன். நண்பர்களோடு ஒரே தட்டில் சாப்பாடு பங்கு போடுவது எனக்கும் கொஞ்சம் சிரமம்தான். உடன் பிறந்த தம்பி தங்கை இல்லையே என்ற ஏக்கம்‌‌ இருப்பதுண்டு. ஆனால் அதுவே பழகிப் போனது. நண்பன் அனீஸ் என் ஏக்கத்தைத் தீர்த்தான். இருவரும் அழகான புரிதலோடு பழகினோம். ஒருவர் சிந்தனையை மற்றவர் செயல்படுத்த முடிந்தது. பதின்பருவ சிந்தனை, சந்தேகம் எல்லாம் இருவரும் தயக்கம் இல்லாமல் பேச முடிந்தது. அம்மா அப்பாவிடம் பேச முடியாததை அண்ணன் தம்பி அல்லது நண்பனோடு‌ பேசலாம். எனக்கு அனீஸுடன் மனதளவில் நல்ல புரிதல் உண்டானது.

ஒரே பையன், ஒரே பொண்ணு என்பது பெற்றோரின் வளர்ப்புக்கு எளிதாக இருக்கலாம். ஆனால் ஒரே குழந்தைகள் இயல்பாக மற்றவரோடு பழக மிகவும் சிரமம். என் அம்மா, அப்பா அதிகம் படிக்காதவர்கள். எனக்குச் சத்தமாக சங்கீதம் கேட்கப் பிடிக்கும். அப்பாவுக்குப் பேசுவது கூட சத்தமாக பேசக்கூடாது.

எனக்கு ராக் படங்கள் பார்ப்பது பிடிக்கும். அதுவும் சினிமா தியேட்டர் சென்று பார்க்க ஆசை. உடன் வர யாரும் தயாராக இல்லை. ஊரடங்கு தளர்வு கிடைத்த பின் அனீஸுடன் ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் தியேட்டரில் ரசித்துப் பார்த்தேன். தொலைக்காட்சிப் பெட்டியில் இருவரும் சேர்ந்து பத்துலு கார்ட்டூன் தொடர் பார்த்தோம்.

பீட்சா இருவரும் பங்கு போட்டு சாப்பிட்டோம். ஷவர்மா, கிரில் சிக்கன் எல்லாம் கடைகளில் அனீஸ் பெற்றோருடன் சாப்பிட்டோம். எனக்குப் பிடித்த கம்மங்கூழ் அம்மா செய்து தர, மோர் மிளகாய் கடித்துக் கண்ணில் நீர் வழிய, மூக்கை உறிஞ்சிக் குடித்தான் அனீஸ். ராகிக் கூழில் நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து பால் விட்டு தர‌, சப்புக்கொட்டிக் குடித்தோம் இருவரும்.

நாட்கள் சந்தோஷமாக உருண்டோட, அமெரிக்காவில் நோய் குறைந்து டிரம்ப் மாறி‌ ஜோபைடன் ஆட்சிப் பொறுப்பேற்க இரண்டு டோஸ் தடுப்பு ஊசி செலுத்திய வெளிநாட்டினர் வேலைக்கு வரலாம் என்ற அறிவிப்பு வெளியாக, அனீஸின் தாய், தந்தை பொருளீட்ட மீண்டும் தயாராயினர். இப்போது எனக்கும், அனீஸிற்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை.

நோய்த் தொற்று காலத்திற்கு முன்பு குழந்தைகள் தாத்தா பாட்டி வீட்டில் வளர்வது சாதாரண நிகழ்வு. ஆனால் இப்போது உள்ள கடினமான சூழ்நிலை ‌யாரும் தைரியமாக முடிவு செய்வது கடினம். கால மாற்றத்தால் அனீஸ் பெற்றோர் உடன் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தான்.

கொரோனா எத்தனையோ பாதிப்பை ‌ஏற்படுத்தி‌ இருந்தாலும், எங்களுக்கு நல்ல மாற்றத்தைத் தந்தது. எங்கிருந்தோ வந்தவன் தந்த நட்பு, எனக்குப் புத்துணர்ச்சி தந்தது.

இருவரும் அருகே இல்லா விட்டாலும் எங்கள் நட்பு நாடு தாண்டி, கடல் கடந்து தொடரும். அவன் மீண்டும் இந்தியா, தமிழகம் வரும் நாளை‌ எண்ணிக் காத்திருப்பேன். எனக்குப் படிக்க, பணி புரிய வாய்ப்புக் கிடைத்தால் நான் அங்கு சென்று என் நண்பனைக்‌ காண்பேன். நட்புக்கு இல்லை நாடு மொழி பேதம் எல்லாம்.

(நடுவர் கருத்து:-

கொரோனாவால் பள்ளி செல்ல முடியாமல், நண்பர்களுடன் ஜாலியாகப் பொழுதைக் கழிக்க முடியாமல், வீட்டுச்சிறையில் மாட்டிக் கொண்ட ஒரு பையனின் மன உணர்வுகளையும், அமெரிக்காவிலிருந்து வந்த சமவயது பையனுடன் ஏற்பட்ட நட்பையும், பிரிவையும் அருமையாகவும், நெகிழ்ச்சியாகவும் வெளிப்படுத்தும் கதைக்குப் பாராட்டுகள்! 

நடை எளிமையாக இல்லாதது பெருங்குறை!   முதல் பத்தி முழுவதும் ஒரே வரியில் அமைந்துள்ளது!  சிறுவர்களுக்கு எழுதும் போது, வாசிப்பதற்கு எளிதாகச் சின்ன சின்ன வாக்கியங்களாக எழுதுவது, மிகவும் முக்கியம்)

“அன்பு கிருத்திக்!

“நான் ஆங்கில வழிக் கல்வி பயில்கிறேன். நண்பனோடு நான் கொண்ட நட்பைச் சொல்ல, அம்மா கோர்வையாக எழுதிக்கொடுத்தார்கள்” என்று நேர்மையுடன் உண்மையை நீங்கள் எழுதியிருந்தது, மிகவும் வரவேற்கத்தக்கது.  கற்பனை கலந்து நீங்கள் சொன்னதற்கே இந்த ஊக்கப்பரிசு!

வருங்காலத்தில் தமிழில் படிக்கவும், எழுதவும் கற்றுக் கொண்டு நீங்களே கதைகளைக் கோர்வையாக எழுத வேண்டும்.  சரியா?  தமிழ்க் கதைகளைத் தொடர்ச்சியாக வாசித்தால், அது சாத்தியமே. உங்களுக்கு எங்கள் அன்பான வாழ்த்துகளும், பாராட்டுகளும்!    

அன்புடன்,

ஆசிரியர்,

சுட்டி உலகம்.

Share this:

2 thoughts on “அனுபவம் – மா.கிருத்திக் (15 வயது)

  1. என்னுடைய கருத்திற்கு ஊக்கம் தந்த சுட்டி உலகம் இணைய தளத்துக்கு மிகவும் மகிழ்ச்சி கலந்த நன்றி.

  2. நாங்களும் இவ்வாறு குதூகலமான நட்போடு தான் இருந்தோம். பள்ளிக் காலங்களில். அருமை தம்பி வாழ்த்துக்கள்

Comments are closed.