பைரவனின் பராக்கிரமம் – பி.கீ.பிரணவ் (8 வயது)

Bhairavanin_Parakiramam_pic

(சுட்டி உலகமும், லாலிபாப் சிறுவர் உலகமும் இணைந்து நடத்திய சிறுவர்க்கான கதைப்போட்டியில் ஊக்கப்பரிசு பெறும் கதை)

அது மிகவும் வித்தியாசமான உலகம்! சாதாரண அணில் கூட மிகவும் பெரியதாக மூன்று அடிக்கு மேல் இருக்குமாம்! அப்படியானால் புலி, சிங்கம், கரடி எல்லாம் எவ்வளவு பெரிதாக இருக்கும்?

அந்த இடத்திற்குச் சிங்கம்தான் ராஜா!  ஆனால், ஒவ்வொரு முறையும் போட்டி ஒன்றை வைத்துத் தான் ராஜாவைத் தேர்ந்தெடுப்பார்கள். அது சாதாரண போட்டி அல்ல. மிகவும் கடுமையாக இருக்கும்.

சிங்கங்களில் பலசாலியானவை மற்றும் புத்திசாலியானவை, இதில் கலந்து கொள்ளும்.  முதல் போட்டி, குஸ்தி போட்டி! அந்தப் போட்டியில் மூன்று சிங்கங்களைக் கட்டாயம் வெல்ல வேண்டும்.

இரண்டாம் சுற்று, ஓட்டப் பந்தயம்! மூன்றாம் சுற்று, மூளைக்கு வேலை!

இதில் ஏற்கனவே தலைவராக இருக்கும் பைரவன் சிங்கம்தான் வருடா வருடம் வெற்றி பெற்று, இந்த விலங்குகள் உலகை ஆண்டு வருகிறது.

எப்படியாவது இந்த முறை அதைத் தோற்கடிக்க வேண்டும் என்று கருப்பன் சிங்கமும், அதன் கூட்டமும் முயற்சி செய்கிறது.

பைரவன் சிங்கம், இரண்டு கால்களில் மட்டுமே நடக்கும். மற்றைய இரண்டு கால்களும் மனிதர்கள் கைகளாகப் பயன்படுத்துவதைப் போன்று பயன்படுத்தும் ஆற்றல் கொண்டது. மிகவும் திறமை வாய்ந்தது!

ஏனைய விலங்குகளும் அந்த வித்தியாச உலகில் இருகால்களில் நடக்கும் ஆற்றல் வாய்ந்தவைதான்.  ஒட்டகச்சிவிங்கி தான் குஸ்தி போட்டியில் நடுவராக பங்கேற்கிறது.

குஸ்தி போட்டிக்காகப் பிரமாண்டமான பெரிய மேடை போடப்பட்டு, பார்வையாளர்கள் அமரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இவை அனைத்தும் மான் பொறுப்பில் நடைபெற்றது.

இரண்டு நாட்களாகப் பெரும் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த பைரவன் சிங்கம் சற்று களைத்தாற்போல் இருந்தது.  அதைப் பார்த்த யானை மாமாவிற்கு சற்று வருத்தமாக இருந்தது!

“மிகவும் நல்ல அரசராக விலங்குகள் உலகை ஆட்சி செய்யும் பைரவன் தோற்று விடக்கூடாது” என்ற எண்ணம் தான், அதற்குத் தோன்றியது. உடனே பைரவனுக்கு சாப்பிட ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தது யானை மாமா முத்து.

அரசர் பைரவனிடம், “தயவுசெய்து நீ உடம்பைப் பார்த்துக் கொள்! நீ சோர்ந்து போனால் நாடு கெட்டவர்கள் கைக்குச் சென்று விடும், நீ புத்துணர்வுடன் இரு பைரவா” என்று கூறியதைக் கேட்டு பைரவன் சிரித்தபடியே “மாமா, நான் பயிற்சி செய்ததால் களைத்துப் போனேன் மற்றபடி நன்றாகவே உள்ளேன்” என்று கூறியது.

“இரண்டு மாதங்கள் பயிற்சி எடுத்துள்ளேன் மாமா… இன்னும் இரண்டு நாட்களில் போட்டி! நீங்கள் கவலைப்படாதீர்கள்” என்றும் யானை மாமா முத்துவிற்கு ஆறுதல் கூறியது, அரசரான பைரவன்.

ஆனால், சமாதானம் ஆகாத யானை மாமா முத்து, “இல்லை பைரவா, கருப்பன் இந்த முறை மிகக் கடும் கோபத்தில் உள்ளான்! ஏதாவது ஒரு வழியில் இந்த விலங்குகள் உலகிற்கு அரசனாக வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளான். அவன் தீய வழியிலும் முயற்சி செய்வான் என்றே தோன்றுகிறது” என்று கூறி முடித்தது யானை மாமா.

 “எனக்கும் அது தெரியும் மாமா அவர்களே, அதற்காகத்தான் நான் நமது மந்திரியான நரி ஞானமூர்த்தியாரை அனைத்தையும் கவனிக்கச் சொல்லி இருக்கிறேன்” என்றது அரசரான பைரவர்.

“நன்றாக மாறுவேடம் பூண்ட நரிக்கூட்டங்கள் கருப்பன் சிங்கம் கூட்டத்தில் புகுந்து உளவு பார்க்க ஆரம்பித்து விட்டன, மாமா அவர்களே! ஆதலால் கவலைகள் வேண்டாம்; வெற்றி நமதே!” என்று பைரவன் கூறியது.

இப்போது தான் யானை மாமாவிற்குச் சற்று நிம்மதியாக இருந்தது. போட்டிக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், மற்றைய ஏற்பாடுகளை கவனிக்க யானை மாமா சென்று விட்டது.

போட்டி நாளும் வந்தது!!

முதலில் கருப்பன் சிங்கம் குஸ்தி போட்டிக்கான கோதாவில் இறங்கியது. இறங்கிய சிறிது நேரத்திலேயே எதிரில் இருந்த சிங்கத்தைத் தலைக்கு மேல் தூக்கி பந்து போல் வீசி எறிந்தது! அடுத்த அரைமணி நேரத்தில் மற்றும் உள்ள இரண்டு சிங்கங்களை வென்று போட்டியில் முதல் ஆளாகத் தேர்வாகி நின்றது.

கருப்பன் சிங்கத்தின் நண்பனான சுமனும், அதில் வென்று நின்றது. மற்றும் ஒரு போட்டியாளராக ஐய்யனார் சிங்கம் வென்று அமர்ந்தது!

ஐய்யனார், முன்னாள் அரசர் பைரவனின் நெருங்கிய நண்பன்.            இப்போது இந்த மூன்று சிங்கங்களையும் முன்னாள் அரசரான பைரவன் சிங்கம் வென்றால் தான் அரசராக முடியும்.

முதலில் கோதாவில் இறங்கிய பைரவன் சிங்கத்துடன் மோத ஐய்யனார் சிங்கம் வர, நண்பர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்க, சீக்கிரமே பைரவன் சிங்கம் வென்றது. அடுத்து சுமன் சிங்கம் பைரவன் சிங்கத்துடன் மோத, மோதல் சற்று கடுமையாகவே இருந்தது. பைரவன் சிங்கம் வென்றாலும் லேசாக அதன் கால்கள் அடிபட்டுவிட்டன.

இனி அது கருப்பன் சிங்கத்துடன் மோத வேண்டும். மோதல் ஆரம்பித்து மிகவும் பயங்கரமாக இருந்தது அது! கர்ஜனை அந்த விலங்குகள் உலகையே அதிர வைத்தது!

மிகவும் கொடூர புத்தி கொண்ட கருப்பன், பைரவனைக் கால் நகத்தால் தாக்கியது. குஸ்தி போட்டிக்கான விதிமுறைகளின்படி அது தவறு, ஆயினும் போட்டியைப் பாதியில் நிறுத்த முடியாத காரணத்தால் எல்லா விலங்குகளும் பரிதவித்தன.

போட்டி நீண்ட நேரம் நடந்தது. பாய்ந்து பாய்ந்து இருவரும் சண்டையிட்டன.  இறுதியில் மிக அதிக காயங்களுடன் பைரவன் சிங்கம் வெற்றி பெற்றது.  கால் நகங்கள் கொண்டு சண்டையிட்டதால் போட்டியில் இருந்து கருப்பன் சிங்கம் விலக்கப்பட்டது.

மற்ற சிங்கங்கள் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ள பைரவன் சிங்கமும் ஓட ஆரம்பித்தது.  அதில் கருப்பனின் ஆட்களை எதிர் கொள்ள வேண்டியது இருந்தது. நாலாபுறங்களிலும் இருந்து பைரவன் சிங்கத்தைத் தாக்க, குரங்குகளின் கூட்டமும், அணில்களின் கூட்டமும் பைரவன் சிங்கத்திற்கு உதவியாக நின்றன.

சோர்ந்து போனாலும் நம்பிக்கை மட்டுமே கொண்டு விடாமுயற்சியுடன் பைரவனே வெற்றி கண்டது.

மூளைக்கு வேலை சுற்றில் நரிகளின் தந்திர வார்த்தைகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் மற்ற சிங்கங்கள் திகைக்க.. அதிலும் பைரவன் சிங்கம் வெற்றி பெற்று, ஒரு மனதாக மீண்டும் அரசராக பொறுப்பேற்றது பைரவன்.

தனது விலங்குகள் உலகிற்கு பாலங்கள் அமைத்து, பசுமை நிறைந்த உலகாக மாற்றி அழகாக ஆட்சி செய்தது அரசரான பைரவன்!!.

(நடுவர்கள் கருத்து:-

‘சாதாரண அணிலே மூன்றடி உயரமிருக்கும்; சிங்கம் மனிதரைப் போல இரண்டு கால்களால் நடக்கும்; இரண்டைக் கைகளாய்ப் பயன்படுத்தும்; அது ஒரு வித்தியாச உலகம்’ என்ற வித்தியாசமான, விநோதமான கற்பனைக்கும், எளிய நடையில் சுவாரசியமான கதை சொல்லலுக்கும் பாராட்டுகள்!

காட்டுக்குச் சிங்கம் ராஜா என்பது காலங்காலமாக நம் கதைகளில் சொல்லப்படுவது. இதை மாற்றி வேறு ஒரு விலங்கை ராஜாவாகவோ அல்லது ராஜாவே இல்லாமல் விலங்குகள் கூட்டாக ஆட்சி செய்யும் காடு என்றோ புதுமையாக யோசித்தால், கதை இன்னும் சிறப்பாக இருக்கும்).  

“அன்பு ப்ரணவ்!

கதைப்போட்டியில் ஊக்கப்பரிசு பெறுவதற்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்! இன்னும் நிறைய வாசியுங்கள்.  வாசிக்க வாசிக்க எழுத்தின் தரம் மேம்படும்.  புதிய புதிய கருக்கள் கிடைக்கும். தொடர்ந்து எழுதுங்கள். வருங்காலத்தில் சிறந்த எழுத்தாளராகத் திகழ, வாழ்த்துகள்!  

அன்புடன்

ஆசிரியர்

சுட்டி உலகம்.

Share this:

6 thoughts on “பைரவனின் பராக்கிரமம் – பி.கீ.பிரணவ் (8 வயது)

  1. நல்ல கதை. பிரணவிற்கு வாழ்த்துகள். அழகான கற்பனை. தெளிவான நடை.

    1. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி புவனா!

  2. மனமார்ந்த நன்றிகள் சகோதரி. என் குழந்தைக்கு ஊக்கம் தரும் கருத்திற்கு நன்றிகள் பல.

    1. ஊக்கமும் உற்சாகமும் அளித்துத் கதைப்போட்டியில் குழந்தைகளைப் பங்கு பெற வைத்த தங்களுக்கும் மிக்க நன்றி கீதா!

  3. வாழ்த்துக்கள் செல்லம் நல்ல கற்பனை வாழ்க வளமுடன்

    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி!

Comments are closed.