மார்க்ஸ் எனும் மனிதர்

Marx_pic

இது மனித குலத்தின் மகத்தான சிந்தனையாளரான, கார்ல் மார்க்ஸின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல்.

இவரது இணைபிரியாத் தோழரான பிரெடெரிக் ஏங்கல்ஸுடன் சேர்ந்து, இவர் உருவாக்கிய தத்துவம், இவர் பெயரால் மார்க்ஸியத் தத்துவம் என்று வழங்கப்படுவது, நாம் அனைவரும் அறிந்ததே. ஒரு பரந்துபட்ட ஒன்றிணைந்த உலகப் பார்வையை, உலகத் தொழிலாளருக்கு வழங்குவதே மார்க்ஸியம்.

உலகமயம், தனியார் மயம், தாராளமாக்கல் ஆகியவற்றை நோக்கி, வளரும் நாடுகள் தள்ளப்படும் இக்காலக்கட்டத்தில், மார்க்ஸியத்தின் தேவை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. உலகச் சந்தையைப் பிடிக்க வேண்டும் என்றால் உற்பத்திச் செலவைக் குறைத்து, ஏற்றுமதி செய்ய வேண்டும்; அதற்குத் தொழிலாளர்களின் வயிற்றில் அடித்துக் கூலியைக் குறைக்கிறார்கள். மிக நவீன எந்திரங்களைப் பயன்படுத்துவதால், பாரம்பரிய குடிசைத் தொழில்கள் நசிகின்றன; இதன் மூலம் மார்க்ஸ் சொன்ன மூலதனத்துக்கும், உழைப்புக்கும் இடையிலான முரண்பாடு அதிகரித்து, பகைமை முற்றுகிறது. மோதல்கள் ஏற்படுகின்றன.

மார்க்ஸ் ஜெர்மனியின் டிரியர் நகரில் யூதக் குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தை வழக்கறிஞர். மார்க்ஸ் படிப்பில் ஆர்வமாக இருந்திருக்கிறார். பள்ளியிறுதி வகுப்பில் இவர் எழுதிய ஆய்வுரையில், பின்னாளில் தேர்ந்தெடுக்கப்போகும் வேலையைக் குறித்து, இவர் எழுதியிருப்பதை வாசித்தால், பொதுநன்மைக்குப் பாடுபட வேண்டும் என்ற சிந்தனை இவருக்குப் பள்ளிப்பருவத்திலேயே உதித்திருக்கிறது.

“பொது நன்மைக்காகப் பாடுபடுவதன் மூலம், தங்களைச் சிறப்பித்துக் கொள்ளும் மனிதர்களைத் தான், வரலாறு மிக மகத்தானவர்கள் என்று அழைக்கிறது. மிக அதிகமான அளவு மக்களை மகிழ்ச்சியடையச் செய்யும் மனிதன் தான், மகிழ்ச்சிகரமான மனிதன் என்று வரலாறு வரவேற்கிறது”.

மார்க்ஸ் பயின்ற காலத்தில் இருந்த ஜெர்மனியின் முக்கிய தத்துவ அறிஞர்கள் பற்றியும், அவர்களுடைய தத்துவம் பற்றியும், அத் தத்துவங்களின் குறைபாடுகள் பற்றியும், ஆரம்ப அத்தியாயங்கள் விளக்குகின்றன. பொருள் முதல்வாதம், கருத்துமுதல்வாதம் ஆகியவை குறித்தும், ஆசிரியர் எல்லாருக்கும் புரியும்படி விளக்கியிருக்கிறார்.

பிரஷ்ய நாட்டின் குடிமகனாக இருக்கும் வரை, தாம் எந்த நாட்டுக்குச் சென்றாலும், பிரஷ்ய நாடு அந்நாட்டிலிருந்து தம்மை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கும் என்பதை உணர்ந்த மார்க்ஸ், பிரஷ்ய நாட்டின் குடியுரிமையைத் துறந்தார். மார்க்ஸ் தம் வாழ்நாள் முழுக்க இனம்,மொழி, தேசம் கடந்த மாமனிதனாக, உலக மனிதனாக நின்றார் என்கிறார் ஆசிரியர்.  “உலகத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள்!” என்ற முழக்கத்தைக் கொடுத்த மாமனிதரை, ஒரு குறிப்பிட்ட தேசத்தின் குடிமகனாகச் சுருக்குவது, பொருத்தமில்லை தானே? 

மார்க்ஸ் குடும்ப வாழ்க்கை குறித்தும், ஜென்னி மார்க்ஸ் குறித்தும் ஓரிரு அத்தியாயங்களே உள்ளன. வறுமையின் பிடியில் இவர் சிக்கி உழன்றதையும், வேதனை மிக்க இறுதி ஆண்டுகளின் நிகழ்வுகளையும் ஓரளவு இந்நூலில் தெரிந்து கொள்ள முடிகின்றது. இவர் மறைவு குறித்து பிரெடெரிக் ஏங்கல்ஸ் ஆற்றிய உரை இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. அது வாசிப்போரை நெகிழ்ச்சியடையச் செய்யும்.

“மார்க்ஸியம் வல்லமை வாய்ந்தது

ஏனென்றால் அது உண்மையானது”

என்ற மாமேதை லெனின் கூற்றுடன், இந்நூல் நிறைவு பெறுகின்றது.

கார்ல் மார்க்ஸ் மார்ஸிய சித்தாந்தத்தை உருவாக்க உதவிய காரணிகள், அக்காலச் சூழல், அவர் குடும்ப வாழ்க்கை ஆகியவை குறித்துத் தெரிந்து கொள்ள உதவும் நூல்.

வகைகட்டுரை
ஆசிரியர்என்.ராமகிருஷ்ணன்
வெளியீடுகிழக்குப் பதிப்பகம், சென்னை-14
விலைரூ 210/-
Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *