கோவை தொண்டாமுத்தூர் உலியம்பாளையத்தைச் சேர்ந்த ஹரிவர்ஷ்னி ராஜேஷ். தம் ஒன்பதாவது வயதில் ஒன்பது இடங்களில், ஒன்பது கதைப்புத்தகங்களை வெளியிட்டுச் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
சிறார் எழுத்தாளர் கன்னிக்கோவில் இராஜா அவர்கள் கொடுக்கும் கதைப் பயிற்சியில் கலந்து கொண்டு உற்சாகமாய்க் கதைகளைப் படைப்பதில் வல்லவர், ஒன்பது வயதேயான சுட்டி எழுத்தாளர் ஹரிவர்ஷ்னி ராஜேஷ்.
‘குகைக்குள் பூதம்’ என்ற இந்தப் புத்தகத்தில் மொத்தம் 9 சிறுவர் கதைகள் உள்ளன. இவற்றை 9 வயது குழந்தை எழுதியிருக்கிறார் என்றறியும் போது, வியப்பாயிருக்கிறது.
குகைக்குள் பூதம் இருப்பதாக ஒரு கிராமமே நினைத்துப் பயப்படுகிறது. ஆனால் அறிவழகன் என்ற பையனுக்கு, இதில் சந்தேகம் ஏற்படுகின்றது. அவன் யாருக்கும் தெரியாமல் அந்தக் குகைக்கு வந்து, அங்குத் திருடர்கள் இருப்பதைக் கண்டுபிடிக்கிறான். கிராம மக்கள் முன்னிலையில் குகையிலிருந்து திருடர்களை வெளிக்கொண்டுவர, அவன் பயன்படுத்தும் உத்தி சிறப்பு!
இதில் உள்ள எல்லாக் கதைகளுமே வெற்றிவேற்கை நீதி நூலில் காணப்படும் நீதிகளை அடிப்படையாகக் கொண்டு எழுதியிருக்கிறார். இந்தக் கதைகளுக்கு உயிரோட்டமாய், இவர் அக்கா வர்த்தினி ஓவியங்கள் வரைந்திருக்கிறார்.
இந்தச் சின்ன வயதில் நீதி இலக்கியத்தில் உள்ள நீதிக்கருத்துக்களை உள்வாங்கி, அதற்கேற்ப கதைகளை உருவாக்கியிருப்பதற்குச் சுட்டி எழுத்தாளர் ஹரிவர்ஷ்னிக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்!
இப்புத்தகத்தை வாங்கி, இவர் மென்மேலும் எழுத ஊக்குவியுங்கள்!
வகை | சிறுவர் கதைகள் |
ஆசிரியர் | ஹரிவர்ஷ்னி ராஜேஷ் |
(வெளியீடு) விற்பனை உரிமை | (மகேஸ்வரி பதிப்பகம், விருதுநகர்) லாலிபாப் சிறுவர் உலகம், சென்னை +91 98412 36965 |
விலை | ₹ 80/- |
வெகு சிறப்பான அறிமுகம் குழந்தைகள் உலகம் குழந்தைகளுக்கானது அதிலும் மாணவி சிறுகதைகளை எழுதி இருப்பது பாராட்டுக்குரியது சிறப்பாக அறிமுகம் செய்த சுட்டி உலகத்திற்கு லாலிபாப் சிறுவர் உலகம் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி!