பாரதியும் பாப்பாவும்

Bharathiyum_pappavum

கவிதை, சிறுகதை, கட்டுரை, நாடகம், எனப் பன்முகத்திறமை கொண்ட ம.ப.பெரியசாமித் தூரன் அவர்கள், சிறார் இலக்கியத்துக்கு ஆற்றியிருக்கும் பங்கு மகத்தானது. 

1979 ஆம் ஆண்டு வெளியான ‘பாரதியும் பாப்பாவும்’ என்ற இந்த நூலை இலவசமாக இணையத்தில் வாசிக்க, இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.

இதில் பாரதியின் வாழ்க்கை வரலாறு, வ.உ.சி க்கும் பாரதிக்கும் இடையே இருந்த தோழமை, பாரதி எழுதிய பாப்பா பாடல்கள் ஆகியவற்றைப் பற்றி சிறுவர்கள் தெரிந்து கொள்ள ஏதுவாக எளிமையான நடையில் சுவையாக எழுதியுள்ளார் ஆசிரியர்.

“முதலில் பூ மொக்காக இருக்கின்றது; பிறகு அது மலராகின்றது. அப்படி மலரும் போது, மிக அழகாக இருக்கின்றது அது போலத் தான் தமிழிலே ஒரு புதிய மலர்ச்சியையும், தமிழ்நாட்டு மக்களிடத்தே ஒரு புதிய சக்தியையும் உண்டாக்கிய பாரதியாரின் வாழ்க்கையைப் பற்றி, ஒவ்வொரு குழந்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்” என்கிறார் ஆசிரியர்.

பாரதிக்குக் குழந்தைகள் என்றால் மிகவும் பிரியம்.  இதனைக் ‘கண்ணம்மா என் குழந்தை’ என்ற பாடலில் பாரதி மிகவும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார் என்று சொல்லும் ஆசிரியர்,

“பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா

பேசும் பொற் சித்திரமே

அள்ளி அணைத்திடவே என் முன்னே

ஆடி வரும் தேனே”

என்ற பாடல் வரிகளை மேற்கோள் காட்டுகிறார்.  

“சாதிகள் இல்லையடி பாப்பா – குலத்

தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்

நீதி உயர்ந்த மதி, கல்வி – அன்பு

நிறைய உடையவர்கள் மேலோர்”

என்று தம் செல்லக்குழந்தைக்குச் சொல்வது போல பாரதி எல்லாக் குழந்தைகளுக்கும் சொல்லிச் சென்றிருக்கிறார்  என்று சொல்லும் தூரன்,பாரதியார் இயற்றிய புதிய ஆத்திசூடி பற்றியும், இந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.

‘பாப்பா பாட்டு’ எழுதிய பாரதியின் வாழ்க்கை வரலாறு குறித்தும், அவர் எழுதிய பாடல்கள் குறித்தும், சிறுவர்கள் தெரிந்து கொள்ள வாசிக்க வேண்டிய நூல்.

இணையத்தில் வாசிக்க இணைப்பு:-

http://www.tamilvu.org/library/nationalized/pdf/61-pe.thuran/271-bhaarathiyumpaappaavum.pdf

Share this: