‘அம்மாடி..அப்பாடி’ என்ற தம் நூல் வழியாகத் தமிழில் ‘பாட்டி-தாத்தா இலக்கியம்’ என்ற புது வகைமையைத் துவக்கி வைத்திருக்கிறார் பேராசிரியர் ச.மாடசாமி அவர்கள். “கொட்டுவதா..அள்ளுவதா..” என்ற இவரது இரண்டாவது நூலும், அதே வகைமையில் அமைந்துள்ளது. இந்த இரண்டையும் வாசல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
சிறப்பான வடிவமைப்புடனும், ஓவியங்களுடனும் அமைந்துள்ள இந்நூலில், 13 சுவாரசியமான கட்டுரைகள் உள்ளன. மணிமுகில் என்ற ஆறுவயது பேரனுக்கும், தாத்தா பாட்டிக்குமான பாசமும், நேசமும் சில கட்டுரைகளின் கருவாக அமைந்துள்ளன. சிலவற்றில் தாத்தா அனுபவங்கள் வாயிலாகத் தாம் கற்றதையும், பெற்றதையும் பிறர்க்குப் பயன்படும் நோக்கில் பகிர்ந்துள்ளார். “இப்புத்தகத்தில் நான் அசை போட்ட அனுபவங்கள் பாதி; கற்பனை பாதி!” என்கிறார் நூலாசிரியர்.
கதை சொல்லும் போது கழுதை போல் காலை உதைத்துக் காட்டிப் பேரனைச் சிரிக்க வைக்கும் தாத்தா! மதிப்பெண் போதாது என்று சொல்லிப் பேரனைச் சோர்வடையச் செய்த ஆசிரியர் மேல் கோபப்படும் தாத்தா! “வயசான காலத்தில் நிம்மதியாக வாழ எடையையும் குறைக்கணும்; கோபத்தையும் குறைக்கணும்” என்று தெருவில் பெண்மணி ஒருவர் சொன்ன பொன்மொழியைப் பத்திரப்படுத்திச் சாந்தமாகும் தாத்தா! தம் முக்கியத்துவம் இழப்பதைக் கூட மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் பெற்ற தாத்தா! பழமையின் தொடர்ச்சியாக நீளும் மூடத்தனத்தை எதிர்க்கும் தாத்தா! தம்மை நம்பிக் கொட்டும் சோகக் கதைகளைப் பொறுமையாக அள்ளுவதன் மூலம், நண்பரின் மனப்பாரத்தைக் குறைத்து ஆறுதல் அளிக்கும் தாத்தா! எனத் தாத்தாவின் பல பரிமாணங்களை இந்நூலில் நாம் தரிசித்து மகிழ முடியும்.
முதுமையில் கணவனை இழந்த பெண்களை விட, மனைவியை இழந்த ஆண்களே அதிகம் பரிதவித்துப் போகிறார்கள். மருமகள் முந்தா நாள் வைத்துக் குப்பைத் தொட்டிக்குப் போக வேண்டிய குழம்பை உண்டு வாழும் முத்துவேலின் கதையும், அப்பாவை எதிர்க்கப் பயந்து குடும்பத்தின் போக்கில் கரைந்து போனதால், பழனிச்சாமிக்கு ஏற்பட்ட பரிதாப முடிவும் மனதை நெகிழ வைக்கின்றன.
இந்நூலில் பகிரப்பட்டுள்ள வாழ்வியல் உண்மைகள் அனைவருக்கும் பயன்படக்கூடியவை. அவற்றுள் சில:-
“காத்திருக்க வேண்டும்; வீட்டுக்கும், வகுப்பறைக்கும் அவசரம் அதிகம்.”
“வீட்டிலும், அலுவலகத்திலும் நாடகம் போட்டால் வாழ்க்கை சுமுகமாக இருக்கிறது. நல்ல பேர் எடுப்பதும் சாத்தியமாகிறது! இயல்பாய் இருப்பது சற்றுக் கடினம். அதற்குக் கொஞ்சம் தைரியம் வேண்டும்.”
“பாரங்களைக் குறைக்க, சில நேரங்களில் வார்த்தைகள் தேவை. சில நேரங்களில் ஸ்பரிசம் போதும். ஆறுதலான ஸ்பரிசம்.”
“வாசிப்பு – நிச்சயம் ஒரு பிடிமானம் தான். வயதான காலத்திலும் நம்பகமான பிடிமானம்.”
“மூத்தவர்கள் தங்கள் அனுபவங்களைப் பேச, ‘பகிர்ந்து கொள்ளும் முற்றங்களை’ (Sharing spaces) உருவாக்க, பெற்றோரும், நவீன இளையோர் சமூகமும் திட்டமிட வேண்டிய தருணம் இது” என்கிறார் பதிப்பாசிரியர். இளையோர் முதல் பெரியவர் வரை, அனைவரும் வாசிப்பதற்கேற்ற புத்தகம்!
வகை:- | பாட்டி-தாத்தா இலக்கியம்-கட்டுரை |
ஆசிரியர் | ச.மாடசாமி |
வெளியீடு:- | வாசல், 40D/3, முதல் தெரு, வசந்த நகர், மதுரை-625 003. செல் +91 98421 02133. |
விலை:- | ரூ100/- |