அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துகள்!
27/12/2024 துவங்கி தற்சமயம் நடந்து கொண்டிருக்கும் சென்னை புத்தகத் திருவிழாவுக்காக வெளிவந்த சிறார் நூல்கள் சிலவற்றை, எங்கள் சுட்டி உலகத்தில் அறிமுகம் செய்துள்ளோம். ஏற்கெனவே 150க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் அறிமுகம், வயது வாரியாகச் சுட்டி உலகத்தில் செய்யப்பட்டுள்ளன. உங்கள் குழந்தைகளின் வயதுக்கேற்ற நூல்களை வாங்கிக் கொடுக்க, இந்த நூல் அறிமுகம் உங்களுக்கு உதவும்.
பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் புத்தகத் திருவிழாவுக்கு வருகை செய்து, புதிய சிறார் நூல்களைக் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்து வாசிப்புப் பழக்கத்தை சிறு வயதிலேயே ஏற்படுத்தினால் மிகவும் நல்லது.
கைப்பேசி, இணையம் போன்ற மின்னணுச் சாதனங்களில் மூழ்கிக் கிடக்கும் நம் குழந்தைகளுக்குப் புத்தக வாசிப்பு சிறந்த மாற்றுப் பொழுது போக்காக அமையும். அவர்கள் அறிவு விசாலமடைவதுடன், பன்முகத் திறமைகள் பெருகி, எதிர்காலத்தில் சிறந்த ஆளுமையாகத் திகழ உதவி செய்யும்.
இப்புத்தகக் காட்சிக்குப் பல புதிய சிறார் நூல்கள் வெளியாகியுள்ளன. இக்காலக் குழந்தைகளைச் சிந்திக்கத் தூண்டுகிற நவீன அறிவியல் சிந்தனையுடன் கூடிய நூல்களைப் பெற்றோர் வாங்கிக் கொடுக்க வேண்டும். பஞ்சதந்திரக் கதைகள், ராமாயண, மகாபாரதக் கதைகள், தெனாலி ராமன் கதைகள் போன்ற பழைய கதை நூல்களைத் தவிர்த்துப் பகுத்தறிவு சிந்தனையைத் தூண்டக் கூடிய புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாங்கிக் கொடுப்பது முக்கியம்.
பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரன் பதிப்பகம் ஏராளமான சிறார் நூல்களை வெளியிட்டுள்ளது. 6 வயதுக்குக் குறைந்த குழந்தைகளுக்கான வண்ணப்படக் கதைகள் முதல், இளையோர்க்கான நாவல் வரை இந்தப் பதிப்பகத்தில் நீங்கள் வாங்கலாம். பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும் பாரதி புத்தகாலயமும் இணைந்து வெளியிட்ட சிறுவர் கதை நூல்களை 20 ரூபாய்க்கு வாங்கலாம். எழுத்து கூட்டி வாசிக்கும் குழந்தைகளுக்கான வாசிப்பு நூல்கள் அவை. இதன் அரங்கு எண் 5 & 6.
அடுத்து வானம் பதிப்பக அரங்கு எண் 438இல் சிறந்த சிறார் நூல்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. மொழிபெயர்ப்பு நூல்களும் இங்குக் கிடைக்கும்.
தமிழ்நாடு பாடநூல்கழகம், தமிழ்நாடு அரசின் இளந்தளிர்த் திட்டத்தின் கீழ், இம்முறை 119 சிறார் நூல்களை வெளியிட்டுள்ளது. நல்ல தரமான வழ வழ தாளில் வண்ண வண்ணப் படங்களோடு, வயது வாரியாக அரங்கு எண் F54இல் இவை கிடைக்கின்றன. விலையும் அதிகமில்லை. இந்த நல்ல வாய்ப்பை அவசியம் பெற்றோர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். புத்தகக் காட்சி முடிய இன்னும் இரண்டு நாட்களே இருக்கின்றன. வீட்டில் நூலகம் அமைக்க விரும்புவோர்க்கும், பள்ளிக்கு நன்கொடை அளிக்க விரும்புவோர்க்கும் இது நல்ல வாய்ப்பாக இருக்கும்.
ஜனவரி 3ஆம் தேதி இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரான சாவித்திரிபாய் புலே பிறந்த நாள். பெண் கல்விக்காகவும், சமூகச் சீர்திருத்தத்துக்காகவும் தம் வாழ்வை அர்ப்பணித்த சாவித்திரிபாய் புலேவை, இம்மாதம் நன்றியுடன் நினைவு கூர்வோம்!
மீண்டும் எல்லோருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!
இனிய வாழ்த்துகளுடன்,
ஆசிரியர்,
சுட்டி உலகம்.