கீக்கீ கிளியக்கா

kikiki_parrot_pic

கீக்கீ கிளியக்கா

இதில் சிறுவர்கள் பாடக்கூடிய 14 கதைப்பாடல்கள் உள்ளன. பாடல் மூலம் கதை சொல்லும் இவை, குழந்தைகளுக்குப் புரியும் விதத்திலும், ரசிக்கும் விதத்திலும்  எளிமையான சொற்களில் எழுதப்பட்டுள்ளன.

முதல் பாட்டு பூனை சவாரி.  யானைக்குட்டியும், பூனைக்குட்டியும் நண்பர்கள்.  யானைக்குட்டி முதுகில் பூனைக்குட்டி சவாரி செய்கிறது.  பூனைக்குட்டி முதுகில் யானைக்குட்டி சவாரி செய்தால் என்ன ஆகும்? மெல்லிய நகைச்சுவை இழையோடும் பாடலிது.

“பூனை மேலே சவாரி செய்ய

யானை விரும்புச்சாம்

யானை ஆசை கேட்ட பூனை

மயங்கி விழுந்துச்சாம்” 

“வீசி மகிழலாம்” என்ற பாடலில், விதைகளை வைத்து உருண்டை பிடித்து வீசி, மரங்கள் வளர உதவி செய்யலாம் என்ற கருத்தைக் குழந்தைகள் மனதில் விதைக்கிறார் ஆசிரியர். இக்காலத்துக்கு மிகவும் தேவையான பாடல்.

“உருண்டை பிடிக்கலாம் நாமும்

உருண்டை பிடிக்கலாம்

சத்து மண்ணில் விதையை வைத்து

உருண்டை பிடிக்கலாம்

பாதுகாக்கலாம் நாமும்

பாதுகாக்கலாம்

பாலைவனம் ஆகாமலே

பாதுகாக்கலாம்”

“மழை அக்கா” என்ற பாடலில், குழந்தை மழையை அக்கா என்று கூப்பிட்டு, வா வா என்றழைக்கின்றது.  வானம் பார்த்த நம் பூமியில்  “ரெயின் ரெயின் கோ அவே” என்று குழந்தைகள் பாடாமல்

“மழையக்கா மழையக்கா

மண்ணில் இறங்கி வா

குழந்தை நாங்கள் விளையாட

கூட ஆட வா”

என்று அழைப்பது சிறப்பு. நம்மூரில் மழை பெய்தால் தானே குழந்தைகளுக்குப் பிடிக்கும்! சுட்டுப் பொசுக்கும் வெயிலில் காய்ந்த உடம்பு, மழையில் சிலுசிலுவென நனையலாம்;  தேங்கிய நீரில் கப்பல் விடலாம்!

இது போல் இன்னும் குழந்தைகள் விரும்பக் கூடிய சுவையான கதைப் பாடல்கள் நிறைந்த நூல்.  அவசியம் வாங்கிக் குழந்தைகளுக்கு இப்பாடல்களைக் கற்றுக் கொடுங்கள்.

வகைசிறுவர் கதைப்பாடல்
ஆசிரியர்கன்னிக்கோவில் இராஜா
வெளியீடுலாலிபாப் சிறுவர் உலகம், சென்னை-18  (+91 9841236965)
விலை₹ 30/-

Share this: