கீழடி வைகை நாகரிகம் – உலக நாகரிக வரிசை-1

keezhadi vaigai book cover photo

கீழடியில் நடைபெற்ற தொல்லியல் அகழ்வாராய்ச்சியின் விளைவாக, வெளிச்சத்துக்கு வந்த தமிழரின் தொன்மை வாய்ந்த, வைகை நாகரிகத்தின் சிறப்புகளைக் குழந்தைகளும் அறிந்து கொள்ளும் வகையில், எளிமையான நடையில் எழுதப்பட்டுள்ள நூல். 

தமிழின் தொன்மையையும், பண்டைய தமிழரின் நாகரிக வாழ்க்கையின் சிறப்புகளையும் தக்க தரவுகளுடன், நம் இளம் தலைமுறையிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில், இந்நூல் எழுதப்பட்டுள்ளது.  முதல் இரண்டு கட்ட கீழடி அகழ்வாராய்ச்சிக்குத் தலைமை வகித்த திரு அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களும், கீழடி ஆய்வு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திரு பாலகிருஷ்ணன் அவர்களும், இதில் கதை மாந்தர்களாக வருவது சிறப்பு. 

ஜெர்மனியிலிருந்து ஒளவை என்ற பதினொரு வயது சிறுமி, தன் பெற்றோருடன் மதுரையிலிருக்கும் மாமா வீட்டுக்கு, விடுமுறையில் வருகின்றாள்.  வாசிப்புப் பழக்கம் அதிகமுள்ள அவள், கீழடி தொல்லியல் ஆராய்ச்சி பற்றிக் கேள்விப்பட்டு, அது சம்பந்தமாக மேலும் தெரிந்து கொள்ள ஆசைப்படுகின்றாள்.  மாமாவின் குழந்தைகளான நிலாவும் கீரனும் அவளுடன் சேர்ந்து கொள்கின்றனர்.  பின்னர் ஒளவை குடும்பமும் நிலாவின் குடும்பமும், மதுரைக்குச் சென்று அங்குக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் கீழடி அகழ்வாராய்ச்சி பொருட்களைப் பார்வையிடுகின்றனர்.  அப்படியே கீழடிக்கும் சென்று, ஆய்வு நடைபெற்ற இடத்தை நேரில் பார்த்து, மேலும் விபரங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்கின்றனர்.

பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் நடைபெறும் உரையாடல் மூலமாகவும், கேள்வி பதில் மூலமாகவும், கீழடியின் சிறப்புகள் விளக்கப்பட்டிருக்கின்றன. அகழ்வாராய்ச்சி நடைபெற்ற அட்டவணை, ஆய்வில் கிடைத்த பொருட்கள்,  அவற்றின் சிறப்புகள் அக்கால மக்களின் சிறப்பான வாழ்க்கை முறை, நேர்த்தியான செங்கல் கட்டிடக்கலை நீர் மேலாண்மைக்குப் பயன்படுத்திய உறைகிணறுகள், விளையாட்டுக்குப் பயன்படுத்திய பொருட்கள், எனத் தமிழர் நாகரிகத் தொன்மைக்குச் சிறப்பு சேர்க்கும் செய்திகள் அனைத்தையும், தக்க தரவுகளுடன் எளிமையாகவும், சுவாரசியமாகவும் எழுதியிருக்கும் ஆசிரியருக்குப் பாராட்டுகள். குழந்தைகளை ஈர்க்கும் விதமாக இடையிடையே வண்ணப்படங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்நூலின் ஆசிரியர் முனைவர் க.சுபாஷிணி (ஜெர்மனி) தமிழக வரலாறு, வரலாற்றுப் பாதுகாப்பு, ஐரோப்பிய தமிழியல், தமிழ்ப்பண்பாட்டுத் தேடல்கள், தமிழ் மக்கள் புலம்பெயர்வு தொடர்பான ஆய்வு எனப் பன்முகத் தேடல்களுடன் இயங்கி வருபவர். தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவராக இருக்கின்றார். 

தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்க இணைப்பு:- https://www.tamilheritage.org/

தமிழ் மரபு அறக்கட்டளை- கீழடிப் பக்கம் – http://keezhadi.tamilheritage.co.in/ 

நம் தமிழ்ச்சமூகத்தின் தொன்மையையும், சிறப்பையும் நம் குழந்தைகள் அறிந்து கொள்ள, அவசியம் இந்நூலை வாங்கிக் கொடுத்து, வாசிக்கச் செய்யுங்கள். 

வகைசிறுவர் அபுனைவு நூல்
ஆசிரியர்க.சுபாஷிணி
வெளியீடுபயில் பதிப்பகம், சென்னை-17 044-24342771 செல் 7200050073
விலை₹199
கீழடி வைகை நாகரிகம்
Share this: