கட்டை விரலின் கதை

Kattai_viral

மகாபாரதத்தில் இடம்பெற்றுள்ள ஏகலைவனின் கதையை, பாதிக்கப்பட்ட ஏகலைவனின் கோணத்தில் சொல்லி, பழைய இதிகாச கதைகளை மறுவாசிப்பு செய்யத் தூண்டும் இளையோர் நாவல்.

வேட்டுவ குலத்தில் பிறந்தமைக்காக ஏகலைவனுக்கு வில்வித்தை கற்றுக்கொடுக்கத் துரோணர் மறுத்ததும், கற்றுக் கொடுக்காத வில்வித்தைக்காகக் குருதட்சிணை என்ற பெயரில், அவனது கட்டை விரலை அநியாயமாகப் பெற்றதும், நம் எல்லோருக்கும் தெரிந்த கதை.

வனத்தின் குடிமகனான வேடர் குலத்தைச் சேர்ந்த ஏகலைவன், பிறந்தது முதல் வில்லையும், அம்பையும் பயன்படுத்தி, அதில் விற்பன்னராக இருந்திருப்பான்; அவனது தொழிலே வேட்டை; அப்படியிருக்க, அவன் ஏன் துரோணரிடம் போய் வில்வித்தை கற்க வேண்டும்? நீரில் வாழும் மீனுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்க வேண்டுமா?” என்று இக்கதையின் நாயகன் பாலு கேட்பது, சிறுவர் மட்டுமன்றி, பெரியோரையும் சிந்திக்கத் தூண்டும் கேள்வி.

அர்ச்சுனனை மிஞ்சிய வில்லாளி இவ்வுலகத்தில் இருக்கக்கூடாது என்பதற்காகத் துரோணர் எப்படி நயவஞ்சகத்துடன் சூழ்ச்சி செய்து, மிரட்டி அவன் கட்டை விரலை வாங்குகிறார்? துரோணரின் தந்திரத்தால், அவனும் மலைவாழ் பழங்குடிகளும் எப்படியெல்லாம் வஞ்சிக்கப்படுகின்றார்கள்? என்பதை இந்நாவல் விறுவிறுப்புடன் விளக்குகிறது.

ஆசிரியரின் பிற இளையோர் நாவல்களான ‘ஆதனின் பொம்மை’, ‘புலிக்குகை மர்மம்’ ஆகியவற்றில் வரும் கேப்டன் பாலுவே, இதிலும் கதாநாயகன். அவனது மாமா பெண் மதுமிதாவைப் போலவே, பாலு இப்போது பாடப் புத்தகங்களைத் தாண்டி, வாசிக்கத் துவங்கிவிட்டான்.

நூலகத்தில் அவன் எடுத்துப் படிக்கும் ‘ஏகலைவனின் கதை’ மூலம், அவனுக்குச் சிறகுகள் முளைத்துப் பறந்து, ஏகலைவனின் காட்டுக்குள் பிரவேசிக்கின்றான். ஏகலைவனின் வில்வித்தைகளின் சிறப்புகளை அறிந்து வியக்கின்றான்.   

புலன்மயக்கி அம்பு, எரியம்பு, பிரி அம்பு, விரி அம்பு, சிறகு அம்பு, ஆண் அம்பு, பெண் அம்பு என்று அம்புகளைப் பலவிதமாகக் கற்பனை செய்து, அதற்கான கதைகளைச் சேர்த்திருப்பதும், காடுகளைப் பற்றிய துல்லிய விவரிப்பும் வாசிப்பின் சுவாரசியத்தைக் கூட்டுகின்றன.

அர்ஜூனனுக்காக ஏகலைவனின் கட்டைவிரலைச் சூழ்ச்சி செய்து வாங்கிய துரோணர், அந்தப் பாண்டவர்களாலேயே தந்திரமாகக் கொல்லப்படுகிறார். தந்திரங்களின் பிதாமகனான துரோணரின் மரணத்துக்குப் பாண்டவர்கள் தந்திரமாகச் சொன்ன பொய்யே காரணமாகின்றது.

கட்டைவிரல் இல்லையென்றால், வில்லைத் தொட முடியாது என்ற சூழ்ச்சியை, நாலு விரல் கொண்டே தம் அறிவாலும், பயிற்சியாலும் பின்னர் முறியடிக்கின்றார்கள் ஏகலைவர்கள். காலங்காலமாகக் காடுகளில் வசிக்கும் பழங்குடியினருக்குச் செய்யப்படும் கொடுமைகளுக்குச் சாட்சியாக, ஏகலைவனின் கட்டை விரல் கதை விளங்குகிறது.

வாசிப்போரின் மனதை நெகிழச் செய்யும் இந்த நாவல், வானம் பதிப்பகம் மூலம் அருமையான வடிவமைப்புடனும், அழகான ஓவியங்களுடனும் இளையோரைக் கவரும் விதத்தில் வெளியாகியிருக்கிறது. அவசியம் வாங்கி வாசியுங்கள்.

வகைஇளையோர் நாவல்
ஆசிரியர்உதயசங்கர்
வெளியீடு:-வானம் பதிப்பகம், சென்னை-89 செல் +91 91765 49991
விலைரூ 100/-
Share this: