கால்களில் ஒரு காடு

Kalkalil_oru_kadu_pic

இத்தொகுப்பில், 11 சிறார் கதைகள் உள்ளன. இதில் முதலாவதாக இடம் பெற்றிருக்கும் ‘அப்பாவின் தந்திரம்’, சேட்டை செய்யும் குழந்தைகளை அப்பா அடிக்காமல் தண்டிக்காமல், சமயோசிதமாகச் சிந்தித்துத் திருத்தும் கதை.

நூலின் தலைப்பான ‘கால்களில் ஒரு காடு,’ இரண்டாவது கதை. கூட்டுப்புழு தன் தூக்கத்தையும், சோம்பேறித்தனத்தையும் விட்டொழித்துக் கூட்டை உடைத்து, ஒரு வண்ணத்துப்பூச்சியாக வெளியேறி, வானில் பறக்கும் கதை. வாசிக்கும் குழந்தைகளுக்குக் கதைப்போக்கில், ஒரு முக்கிய படிப்பினையை உணர்த்தும் சிறந்த கதை.

மனிதன் காட்டை அழித்து, மாமிச உண்ணிகளுக்கு உணவு கிடைக்காமல் செய்ததால், புலி காட்டிலிருந்து விட்டுக்கு வந்து, கருவாட்டுக் குழம்பும், கேப்பைக் கூழும் தின்கிறது.  இயற்கையின் உணவுச் சங்கிலி அறுபட்டால் நாளைக்கு பூமியில் மனிதரின் இருப்பும் கேள்விக்குறியாகிவிடும் என்பதைக் குழந்தைகளுக்குத் தெரிவிக்கும் கதை.

அபியின் பிறந்த நாளுக்கு, எக்கச்சக்கமான பரிசுப்பொருட்கள் கிடைக்கின்றன. ஒரேயொரு புத்தகம் பரிசாக வருகிறது. ‘நம்மைச் சுற்றிலும் பறவைகள்’ என்ற அந்தப் புத்தகத்தை எடுத்துப் பக்கத்தைத் திருப்பியவுடன், ஒரு புதிய உலகம் அவனை வரவேற்கிறது. வாசிப்பின் மேன்மையையும், அவசியத்தையும் வலியுறுத்தும் கதையிது.

பாட்டுடன் கூடிய ‘விதைகளின் பயணம்’ என்ற கதை, சிறு குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இருட்டு என்றால் பயப்படத் தேவையில்லை என்றும், இருள் என்பது குறைந்த ஒளியென்றும் இன்னொரு கதை சொல்கிறது. காக்கா கூட்டில் குயில் முட்டையிடும் உண்மையை “யார் நீ?’ என்ற கதை விளக்குகிறது   இயற்கை பற்றிய உண்மைகளைக் குழந்தைகள் தெரிந்து கொள்ளவும், கதைகளின் மூலம் வாசிப்பின்பம் பெறவும், சிறுவர்கள் வாசிக்க வேண்டிய நூல்.

வகைசிறார் கதைகள்
ஆசிரியர்உதயசங்கர்
வெளியீடுபுக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை-18 செல் 8778073949
விலைரூ 60/-
Share this: