குழந்தைகளுக்கு இராமாயணம், மகாபாரதக் கதைகளைச் சொல்லலாமா?

Ithikasam_kathai_pic

எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள், முகநூலில் எழுதிய இப்பதிவை அவரின் அனுமதியுடன், இங்கு வெளியிட்டுள்ளோம். அவருக்கு ச் சுட்டி உலகம் சார்பாக எங்கள் நன்றி!

1. முதலில் இந்தியாவின் இருபெரும் இதிகாசங்களான மகாபாரதமும், இராமாயணமும் வரலாறு அல்ல; நடந்தவை அல்ல. அவை கதைகள்; கற்பனை கலந்தவை. புளுகு. துளியூண்டு உண்மையின் மீது காலங் காலமாகச் சொல்லப்பட்ட கற்பனைக் கதைகள். எங்களுக்குத் தான் தெரியுமே என்பவர்களுக்கு, இன்றைய ஆட்சியாளர்களின் உளறல்களைக் கவனியுங்கள் என்று சொல்லவேண்டியுள்ளது.

2. அவை நாட்டார் கதைகளாக உருவாகி, மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற பிறகு, எழுதப்பட்ட காவியங்கள். மூலத்தை எழுதியது வியாசராகவோ, வால்மீகியாகவோ, இருந்தாலும், பின்னால் ஏராளமான இடைச்செருகல்களும் உருப்பெருக்கங்களும், புதிய சமூகச் சூழ்நிலைகளுக்கேற்ப மாறிக்கொண்டிருக்கும் அறவிழுமியங்களும், விளக்கங்களும் சேர்ந்து, ஊதிப் பெருத்துக்கொண்டே போனது.

3. அவை உருவான காலம், இனக்குழுக்களாக இருந்த சமூகம் ஒரு நிலையான அரசாக உருவான காலம். அரசனைக் கடவுளின் பிரதிநிதியாகவும், கடவுளாகவும் மக்கள் மனதில் நிலைநிறுத்த எழுதப்பட்டது. இன்னும் சரியாகச் சொல்லப்போனால், பிராமணர்கள் தங்களுக்கு அடுத்த நிலையிலுள்ள சத்திரியர்களுடன், சமரசம் செய்து கொண்ட காலம். அதாவது அரசு அதிகாரத்தைச் சத்திரியர்கள் வைத்துக்கொள்ளவும், ஆன்மீக அதிகாரத்தைப் பிராமணர்கள் வைத்துக் கொள்ளவுமான போராட்டம்; அதில் ஏற்படும் சமரசங்களை  மகாபாரதத்தையும், இராமாயணத்தையும் நுட்பமாக வாசித்தால் தெரியும்.

4. இரு பெரும் இதிகாசங்களும், வாய்மொழி நாட்டார் கதையாக எப்படியிருந்ததோ தெரியாது. ஆனால் எழுதப்பட்டபோது, அது மனுநீதியை வலியுறுத்துவதற்காக, நிலைநிறுத்துவதற்காக, எழுதப்பட்டது. அதனால் ஹிந்து தர்மம், ப்ராமண தர்மம், சத்திரிய தர்மம், சூத்திரர் தர்மம் என்று ஒரே தர்ம நியாயங்கள் இவற்றில் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றைக் குழந்தைகளுக்குச் சொல்லும்போது, என்ன மாதிரியான உளவியல் பாதிப்பு ஏற்படும்?

5. இரண்டிலும் இருக்கும் ஹீரோ ஒர்ஷிப்பும், அரசர்கள் தர்மவான்களாக மட்டுமே இருப்பதும், குழந்தைகளிடம் அதிகாரம் என்றால் புனிதமானது என்ற எண்ணத்தை உருவாக்கிவிடும்.

6. இரண்டுமே அரசர்களைப் பற்றிய, அவர்களது குடும்பங்களைப் பற்றிய, அவர்களுக்கிடையில் நடந்த காம, குரோத, காதல், அன்பு, தயை, ஈகை, கருணை, துரோகம், வஞ்சகம், இவற்றைப் பற்றிய கதைகள். இவற்றைத் தெரிந்து கொள்வதால், குழந்தைகளுக்கு என்ன பயன்?

7. மகாபாரதம் பழமையானது. அது ஒரே இனக்குழுவைச் சேர்ந்த இரண்டு பங்காளிகள், தாயாதிகள், வகையறாக்கள், கிளைகள், பிரிவுகள், இவர்களுக்கிடையே நிகழ்ந்த நிலத்துக்கான சண்டை. சுற்றியலைந்து கொண்டிருந்த நாடோடிகள் ஒரு இடத்தில் நிலையாக இருந்து, அங்கிருந்த மக்களைச் சாம, தான, தண்ட, பேதங்களினால், உருட்டி, மிரட்டிக் கொலைசெய்து, நிர்வாகம் செய்யத் தொடங்கிய காலம். குறிப்பாக இரண்டு இதிகாசங்களிலும், அவர்களை எதிர்த்த பூர்வகுடிகளைக் கொன்றழித்து ஆட்சியை நிலைநிறுத்தியதைப் பெருமையாகப் பேச வைக்கிறது.

8. ‘அப்படியா?’ என்று கேட்பவர்களுக்கு, மகாபாரதத்தில், ஏகலைவன் கதை, இடும்பன்கதை, தொடங்கி நாகர்களை அழித்த கதை என்று ஏராளமான கதைகள் இருக்கின்றன. அதேபோல ராமாயணத்திலும் ராவணன், தாடகி, என்று இருக்கின்றன. யார் அந்த பூர்வகுடிகள் என்று யோசித்துப் பார்த்திருக்கிறோமா?

9. விந்திய மலைக்குத் தெற்கில் இருந்தவர்கள், எல்லாரும் அரக்கர்கள், காட்டுமிராண்டிகள், விலங்குகள், நாகரீகமற்றவர்கள், என்று சித்தரித்திருக்கிறார்களே! அவர்கள் எல்லாம் யார்? என்று யோசித்திருக்கிறோமா?

10. இரண்டு இதிகாசங்களிலும் வருகிற குடும்ப உறவுகள், குழந்தைப்பேறுகள், குறித்த உண்மைகளைச் சொல்ல முடியுமா? இன்றைய அறிவியல் யுகத்தில் குழந்தைகளிடம் வரத்தினால் குழந்தை பிறக்கும்; மாம்பழம் அல்லது பாயாசம் குடித்தால், பிள்ளை பிறக்கும் என்று சொல்வது அறிவுடைமையாகுமா? பெண்ணடிமைத் தனத்தின் உச்சமாக இருக்கும் இரண்டு இதிகாசங்களைக் கேட்கும் ஆண் குழந்தைகளிடம் என்ன பாதிப்பை ஏற்படுத்தும்? பெண் குழந்தைகளிடம் என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?

11. இதிகாசங்களில் வருகிற போர், துரோகம், வஞ்சகம், கருணை, பழிக்குப்பழி, சபதம், எல்லாம் குழந்தைகளுக்குத் தேவையா? மனித மனவிசித்திரங்களைப் பற்றிச் சிறுவயதில் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன?

12. வாய்மையைக் கடைப்பிடித்தல், கீழ்ப்படிதல், செய்ந்நன்றி, குருபக்தி, என்று ஆயிரம் வியாக்கியானங்களைச் சொன்னாலும், அவற்றுக்கு எதிரானதும் அவற்றில் இருக்கின்றன; காலத்தின் துருவேறி இற்றுப்போன விழுமியங்களை, மீண்டும் புதுப்பிக்கவேண்டுமா?

13. அப்படிப் புதுப்பிப்பதினால் யாருக்கு பலன் என்று யோசிக்கவேண்டாமா? 90-களில் தொடங்கிய மகாபாரத, ராமாயணத் தொலைக்காட்சித் தொடர்கள் எப்படி சநாதனத்தையும், சடங்குகளையும் வளர்த்துக் கொண்டிருக்கின்றன என்று நமக்குத் தெரியும் தானே!

14. இதிகாசங்கள் வயது வந்தவர்களுக்கான இலக்கியம். கடந்த காலத்தின் அருங்காட்சியகம். மனித மனவிகாரங்களின் கண்காட்சி. இதற்குள் நுழைய வயது வரம்பு வேண்டும். குழந்தைகளிடம் இவற்றைப் பற்றிப் பேசுவது என்பது, நாமே குழந்தைகளின், ஆளுமைத்திறனின் சுதந்திரமான வளர்ச்சியைத் தடுத்து நிறுத்துவதாகும்.

15. குழந்தைகளுக்கு அறிவியல்பூர்வமான, கற்பனை வளம் நிறைந்த, பகுத்தறிவைத் தூண்டுகிற, கதைகளைச் சொல்லுங்கள்; கதைகளை எழுதுங்கள்.

Share this: