என் சிவப்புப் பால்பாயிண்ட் பேனா

en_sivappu_balpoint_pic

தமிழகத்தின் முன்னணிக் கல்விச் சிந்தனையாளர்களில் ஒருவரான   ச.மாடசாமி அவர்கள், கல்லூரிப் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.  அறிவொளி இயக்கத்தின் உந்து சக்திகளில் ஒருவராகவும் பள்ளிக் கல்வி முறைபாடுகள் குறித்த நிபுணராகவும், பழுத்த அனுபவம் உடையவர். 

இந்நூலில் கல்வி உளவியல் குறித்தும், ஆசிரியர் மாணவர்க்கிடையேயான வகுப்பறை உறவு குறித்தும், கிராமத்து வீதியில் பிறந்த அறிவொளி இயக்கம் குறித்தும், மெல்லிய நகைச்சுவை இழையோட எளிய நடையில்  விளக்குகிறார். ‘செம்மலர்’, ‘தி.இந்து’, ‘புதிய ஆசிரியன்’, ‘விழுது’, ‘சமத்துவ கல்வி’ ஆகியவற்றில் வெளியான 10 கட்டுரைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.

இந்நூலின் தலைப்பான ‘என் சிவப்புப் பால்பாயிண்ட் பேனா’ என்பதே முதல் கட்டுரை. இவர் ஆசிரியர் பணியில் சேர்ந்த புதிதில், தமது சிவப்புப் பேனாவை ‘அதிகாரம்’ என்ற மையால் நிரப்பிக் கொண்டு, மாணவர்கள் விடைத்தாள்களில் எதிர்மறையான விமர்சனங்களை எழுதித் தள்ளுவாராம்.

ஆனால் இந்த எதிர்மறை விமர்சனத்தால், மாணவர்கள் மனம் மோசமாகப் புண்படுகிறது என்ற உண்மையை உணர்ந்த பிறகு, சிவப்பு மையால் கோடு, சுழி, பெருக்கல் அடையாளங்கள் போடுவதை மிகவும் குறைத்துக் கொண்டதாகவும், விடைத்தாள்களைக் கரும்பலகையாக மாற்றிக் கற்றுக் கொடுத்தாகவும் எழுதியிருக்கிறார். ‘நன்று’, ‘அருமை’, ‘பிரமாதம்’ என்ற பாராட்டுகளை விடைத்தாளில் எழுதத் துவங்கிய பிறகு, திருத்தப்பட்ட “விடைத்தாள்களைப் பெற, மாணவர்கள் பசியோடு காத்திருந்தார்கள்” என்றும், “விடைத்தாள் கட்டுக் கண்டதும், கண் விரிய மலர்ந்தார்கள்” என்றும் எழுதியிருக்கிறார்.

‘ஒவ்வோர் அவமதிப்பும் ஒரு மரணம்’ என்ற தலைப்பிட்ட இரண்டாவது கட்டுரையில், ஒவ்வோராண்டும் தேர்வு முடிவுகள் வெளியாகும் மே மாதம் தேர்வு மரணங்கள் பெருகும் மாதமாக இருக்கின்றது. ‘மாவட்டத்துக்கு 10 தற்கொலை என்பது அரசு கணக்கு!’ என்கிறார்.

தேர்வில் தோல்வி காரணமாகப் பிள்ளைகள் தற்கொலை செய்து மரணம் அடைந்தாலும், அவர்களைப் பொறுத்தவரை அது முதல் மரணம் இல்லை என்பது ஆசிரியரின் கருத்து.  “தெரிவிக்கப்பட்ட இறுதி மரணம் மட்டுமே நாமறிவோம்; முன்னர் நடந்து முடிந்த ‘வகுப்பறை மரணங்கள்’ குறித்து அந்தப் பிஞ்சுகளே அறிவர்; மரணத்தை விட மோசமானது வலி என்கிறது மருத்துவம். அவமதிப்பும் அப்படித்தான். மரணத்தை விட மோசமானது” என்கிறார்.

“கூப்பாடு போட்டு வரும் மரணங்கள், இறுதியில் முடிவுரையாக வெளிப்பட்டு நிற்கின்றன. ஆனால் அவற்றின் முகவுரையாக வீடுகளிலும் பள்ளிகளிலும் சத்தமில்லாமல் நிகழும் மரணங்களை எப்போது நாம் வாசிக்கப் போகிறோம்” என்று முடிக்கிறார்.

‘பங்கஜம் சொன்ன கதை’ என்ற மூன்றாவது கட்டுரை, பள்ளிக்கு வெளியிலிருந்து ஆசிரியர்கள் அல்லாத சாதாரண மனிதர்களையும் அவ்வப்போது அழைத்து வந்து, வகுப்பில் அவர்கள் அனுபவங்களை மாணவர்களோடு பகிர்ந்து கொள்வதில் உள்ள நன்மைகள் குறித்துப்  பேசுகின்றது.

தப்பித்த குரங்குகள் முக்கியமானவை” என்பது நாலாவது கட்டுரை. “வடிவமைக்கப்படாமல் தப்பித்தது எதுவோ, அதுவே உன் ஜீவன் மிக்க சாராம்சம்” என்பர் சிந்தனையாளர்கள்”. ‘தப்பித்த குரங்குகள்’ என்று வேடிக்கையாகக் கல்வி உரையாடலில் குறிப்பிடுவார்களாம். 

“ஆசிரியர் தட்டி உருட்டிக் காயப்போட்ட முகம், மத்தியவர்க்க ஆணாதிக்கப் பாடத்திட்டம் வழங்கிய முகம், வேலை வாய்ப்புகள் என்ற பெயரில் கார்ப்பரேட்டுகள் விரும்பிய முகம் என எல்லா முகங்களும் இருக்கின்றன” என்று இன்றைய கல்விமுறையும், தனியார் கல்விக்கூடங்களும்  ஒரிஜினல் ஆளுமையை அழித்து, குழந்தைகளை ஜெராக்ஸ் பிரதிகளாக உருமாற்றிக் கொண்டிருக்கின்றன என்று வேதனை தெரிவிக்கிறார் ஆசிரியர். குழந்தைகளின் ஆளுமையைச் சிதைக்காத சுதந்திர வெளி இன்னும் கொஞ்சம் அரசுப்பள்ளிகளில் பாக்கியிருக்கிறது என்பதால் தான் அரசுப்பள்ளிகளுக்காக வாதாடுகிறோம் என்கிறார்.

பரிசோதனைக் காலத் தனிமையும், வாசிப்பின் தோழமையும்’ என்ற இக்கட்டுரை, வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்துவதோடு, வாசிப்பு அனுபவம் குறித்தும் பேசுகின்றது. 

பரிசோதனைகளின் மீது ஆர்வமும், அங்கீகாரத்தின் மீது ஏக்கமும் கொண்ட ஆசிரியர்களிடம், எப்போதும் இரண்டு நூல்களை வாசிக்கச் சொல்வேன். ஒன்று டோட்டோ சான் (Totto-Chan) மற்றொன்று பகல்கனவு. இதன் ஆசிரியர் கிஜுபாய் (GIJUBHAI) அரசுப்பள்ளியில், பரிகாசத்தையும் அவமதிப்பையும் பொருட்படுத்தாமல், தம் பரிசோதனைகளைச் செய்து பார்த்தவர்.  அவர் அனுபவங்களைச் சொல்லும் நூல் DIVA SWAPNA (DAY DREAMS) (தமிழில் பகல்கனவு).

இரண்டும் கல்வி அனுபவ நூல்கள். டோட்டோ சான் நூலை எழுதியவர் டெட்சுகோ குரோயாநாகி (Tetsuko Kuroyanagi) 80 வய்தைத் தாண்டி இன்றும் வாழ்பவர். அவரது மழலைப் பருவ பள்ளி வாழ்க்கை அனுபவம் தான் டோட்டோ சான்” என்று சொல்லும் ஆசிரியர், இவ்விரண்டு நூல்கள் குறித்தும் இதன் ஆசிரியர்கள் குறித்தும் இக்கட்டுரையில் விரிவாக எழுதியுள்ளார்.

‘வகுப்பறை உறவு நெருக்கமும், இடைவெளிகளும்’ என்ற கட்டுரையில், வகுப்பறைக்குள் நிலவும் நெருக்கம் குறித்தும், அதிலுள்ள இடைவெளிக்கான காரணங்கள் குறித்தும் அலசுகிறார் ஆசிரியர்.

ஆசிரியருக்கும், மாணவர்க்குமிடையேயான தலைமுறை இடைவெளி, சாதி அடையாளம் ஏற்படுத்தும் சமூக இடைவெளி, வசதியான மாணவர்க்கும் வறுமைநிலையில் உள்ள மாணவர்க்குமான பொருளாதார இடைவெளி, வாசிப்புப் பழக்கம் இல்லாத ஆசிரியர் வகுப்பறையில் உண்டாக்கும் வெற்றிடம், ரசனை மாறுவதால் உண்டாகும் இடைவெளி நாம் போதிக்கும் லட்சியங்களுக்கும் நடைமுறைக்கும் உள்ள இடைவெளி என்று வகுப்பறைக்குள் நிலவும் பல்வேறு இடைவெளிகளை இக்கட்டுரை விரிவாகப் பேசுகின்றது.

‘பள்ளியும் பண்பாட்டுப் புரட்சியும்’ என்பது ஏழாவது கட்டுரை. இது 1966 ல் ஏற்பட்ட சீனக்கலாச்சாரப் புரட்சி குறித்தும், புரட்சிக்கு முந்தைய சீனப் பள்ளிகளின் கல்வி முறை குறித்தும் பேசுகின்றது. புரட்சிக்குப் பின் அங்குக் கல்வியிலும் கல்விக்கூடங்களிலும் ஏற்பட்ட மாற்றங்களை விவரிக்கின்றது.

“பணம் போட்டுக் கல்வியை வாங்குவதும், அப்படிப் பெற்ற கல்வியை வைத்துப் பணம் பண்ண அலைவதும், இன்றைய நடைமுறை.  நடைமுறை யதார்த்தங்களின் கூட்டணியில் பெருங்கனவுகள் சில பின்னடைவு காண்கின்றன. ஆனால் கனவுகள் மீதான நம் உரையாடலை நிறுத்தாதவரை, கனவுகள் தோற்றுப்போவதில்லை” என்று இக்கட்டுரையை நம் தற்போதைய கல்வி முறையோடு, ஒப்பிட்டு முடிக்கின்றார் ஆசிரியர்.

‘பொய்களுக்கும் ஓர் இடம்’ என்பது எட்டாவது கட்டுரை. இதில் ஆசிரியர்கள் ஒவ்வோர் ஆண்டும் பிஃஎப் கடன் பெற பிள்ளைகளுக்குக் காது குத்துவதைக் காரணமாகச் சொல்கிறார்கள்; சில மாநிலங்களில் பணியிட மாற்றம் செய்யாமலிருக்கக் காது கேட்கவில்லை என்று பொய்ச் சான்றிதழ் பெறுகிறார்கள்; இப்படி ஆசிரியர்கள் அலுவலகப் பொய்கள் சொல்லும் போது, புத்தகம் கொண்டுவராமல் இருப்பது தாமதமாக வருவது, வகுப்புக்கு மட்டம் போடுவது ஆகிய செயல்களுக்கு மாணவர்கள் சொல்லும் சில வகுப்பறைப் பொய்களை அனுமதித்தால் என்ன என்பது ஆசிரியரின் கேள்வி.

‘ஜென் வகுப்பறைகள்’ என்ற 9 வது கட்டுரையில், ‘திட்டுங்கள் தீர்வு வரும்’ என்று நம்பும் ஆசிரியருக்காக ஒரு பொருத்தமான ஜென் கதையைச் சொல்லி, ஆசிரியர் திட்டும் வசவு சொற்களை மாணவன் வாங்கிக் கொள்ளவில்லை என்றால், அவை யாருக்குச் சொந்தம் என்று கேட்கிறார்.

வகுப்பில் நுழைந்த முதல் நாள் முதல், ஓய்வு பெறும் காலம் வரை எந்த முயற்சியும் செய்து பார்க்காமல், ஒரே மாதிரியான வகுப்பைக் கட்டி இழுக்கும் ஆசிரியரைப் பற்றிக் கவலையுடன் கருத்து தெரிவிப்பவர் “புதுப்புது முயற்சிகளைச் செய்து பார்க்கிற நல்ல ஆசிரியர்கள், ஒரு போதும் தேங்கி நின்றுவிடக்கூடாது” என்று வலியுறுத்துகிறார்.  குழந்தைகள் ஆசிரியர்களுக்குச் சொல்லும் சிறு உதவிகளுக்கும் நன்றி சொல்லவேண்டியது, ஆசிரியரின் கடமை என்பது இவர் வாதம்.

‘வீதியில் விதைத்த நம்பிக்கை’ என்ற கடைசிக் கட்டுரை, அறிவொளி இயக்கம் பற்றியும், அதனால் விளைந்த நன்மைகள் குறித்தும் அவ்வியக்கம் நின்றவுடன் அதனை இயக்கிய அற்புதமான பெண்களுக்கு வாழ்க்கை திசை மாறிப் போனது பற்றியும் வேதனையுடன் பேசுகிறார் ஆசிரியர். 

“இன்றும் இந்தியாவில் ஆண்டுக்கு 135000 குழந்தைகள் பிச்சையெடுக்கவும் முன்பின் தெரியாத நகரங்களில் வீட்டுவேலை பார்க்கவும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தவும் கடத்தப்படுகிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் பெண்குழந்தைகள். அந்தக் குழந்தைகள் யார்? பெரும்பாலும் பள்ளிக்குச் செல்லாதவர்கள்; பள்ளியில் இருந்து இடைவிலகியவர்கள்.

“பள்ளி என்றதும் கற்றல் குறித்தே பேசுகிறோம். பள்ளியோடு இணைந்தது கற்றல் மட்டுமல்ல; குழந்தைகளின் பாதுகாப்பும் தான். பள்ளிகளில் உள்ளவரை அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். எட்டாம் வகுப்பு வரை பிள்ளைகளைத் தோல்வி என்ற பெயரில் ஒரே வகுப்பில் வைக்கவும் கூடாது; பள்ளியை விட்டு வெளியேற்றவும் கூடாது என்ற கல்வி உரிமைச் சட்டம் எத்தனை அவசியமானது என்பதை இன்றும் நினைவுபடுத்தி எச்சரிக்கிறது எழுத்தறிவு இயக்கம்என்று சொல்லும் ஆசிரியர் கல்விக்கூடங்கள் பிள்ளைகள் படிப்பதற்காக மட்டுமல்ல; பிள்ளைகளைப் பாதுகாப்பதற்காகவும் தான் என்று தாங்கள் புரிந்து கொண்டதே அறிவொளியில் தான் என்கிறார்.

தற்போதைய கல்விமுறை குறித்தும், ஆசிரியர்கள் குறித்தும் மாணவருக்கும் ஆசிரியருக்குமான நெருக்கம் குறித்தும் அவர்களுக்கிடையேயான இடைவெளி குறித்தும் பல புதிய விஷயங்களையும், கருத்துக்களையும் தெரிந்து கொள்ள உதவிய நூல். ஆசிரியர்களும், குழந்தைநல செயற்பாட்டாளர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.

வகைகட்டுரை – கல்வி சிந்தனைகள்
ஆசிரியர்பேராசிரியர் ச.மாடசாமி
வெளியீடுபுக்ஸ் ஃபார் சில்ரன்,சென்னை-18 +91 8778073949
விலைரூ 80/-
Share this: