தலையங்கம் – ஜூலை 2022

Mithren_read_pic

அன்புடையீர்!

வணக்கம். குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் பிறந்த நாள் நினைவாக 07/11/2011 அன்று, சிறுவர்க்கான கதைப்போட்டியை அறிவித்த போது, வெற்றி பெறும் கதைகளைத் தொகுத்து நூலாக்குவோம் என்று  சொல்லியிருந்தோம். அதன்படி ‘காணாமல் போன சிறகுகள்’ என்ற தலைப்பில், அவை தொகுக்கப்பட்டு, நூல் அண்மையில் வெளிவந்து விட்டது.

கதைகளை எழுதிய சிறார் படைப்பாளர்கள் அனைவருக்கும், ஒரு பிரதி இலவசமாக, அவர்கள் வீட்டு முகவரிக்கு அனுப்பியிருக்கிறோம்.  யாருக்கேனும் வரவில்லையென்று தகவல் தெரிவித்தால், உடனே அனுப்பி வைப்போம். போட்டியில் பங்குப் பெற்றுக் கதை எழுதிச் சிறப்பித்த அத்தனை குழந்தைகளுக்கும், எங்கள் நன்றியும், வாழ்த்துகளும்!

இந்நூலில் பள்ளி மாணவர்களே கதைகளுக்கேற்ற ஓவியங்கள் வரைந்து அசத்தியிருக்கிறார்கள். அதிலும் 7 பேர் ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் என்பது சிறப்பு. ஓவியம் வரைந்த அனைவருக்கும் ஒரு பிரதி அனுப்பி வைத்துள்ளோம். ஓவியர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றியும், வாழ்த்துகளும். பிள்ளைகளை ஊக்குவித்து ஓவியம் வாங்கி அனுப்பிய அனைவருக்கும், குறிப்பாக ஊஞ்சலூர் அரசுப் பள்ளியின் ஆசிரியர்கள் அனைவருக்கும், எங்கள் நன்றியும், வாழ்த்துகளும்!

ஊஞ்சலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளான ஆ.கனிஷ்காவும், பி.மோனிகாவும் வரைந்த ஓவியங்கள், இம்மாதச் சுட்டி உலகத்தின் ஓவியப் பகுதியை அலங்கரிக்கின்றன. இருவருக்கும் எங்கள் வாழ்த்துகளும், நன்றியும்.

அண்மையில் வெளியான பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவில், 47000 மாணவர்கள் தமிழில் வெற்றி பெறவில்லை என்ற செய்தி, மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. தாய்மொழியான தமிழில் குறைந்த பட்ச தேர்ச்சி மதிப்பெண் கூட வாங்கவில்லை என்பது உண்மையில் அதிர்ச்சியளிக்கும் செய்தியே.

கொரோனா காரணமாக இரண்டாண்டுகளாகப் பள்ளி இயங்கவில்லை; குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவில்லை; ஆன்லைன் வகுப்பு வசதிகள் எல்லாக் குழந்தைகளுக்கும் சரிவரக் கிடைக்கவில்லை; பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை என்பது உள்ளிட்ட பல காரணங்கள் இதற்கு இருக்கலாம். அரசு இவ்விஷயத்தில் அலட்சியம் காட்டாமல், இதற்கான காரணங்களை உடனடியாக ஆய்வு செய்து, குறைகளைக் களைந்து நிலைமையைச் சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

‘தமிழ்நாடு’ என்று பெருமையாக நம் மாநிலத்துக்குப் பெயர் சூட்டிக் கொண்டு, 47000 குழந்தைகள் தமிழில் வெற்றிபெறவில்லை என்றால், இது நம் எல்லோருக்குமே பெருத்த அவமானம்! இரண்டாயிரம் ஆண்டுப் பழமையான செவ்வியல் மொழியை, நம் முன்னோர் பாதுகாப்பாக நம்மிடம் விட்டுச் சென்ற தமிழை, அடுத்த தலைமுறையிடம் பத்திரமாகக் கொடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு, நம் அனைவர் கையிலும் உள்ளது.  அண்மையில் முகநூலில் ஒரு பள்ளியின் ஆறாம் வகுப்பில், பாதிக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குத் தமிழ் எழுத்துகளே இன்னும் சரியாகத் தெரியவில்லையென்றும், தெரிந்தவர்களுக்கும் எழுத்துக் கூட்டி வாசிக்கத் தெரியவில்லையென்றும் பதிவர் குறிப்பிட்டுள்ளார். 

தமிழ் தான் நம் அடையாளம்! தமிழில் பிழையின்றிப் பேசவும், எழுதவும் நம் குழந்தைகள் கற்க வேண்டியது, மிகவும் அவசியம். ஆங்கில வழிக்கல்வி பயிலும் பெரும்பாலான குழந்தைகள், தாய்மொழி மீது அக்கறை காட்டாமல், தமிழை அலட்சியமாகக் கருதும் போக்கு தமிழகத்தில் நிலவுகின்றது. தமிழின் அருமையைக் குழந்தைகளுக்குச் சொல்லிப் புரிய வைக்காத பெற்றோரே, இதற்கு முக்கிய காரணம்.  

பெற்றோர் குழந்தைகளுக்குத் தமிழ் நூல்களை வாங்கிக் கொடுத்து, வாசிக்க வைக்க வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களிடம் பாடப்புத்தகம் தாண்டிய வாசிப்பை ஊக்குவிக்க வேண்டும். அதற்கு அவர்கள் வாசிப்பில் நாட்டம் கொண்டவர்களாக இருத்தல் அவசியம். புதிய நூல்களை வாங்கிக் கொடுத்து, பள்ளி நூலகங்களைச் சீரமைக்க வேண்டியது, அரசின் கடமை. இப்படி எல்லோரும் கூடி இழுக்க வேண்டிய தேர் இது.

குழந்தைகளிடம் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துக்காகவே, சுட்டி உலகம் துவங்கப்பட்டது. இதில் தமிழில் வெளியாகியிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர் நூல்கள் பற்றிய அறிமுகம் உள்ளது. குழந்தைகளின் பிறந்த நாட்களில் நூல்களைப் பரிசாகக் கொடுக்கும் பழக்கத்தைத் துவங்குவோம்! வாசிப்பின் அருமையை நம் குழந்தைகள் அறியச் செய்வோம்! எதிர்காலச் சமுதாயம் அறிவார்ந்த சமுதாயமாகத் திகழ வாசிப்புப் பழக்கம் சிறுவயதிலேயே துவங்க வேண்டும்!

அன்புடன்,

ஆசிரியர்

சுட்டி உலகம்.

Share this: