தலையங்கம் – ஆகஸ்ட்-2023

read_pic

அன்புடையீர்!

வணக்கம். எல்லோருக்கும் அட்வான்ஸ் சுதந்திர நாள் வாழ்த்துகள்!

இந்தியா விடுதலை பெற்று 76 ஆண்டுகள் நிறைவடையும் இவ்வேளையில், நம் விடுதலைக்காகப் போராடிய தலைவர்களின் நினைவைப் போற்ற வேண்டியது, நம் கடமை. மகாத்மா காந்தி இல்லாமல், நம் விடுதலைப் போராட்டம் முழுமை பெறாது என்பதால் தான், அவரைத் தேசப்பிதா என்று கொண்டாடுகிறோம்

ஆனால் பள்ளிகளின் வரலாறு பாடத்திட்டத்தில், இந்திய விடுதலைப்  போராட்டம் குறித்த பாடத்தில், காந்தியின் பெயரே இல்லை என்பதாக வரும் செய்தி, அதிர்ச்சியளிக்கிறது. காந்தியைச் சுட்டுக் கொன்ற கோட்சேவைப் போராளியாக முன் நிறுத்துகிறார்கள். ஆங்கிலேயரிடம் பலமுறை மன்னிப்புக் கடிதம் எழுதி, சிறையிலிருந்து வெளிவந்த கோழை சாவர்க்கரை, வீர சாவர்க்கர் எனப் போற்றுகிறார்கள். அவரவர் இஷ்டத்துக்குத் திரிக்கவும், மாற்றவும், வரலாறு பாடம், புராணமோ, கட்டுக்கதையோ அல்ல. குழந்தைகளுக்கு நம் நாட்டின் உண்மையான வரலாற்றைக் கற்பிக்க வேண்டியது, அரசின் கடமை.    

மாவட்டந்தோறும் புத்தகக்காட்சிகள் நடந்த வண்ணம் உள்ளன. ஜூலை கடைசியில் கோவையில் நடந்து முடிந்து, தற்போது ஈரோட்டில் துவங்கியுள்ள புத்தகக்காட்சி, ஆகஸ்ட் 15 வரை நடைபெறவிருக்கிறது. அடுத்தடுத்து வெவ்வேறு ஊர்களில் தொடர்ந்து நடைபெறவிருக்கின்றது.

உங்கள் ஊரில் நடக்கும் புத்தகக் காட்சிக்குக் குழந்தைகளை அவசியம் அழைத்துச் செல்லுங்கள். என்னென்ன தலைப்புகளில் சிறார் நூல்கள் வெளிவருகின்றன என்பதைப் பார்ப்பதே, ஓர் ஆனந்தம் தான். அவரகள் வயதுக்கேற்ற நூல்களை, அவர்கள் விரும்பும் நூல்களை, வாங்கிக் கொடுங்கள். நான்கு வயது குழந்தைக்கு, ‘ஐஏஎஸ் ஆவது எப்படி?’ என்ற புத்தகம் வேண்டாமே! பெற்றோரின் நிறைவேறாத கனவுகளைக் குழந்தைகள் மீது திணிப்பதும், வன்முறை தான்.  

எங்கள் சுட்டி உலகத்தில் தற்காலத்தில் குழந்தைகளுக்காக எழுதி வெளிவந்த சிறுவர் கதை நூல்கள் குறித்த மதிப்புரைகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். சிறுவர் வயதுக்கேற்ற நூல்களையும், பரிந்துரை செய்கிறோம். புத்தகக் காட்சிக்குச் செல்லுமுன், புத்தகங்களின் பெயர்களையும், பதிப்பகங்களின் பெயர்களையும் தெரிந்து கொண்டு சென்றால், வீண் அலைச்சலைத் தவிர்க்கலாம். நேரமும் மிச்சமாகும்.

எங்கள் ‘சுட்டி உலகம்’ காணொளியில், குழந்தைப் பாடல்களும், கதைகளும் வெளியாகின்றன. இவற்றைக் குழந்தைகளுக்குப் போட்டுக் காண்பியுங்கள். தமிழைக் கற்பிக்கும் காணொளிகளையும், இப்போது வெளியிடத் துவங்கியுள்ளோம்.

குழந்தைகளுக்கு இயற்கையை நேசிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில், மாதமொரு மரம்,விலங்கு,பறவை ஆகியவை குறித்த அறிமுகங்களும் வெளியாகின்றன. இப்பதிவுகளுக்கு அடியில் உங்கள் கருத்துகளை நாங்கள் அறியத் தந்தால், மகிழ்ச்சி!

எல்லோருக்கும் இனிய வாழ்த்துகள்!

அன்புடன்,

ஆசிரியர்,

சுட்டி உலகம்.

Share this: