அன்புடையீர் ! வணக்கம் !
தமிழின் முதல் சிறார் வலைக்களஞ்சியமான ‘சுட்டி உலக’த்துக்கு, வருகை தந்திருக்கும் தங்களை, வரவேற்பதில் மகிழ்கின்றோம்.
சிறார் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும், தொகுத்துத் தருவதே, இத்தளத்தின் நோக்கம். அதிலும் குறிப்பாக, இக்காலச் சூழ்நிலைக்கேற்ற நவீன சிந்தனைகளைக் குழந்தைகளிடையே தூண்டும் விதமாக, தமிழில் வெளியாகியிருக்கும் சிறார் நூல்களை, அறிமுகப்படுத்துவதும், விமர்சனம் செய்வதும், குழந்தைகளின் வயதுக்கேற்றபடி பரிந்துரை செய்வதுமே, மிக முக்கிய நோக்கம்.
முகநூலில் தங்கள் குழந்தைகளின் வயதைச் சொல்லி, “வாசிக்க என்ன புத்தகம் வாங்கிக் கொடுக்கலாம் ?” என்ற கேள்வி, அடிக்கடி கண்ணில் படுகின்றது. அதற்குப் பதில் எழுதும் பெரும்பாலோர், பரிந்துரை செய்யும் நூல்கள் எவை தெரியுமா? அறநெறி நூல்கள், கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’, அப்துல் கலாமின் ‘அக்னிச் சிறகுகள்’, காந்தியின் ‘சத்திய சோதனை,’ போன்றவை தாம்.
வாசிப்பின் முதல் படியில் நின்று, எழுத்து கூட்டித் திக்கித் திணறி வாசிக்கும், ஐந்து வயது குழந்தையிடம், இப்புத்தகங்களைக் கொடுத்தால், என்ன செய்வான் பாவம்? புத்தகம் என்றாலே, பயந்து அலறி ஓட மாட்டானா? வாசிப்பின் மீது ஈர்ப்பு ஏற்படுவதற்குப் பதிலாகச் சிறு வயதிலேயே வெறுப்பு வந்துவிடும் ஆபத்து, இருக்கிறதல்லவா?
4 ஆம் வகுப்பு மாணவனுக்கு, “ஐ.ஏ.எஸ் ஆவது எப்படி?” என்ற புத்தகத்தைப் பெற்றோர் வாங்கிக் கொடுத்ததைப் புத்தகக் காட்சியின் போது, தாம் பார்த்ததாகக் ‘கனலி’ இலக்கிய மின்னிதழில் சொல்லியிருந்த எழுத்தாளர் திரு ஆயிஷா நடராஜன், இது ‘குழந்தைகள் மீது செலுத்தப்படும் வன்முறை’ என்கிறார். எனவே வாசிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்த, வயதுக்கேற்றவாறு குழந்தைகளுக்குப் புத்தகங்களை அறிமுகப்படுத்துவதில், பெற்றோர் கவனமாயிருக்க வேண்டும்.
எந்தெந்தப் பதிப்பகங்கள் குழந்தைகளுக்கான நூல்களை, வெளியிடுகின்றன என்பதே பலருக்குத் தெரியாத காரணத்தால், புத்தகக் காட்சிக்குப் போகிறவர்கள், ‘எங்கெங்கு காணினும், நீக்கமற நிறைந்திருக்கும்’ நீதி போதனை, தெனாலி & மரியாதைராமன், அக்பர் & பீர்பால், ஈசாப் கதை நூல்களையே வாங்கிக் குழந்தைகளுக்குக் கொடுக்கிறார்கள். எனவே தற்காலத்தில் வெளியாகும் சிறார் நூல்களைப் பற்றியும், அவற்றை எழுதிய எழுத்தாளர்கள் பற்றியும், நூல்களை வெளியிடும் பதிப்பகங்கள் பற்றியும், வாசகர்கள் அறிந்து கொள்ள ஏதுவாக, இத்தளத்தில் தகவல்கள் வெளியிடப்படும்.
தமிழில் இது போன்ற தகவல் தொகுப்பு, இணையத்தில் கிடைக்கிறதா என்று தேடிப் பார்த்த போது, எதுவும் கிடைக்கவில்லை. இதற்கென்று ஆங்கிலத்தில் ஏராளமான தளங்கள் உள்ளன. எனவே தமிழிலும் ஒரு தளம் வேண்டும் என்று ஆசைப்பட்டதன் பயனாக, ‘சுட்டி உலகம்’ பிறந்தது.
பொதுவாகவே தமிழ்ச்சமுதாயத்தில், வாசிப்புப் பழக்கம் மிகவும் குறைவு. காசு செலவழித்துப் புத்தகங்கள் வாங்குவதை, அறிவுக்கான முதலீடாக நம் மக்கள் நினைப்பதில்லை. அதை வீண் செலவாகவே நினைக்கிறார்கள். அதனால் வீட்டில் குழந்தைகளுக்குப் பாடப்புத்தகங்களைத் தவிர, வாசிப்புக்கு வேறு நூல்களே இருப்பதில்லை. ஆனால் தற்போது சூழல் கொஞ்சம் மாறியிருக்கின்றது.
பல காலமாக மப்பும் மந்தாரமுமாக, மூடிக் கிடந்த தமிழ்ச் சிறார் இலக்கிய வானில், விடிவெள்ளி முளைத்திருக்கின்றது. குழந்தைகளுடன் பெரும்பான்மையான நேரத்தைச் செலவிடும் பெண்கள், தற்போது அதிகளவில் சிறார்க்காக எழுதத் துவங்கியிருப்பது, மகிழ்ச்சியான விஷயம். கொரோனா காரணமாக, வீட்டுக்குள் முடங்கிய கடந்த ஆண்டில், சமூக ஊடகங்களின் பயனாக, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, சிறந்த கதை சொல்லிகள் பலர் உருவாகி, மழலைகளை மகிழ்வித்துக் கொண்டுள்ளனர்.
எதிர்காலத்தில் நம் தமிழ்ச்சமூகம் அறிவார்ந்த சமுதாயமாகத் திகழ வேண்டுமானால், வாசிப்புப் பழக்கம், இளம் பருவத்திலிருந்தே துவங்க வேண்டும். இன்றைய குழந்தைகள் தானே, நாளைய வாசகர்கள்? இதற்குச் ‘சுட்டி உலகம்’ தன்னால் இயன்ற பணிகளைச் செய்யும் என்று உறுதியளிக்கிறோம். இதற்கான பாதையில், இப்போது தான் முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறோம். இன்னும் பயணிக்க வேண்டிய தூரம், மிக மிக அதிகம். எனவே உங்களின் ஆதரவுடன், தொடர்ந்து சிறப்பாகப் பயணிப்போம்.
உங்கள் நூல் பற்றிய விபரங்கள், இத்தளத்தில் இடம் பெற வேண்டுமானால், இரு பிரதிகள், எங்களுக்கு அனுப்பலாம். தமிழில் ஏற்கெனவே வெளி வந்து, தற்போது அச்சில் கிடைக்காத, சிறந்த புத்தகங்கள் பற்றிய குறிப்புகளையும் எழுதியனுப்பி உதவுங்கள்.
குழந்தைகளைக் கொண்டாடுவோம்! கற்பனை வானில், அவர்கள் சிறகடித்துப் பறக்க, அனைவரும் ஒன்று கூடி, கை கொடுத்து உதவுவோம்!
நன்றியுடன்,
ஆசிரியக்குழு.
சிறப்பான தொடக்கம். சீரான முயற்சி. வெற்றிகாரமான பயணத்திற்கு வாழ்த்துக்கள்