சுட்டிப் பேச்சு (மே 2021)

chutti talk feature image

நல்ல பிள்ளையா? கெட்ட பிள்ளையா?

பொதுவாக குழந்தைகளை நாம் சொல்வதைக் கேட்கவைக்க, “நீ நல்ல பிள்ளையா? கெட்ட பிள்ளையா?” என்ற அஸ்திரத்தை உபயோகிப்போம். உடனே குழந்தை “நல்ல பிள்ளை” என்று சொல்லும். நீ நல்ல பிள்ளை என்றால், நான் சொல்வதைக் கேட்கவேண்டும் என்று நிபந்தனை விதித்து நம் காரியத்தை சாதித்துக் கொள்வோம். தன்னை நல்ல பிள்ளை என்று நிலைநிறுத்தும் முயற்சியில், குழந்தை நாம் சொல்வதைக் கேட்டுக்கொள்ளும். ஆனால் எங்கள் வீட்டுச் சுட்டிகள், ஒவ்வொன்றும் ஒரு விதம். நல்ல பிள்ளை என்று சொல்லிவிட்டால், நாம் சொல்வதைக் கட்டாயம் கேட்டாக வேண்டுமே என்று சமயோசிதமாக யோசித்து அவர்கள் சொன்ன விதவிதமான பதில்களைப் பாருங்களேன்.

1.

தாத்தா – “நீ நல்ல பிள்ளையா? கெட்ட பிள்ளையா?”

சுட்டி (வயது 3) – நல்ல பிள்ளை மாதிரி, கெட்ட பிள்ளை!

தாத்தா😶

2.

அம்மா – “நீ குட் பாயா? பேட் பாயா?”

சுட்டி (வயது 2) – பேட் பாய்!

அம்மா😶

எங்கள் குடும்பத்தில் இன்னொரு சுட்டி இருக்கிறது. நாம் கேள்வியில் கொடுக்கும் இரண்டு ஆப்ஷன்களைத் தவிர்த்து, எப்போதும் மூன்றாவதாக ஒரு ஆப்ஷனைத்தான் பதிலாய்க் கொடுக்கும். உனக்கு இவரைப் பிடிக்குமா அவரைப் பிடிக்குமா என்று கேட்டால் அவரைப் பிடிக்காது என்று கேள்வியில் தரப்படாத ஒரு ஆப்ஷனை பதிலாய் அளிக்கும் படு சமர்த்து. அந்த சுட்டி அளிக்கும் பதிலைப் பாருங்களேன். 

3.

அம்மா – “நீ குட் பாயா? பேட் பாயா?”

சுட்டி (வயது 3) – “அண்ணன், பேட் பாய்!”

அம்மா😶

சுட்டி: அப்பா! அதிகபட்சம் 70 கிலோ மீட்டரு வேகம் தான், கார் போகலாமுன்னா, அப்புறம் எதுக்கு 100 கிலோ மீட்டர் போறது மாதிரி காரைத் தயாரிக்கிறாங்க?

அப்பா: 😶

சுட்டி: அப்பா! சொர்க்கம் எப்படியிருக்கும்?

அப்பா: தெரியலப்பா. நான் அங்க இருந்ததில்ல.

சுட்டி: அப்பா நீங்க சாவும் போது, கையில செல்போன் எடுத்துக்கிட்டுப் போங்க. சொர்க்கத்துக்குள்ள போகும் போது, எப்பிடியிருக்கும்னு, நான் கேட்டுத் தெரிஞ்சுக்கிறேன்.

அப்பா: 😶

அஞ்சு ‘ஈ’

மகனுக்கு ஒன்றாம் வகுப்பு தமிழ் எழுத்துத் தேர்வுக்காகப் பயிற்சி கொடுத்தார், அம்மா.

அம்மா:- ‘ஏ’ எழுது

மகன்:- “எழுதிட்டேன்”

அம்மா:- “‘அ’ எழுது” 

மகன்:-“எழுதிட்டேன்”

அம்மா:-“‘ஈ’ எழுது” 

மகன்:-  ?????? 

அம்மா:- “என்னடா திருதிருன்னு முழிக்கிறே?. ஈ எழுது”..

மகன்:-  ????? 

அம்மா:- “தெரியலையா? மறந்துட்டியா? ‘ஈ’ எழுது”

மகன்:- “ஈ எழுது, ஈ எழுதுன்னா, எப்புடி எழுதுறது?  அஞ்சு ஈ இருக்கில்லே?”.. 

அம்மா:- “அஞ்சா?”

மகன்:-“ஆமா.. இங்கிலீஷ்ல ரெண்டு e, E –  தமிழ்ல ரெண்டு இ, ஈ, அப்புறம் பறக்கிற ஈ ஒண்ணு. எதை எழுதுறது, நானு?”(எழுதும் ஈக்களோடு, பறக்கும் ஈயையும், சேர்த்து விட்டான் பையன்!)

அம்மா:- 😂

சுட்டி: நான் பெரியவனா ஆக விரும்பலே, அப்பா

அப்பா: ஏன் பா?

சுட்டி: பெருசானா வேலை செய்யணும். கொழந்தைகளைப் பார்க்கணும். அதெல்லாம் எனக்குச் செய்ய புடிக்காது. அப்பா! அதுக்குப் பதிலா, ஏற்கெனவே கொழந்தைகளைப் பார்த்துக்கத் தான் ஒங்களுக்குத் தெரியுமில்ல?, என்னையும், என் கொழந்தைகளையும் சேர்த்துப் பார்த்துக்கிறீங்களா?

அப்பா: 😶

அப்பா: முதலை எதைத் தின்னும்?

சுட்டி: மீன்

அப்பா: யானை?

சுட்டி: புல்

அப்பா: புலி புல்லைத் தின்னுமா?

சுட்டி: யானை எல்லாப் புல்லையும் தின்னுடும். அதனால புலி பீட்சா இல்லேன்னா தோசை தின்னும்.

அப்பா: 😂

அம்மா: “நீச்சல் வகுப்புக்குப் போவோமா?”

சுட்டி: “அம்மா! நான் ஆமை இல்ல. நான் நீந்தணும்னு அவசியமில்லே”. .

அம்மா: 😶

பெயர் சொல்லும் பேத்தி

தாத்தா (பேத்தியிடம்) – “பள்ளிக்கூடம் போறியே,  எழுத்தெல்லாம் தெரியுமா?”

பேத்தி:-(வயது 3) – “ஓ தெரியுமே!”

தாத்தா – “எங்கே, எம் பேரை எழுதிக்காட்டு, பார்க்கிறேன்”

பேத்தி – “உங்க பேர் எழுதுறது, ரொம்ப ஈசி, தாத்தா”

தாத்தா – “அப்படியா?”

பேத்தி:- “ஒங்க பேர் ஜேபால்தானே? J போட்டு, ஒரு ball வரைஞ்சா போதும்”.(தாத்தா சற்றே திடுக்கிட்டு, பிறகு சிரிக்கிறார். ஜெயபால் என்ற தம் பெயரை, இவ்வளவு எளிதாகத் தம் பேத்தியைத் தவிர, யாரால் எழுத முடியும் என்று மகிழ்ந்தார், தாத்தா).

Share this: