குழந்தை படைப்பாளர்களின் நூல்கள் அறிமுகம்:-

Chennai_bookfair_2022

தற்போது குழந்தைகளுக்காகக் குழந்தைகளே கதைகள் எழுதும் போக்கு அதிகரித்திருப்பது, மிகவும் மகிழ்ச்சியான விஷயம்.  என் கவனத்துக்கு வந்த நான் வாசித்த சில நூல்களை மட்டும், இங்கே அறிமுகம் செய்திருக்கிறேன்:-

இது தரவரிசை பட்டியல் அல்ல.

சிம்பாவின் சுற்றுலா – நாவல்

ஆசிரியர்:- ரமணா

வெளியீடு:- வானம் பதிப்பகம், சென்னை-89. செல் (+91) 91765 49991

விலை:- ₹150/-

சிம்பா என்ற சிங்கமும், பாரதி என்ற பையனும், ஜாலியாகச் சுற்றுலா செல்கிறார்கள். சிங்கம் வனிதா என்கிற பெண்ணிடம் சென்று, நண்பனுடன் சேர்ந்து, முகத்தில் வண்ணம் பூசிக் கொள்கிறது.   

மரத்தில் மீன் காய்த்துத் தொங்குகிறது.  ஒரு கோழி நூறு முட்டையிடுகின்றது.  தங்குத் தடையில்லாமல் கற்பனைக் குதிரை சிறகடித்துப் பறக்கின்றது.  வாசிக்கின்ற குழந்தைகளும் நிச்சயம் ரசித்து மகிழ்வார்கள்.

ஆங்கிலப் புத்தகம் போல், தரமான வண்ண ஓவியங்களுடன் கூடிய பதிப்பு.

இவர் எழுதிய ‘நீலதேவதை’ எனும் சிறுகதை நூல், 2022 சென்னை புத்தகக் காட்சியில், வானம் பதிப்பகம் மூலம் வெளியாகியுள்ளது. 

யாருக்குத் தைக்கத் தெரியும்? – சிறுவர் கதைகள்

ஆசிரியர் ரமணி

வானம் பதிப்பகம், சென்னை-89. செல் (+91) 91765 49991

விலை ரூ 70/-

இதில் 4 சிறார் கதைகள் உள்ளன.  முதலாவது ‘குட்டிப் பேய் பங்கா’வில் வரும் குட்டிப் பேய் மிகவும் நல்ல பேய்.  அம்மா பயந்து அதைத் துரத்தினாலும், மீனா கனவில் அவளுடன் விளையாடுகிறது.

பூக்களுக்கு எப்படி நிறம் வந்தது? என்பதைச் சொல்லும் ‘பூக்களின் நகரம்’ கதையில்,  ‘நிறம் என்பது ஒளியின் விளையாட்டு’ என நிறத்துக்கான புது விளக்கம் மிக அருமை. 

பருந்து ராஜாவின் உடையைத் தைப்பதற்காகக் கிளி, மைனா, காக்கா, குயில், ரெட்டைவால் குருவி. தேன்சிட்டு, தையல்சிட்டு என நிறைய பறவைகள் முயலுகின்றன.  இத்தனைப் பறவைகளின் பெயர்களைக் குழந்தை ரமணி தெரிந்து வைத்திருக்கிறார் என்பது மிக வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது.  தரமான தாளில் வண்ணப்படங்கள் நிறைந்த கதைப்புத்தகம்.

குகைக்குள் பூதம்

ஆசிரியர் ஹரிவர்ஷ்னி ராஜேஷ்.

வெளியீடு:- மகேஸ்வரி பதிப்பகம், விருதுநகர்.

விற்பனை:- லாலிபாப் சிறுவர் உலகம், சென்னை-18 செல் +91 98412 36965

விலை ரூ 80/-

கோவையைச் சேர்ந்த ஹரிவர்ஷ்னி ராஜேஷ். தம் ஒன்பதாவது வயதில் ஒன்பது இடங்களில், ஒன்பது கதைப்புத்தகங்களை வெளியிட்டுச் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

இதில் 9 கதைகள் உள்ளன. குகைக்குள் பூதம் இருப்பதாக ஒரு கிராமமே நினைத்துப் பயப்படுகிறது.  ஆனால் அறிவழகன் என்ற பையன், யாருக்கும் தெரியாமல் அந்தக் குகைக்கு வந்து, அங்குத் திருடர்கள் இருப்பதைக் கண்டுபிடிக்கிறான்.  கிராம மக்கள் முன்னிலையில் குகையிலிருந்து திருடர்களை வெளிக்கொண்டுவர, அவன் பயன்படுத்தும் உத்தி சிறப்பு!

இதில் உள்ள எல்லாக் கதைகளுமே, ‘வெற்றிவேற்கை’ நீதி நூலில் காணப்படும் நீதிகளை அடிப்படையாகக் கொண்டு எழுதியிருக்கிறார்.  இந்தக் கதைகளுக்கு உயிரோட்டமாய், இவர் அக்கா வர்த்தினி ஓவியங்கள் வரைந்திருக்கிறார்.

இவருடைய பிற நூல்கள்:-

‘பதினெண் கதைகள்’, ‘நிகாசினியின் மீன் பொம்மை’, ‘மூணு கண்ண வந்துட்டான்’, ‘அரைப் பல்ல காணோம்’, ‘உராங்குட்டான் கட்டித் தந்த வீடு’, ‘மேக்கப் போட்ட விலங்குகள்’, ‘குக்கூ குக்கூ தவளை’, ‘காட்டுக்குள் திருவிழா’, ‘ஐந்து பூதங்கள்’, ‘ஜீராவும் பஜ்ஜியும்’ ஆகியவை.

அத்தினிக்காடு – சிறுவர் கதைகள்

ஆசிரியர்:- ச.ச.சுபவர்ஷினி

வெளியீடு:- லாலிபாப் சிறுவர் உலகம்,சென்னை-18. செல் +91 98412 36965

விலை ரூ99/-

இதில் 15 கதைகள் உள்ளன.அத்தினிக்காடு என்பதில் அத்தினி என்பதன் பொருளை இன்று தான் தெரிந்து கொண்டேன்.  நீங்களும் புத்தகம் வாங்கி வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

அத்தினிக்காடு, மஞ்சள் காடு, மூங்கில் காடு, பிருந்தாவனம், முல்லை வனம் என நிறைய காடுகள் இக்கதைகளின் களனாக இருப்பதால், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த நாய்க்குட்டி,பூனைக்குட்டி, சிங்கம்,யானை, வாத்து,புறா,பட்டாம்பூச்சி, கொசு போன்ற உயிரினங்களே கதைகளில் முக்கிய பாத்திரங்களாக இடம்பெற்றிருக்கின்றன. 

கொரோனா பற்றிய கதையில் அப்பா வெளியில் செல்லாமல் வீட்டிலேயே இருந்து ஒன்றாக உணவருந்தியதாலும், விளையாடியதாலும் நோயின் பயம் போய் மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டது என்று வாசித்த போது, ஒரு குழந்தையின் மனநிலையை நன்கு புரிந்து கொள்ள முடிந்தது.

இயற்கையைக் காக்க வேண்டும்; பிற உயிர்களிடம் அன்பு செலுத்த வேண்டும் என்பது பெரும்பாலான கதைகளின் கருவாக அமைந்திருப்பது சிறப்பு. எல்லாக் கதைகளுக்கும் குழந்தைகளே மிகச் சிறப்பாக ஓவியம் வரைந்திருக்கிறார்கள்!

நாலுகால் நண்பர்கள்

ஆசிரியர் அனுக்ரஹா கார்த்திக்

புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை-18 செல்   +91 8778073949.

விலை ரூ 25/-.

சுபியும் அபியும் அக்கா தங்கை. அவர்களுக்குச் சிங்கப்பூரிலிருந்து அவர்களுடைய மாமா விலங்குகள் ஓவியம் போட்ட இரண்டு டீஷர்ட்டுகளைப் பரிசாக அனுப்பினார்.  அந்தச் சட்டைகளைத் துவைத்தவுடன், அதிலிருந்த விலங்கு ஓவியங்கள் மாயமாய் மறைந்துவிடுகின்றன. 

திடீரென்று அவை உயிர் பெற்று, அளவில் மிகச் சிறியதாக அவர்களுடைய கட்டிலுக்கு அடியில் வந்துவிடுகின்றன.  அபியும், சுபியும் இந்த நாலு கால் நண்பர்களுடன் என்ன செய்தார்கள் என்பதே இதன் கதை.  வித்தியாசமான கதைக்கருவை எடுத்துக் கொண்டு, சுவாரசியமாகக் கதை சொல்லியிருப்பது சிறப்பு. 

சிறகடிக்கும் பட்டாம்பூச்சி – சிறுவர் கதைகள்

ஆசிரியர் சு.பிரவந்திகா

வெளியீடு:- லாலிபாப் சிறுவர் உலகம், சென்னை-18. செல் 98412 36965

விலை ரூ 100/-.

இதில் 12 கதைகள் உள்ளன.  யார் ராணி என்று பூச்சிகளுக்குள் ஒரு நாள் போட்டி வந்துவிடுகிறது.  இன்னொரு கதையில் கொரோனா காலத்தில் வருமானமின்றிப் பட்டினி கிடக்கும் நண்பனுக்காகக் கூட்டாஞ்சோறு சமைக்கிறார்கள்.  கொரோனா பரவாமல் இருக்க, முகக்கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தை ஒரு கதை சொல்கிறது.

காக்கைகளுக்கும் சுப்ரமணி, பொன்னு,தமிழ் என்று பெயர் வைத்துக் கூப்பிடுகிறார்கள்.  மிக்சர் இல்லாமல் சாப்பிட மாட்டேன் எனச் சுப்ரமணி காக்கா அடம்பிடிக்கின்றது!

உயிர்களிடம் அன்பு செலுத்த வேண்டும், இயற்கையைக் காப்பாற்ற வேண்டும் என்ற கருத்துக்களைக் கருவாகக் கொண்டு சில கதைகள் உள்ளன. எல்லாமே வாசிக்க சுவையான கதைகள்.

இவர்கள் அனைவருமே இன்றைய தமிழ்ச் சிறார் இலக்கியத்தின் நம்பிக்கை நட்சத்திரங்கள்!  இவர்களுடைய படைப்புகளை வாங்கி ஆதரவளித்தால் எதிர்காலத்தில் சிறந்த எழுத்தாளர்களாகத் திகழ்வது உறுதி!

Share this: