பெண்கள் எழுதிய சிறுவர் நூல்கள் அறிமுகம்:-

Bookfair_pic

தற்காலத்தில் பெண்கள் பலர், சிறுவர் இலக்கியம் படைக்க முன்வந்துள்ளமை, வரவேற்க வேண்டிய நல்ல செய்தி.  குழந்தைகளுடன் பெரும்பான்மை நேரத்தைச் செலவிடும் பெண்களுக்குத் தாம் குழந்தைகளின் உளவியல் நன்கு புரியும்.  எனவே இவர்களுடைய நூல்களை வாங்கி, மென்மேலும் எழுத ஊக்குவிக்க வேண்டும்.  அப்போது தான் எதிர்காலத்தில் சிறந்த நூல்கள், தமிழ்ச் சிறார் இலக்கியத்துக்குக் கிடைக்கும்.

இன்னும் பெண்கள் பலர், சிறுவர் நூல்கள் வெளியிட்டிருக்கலாம். என் கவனத்துக்கு வந்த, நான் வாங்கி வாசித்த சில நூல்களை மட்டுமே, கீழே கொடுத்திருக்கிறேன். 

இது தரவரிசை பட்டியல் அல்ல.

நீலமரமும் தங்க இறக்கைகளும் –சிறுவர் கதைத் தொகுப்பு

ஆசிரியர் சரிதா ஜோ

வெளியீடு:- புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை-18 செல் – 8778073949.

விலை ரூ 75/-

ஆசிரியர் சரிதா ஜோ சிறந்த கதைசொல்லியும் கூட.இத்தொகுப்பில் எட்டுக் கதைகள் உள்ளன.  காட்டில் நடக்கின்ற 5 கதைகளில்  பலவிதமான மரங்கள், பறவைகள் பெயர்களைக் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்கின்றார், ஆசிரியர்.

பல கதைகளில் மனிதனால் இயற்கைக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் பேரழிவு குறித்த விழிப்புணர்வுச் செய்தியும், நேரடி அறிவுரையாக இல்லாமல், கதை வழியாகப் பகிரப்படுகின்றது.  அறிவியல், அதீதம், இயற்கை என எல்லாமும் கலந்து, குழந்தைகளை மகிழ்வூட்டும் சிறார் சிறுகதைத்தொகுப்பு.

இவருடைய பிற சிறுவர் நூல்கள்:-

மந்திரக் கிலுகிலுப்பை –

சுவடு பதிப்பகம், சென்னை-59 விலை ரூ 120/- (அண்மையில் இது இரண்டாம் பதிப்பு கண்டுள்ளது)

நிழலைத் திருடிய பூதம்

பாரதி புத்தகாலயம், சென்னை-18 செல் – 8778073949. விலை ரூ 60/-.

மந்திரக்குடை – சிறுவர் நாவல்

ஆசிரியர்:- ஞா.கலையரசி

வெளியீடு:- புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை-18.    செல் – 8778073949.

விலை ரூ 30/-

6-12 வயதினர்க்கானது.  இக்கதையில் ஒரு மாயாஜாலம் நிகழ்கின்றது. மந்திரச்சக்தி மிகுந்த ஒரு குடையின் உதவியால் வானத்தில் பறந்த தேவி எனும் சிறுமி, கை நழுவி விலங்குகள் நிறைந்த ஒரு காட்டில் விழுந்து விடுகின்றாள்.  இரவில் அந்தக் காட்டில் அவள் தங்க நேரிடுகின்றது. அங்கு அவளுக்குக் கிடைக்கும் அனுபவங்களே இக்கதை. 

மீண்டும் வீட்டுக்குத் திரும்ப அவளுக்குக் குடை சொன்ன மந்திரம் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் வானத்திலிருந்து விழுந்த எதிர்பாராத அதிர்ச்சியால், அவள் குடை சொன்ன மந்திரத்தை மறந்துவிட்டாள். மீண்டும் அவள் எப்படி வீட்டுக்குத் திரும்பினாள் என்பதை விறுவிறுப்பாக இந்நாவல் விவரிக்கின்றது.

காட்டின் இரகசியங்களையும், காட்டுயிர்களின் இயல்பையும் குழந்தைகள் அறிந்து கொள்ளும் விதமாக சுவாரசியமாக எழுதப்பட்டிருக்கும் இந்நாவல், குழந்தைகளுக்கு இயற்கை மீதான ஆர்வத்தை ஏற்படுத்தி, வாசிக்கத் தூண்டும்.

கொக்கரக்கோ – சிறுவர் பாடல்கள்

ஆசிரியர் – கீதா மதிவாணன்

வெளியீடு:-லாலிபாப்  சிறுவர் உலகம், சென்னை-18. விலை ரூ 75/-

செல் 88257 69056

இத்தொகுப்பில் 40 பாடல்கள் உள்ளன. குழந்தைகள் எளிதில் கற்றுக் கொண்டு பாடுவதற்கேற்ற வகையில் அவர்களுக்குத் தெரிந்த எளிமையான சொற்களிலும், இக்காலத் தலைமுறையை ஈர்க்கும் விதமாகப் புதிய பாடுபொருள்களுடனும் இப்பாடல்கள் அமைந்துள்ளன. இனிய ஓசையும், சந்தமும் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. 

எதையும் உரைநடையில் கூறுவதை விடப் பாடல் வடிவில் கூறுவது குழந்தைகளின் மனதில் எளிதில் பதியும்.  ஆங்கில நர்சரி பாடல்களையே பாடும் நம் குழந்தைகள், தாய்மொழியாம் தமிழில் பாடவும், நாக்கு பிறண்டு சொற்களைச் சரியாக உச்சரிக்கவும், குழந்தைக்குப் பாடல்கள் சொல்லிக் கொடுப்பது மிகவும் அவசியம்.  குழந்தைகளுக்குப் பாடல் வழியே கதை சொல்ல வசதியாக, 10 கதைப்பாடல்களும் இதில் உள்ளன. 

சென்னி முன்னா செண்பை கிராமம் – சிறுவர் நாவல்

ஆசிரியர் – மருத்துவர் சூர்யா

வெளியீடு:- லாலிபாப் சிறுவர் உலகம், சென்னை-18.  செல் 98412 36965

விலை ரூ 60/-

இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகளுக்குப் பொழுதுபோக்கு என்பது மொபைல் போனும், தொலைக்காட்சியும், கணினியும் தாம். வீட்டுக்கு வெளியே கிராமத்துக் குழந்தைகளுக்குப் பொழுதுபோக்க விளையாட்டுகள் ஏராளம் உள்ளன என்பதை  இந்நாவல் மூலம் விளக்கியிருக்கிறார் ஆசிரியர்.  மேலும் இயற்கையை நேசிக்க வேண்டும், பிற உயிர்களிடத்து அன்பு செலுத்த வேண்டும், பகுத்துண்டு வாழ்தல் சிறந்தது போன்ற உயரிய கருத்துக்களையும் கதைகளின் வழியே குழந்தைகள் மனதில் பதிய வைக்கின்றார்.

அரசு, இலந்தை, புளி ஆகிய மரங்கள், இரவில் மட்டுமே வெளிவரும் இரவாடி ஆந்தை, வீட்டில் வளர்க்கும் ஆடு, மாடு, கிராமத்து விளையாட்டுகள், பாரம்பரிய கலையான பாவை கூத்து, விடுகதைகள் என இந்நாவலில் சிறுவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கிராமத்துச் செய்திகள் ஏராளமுள்ளன. 

அம்முவின்  நாய்க்குட்டிப் பட்டாளம் – சிறுவர் கதைகள்

ஆசிரியர் இரா.மேகலா

வெளியீடு  லாலிபாப்  சிறுவர் உலகம், சென்னை-18. விலை ரூ 90/-

செல் 88257 69056

இத்தொகுப்பில் 10 சிறுவர் கதைகள் உள்ளன.  பிற உயிர்களை நேசித்து அன்பு செய்ய வேண்டும், அவற்றைத் துன்புறுத்தக்கூடாது, கடைகளில் விற்கும் செயற்கை உணவுப்பண்டங்களை உண்டால் உடல்நலம் கெடும், ஒருவர் பெயர் முக்கியமில்லை; அவர் செய்யும் செயலே முக்கியம், போன்ற கருத்துக்களைக் கதைகளின் வழியே சிறுவர்களுக்கு ஆசிரியர் சொல்லியுள்ளார். 

‘தன்னம்பிக்’கையில்’ தொங்கிய மல்லிகை’ சிறப்பான கதை. வறுமையான நிலையிலும் பிறரிடம் இரந்துண்ணாது, தன் உழைப்பின் மூலம் குடும்பத்தின் கண்ணியம் காக்கும் பொறுப்பான சிறுவனின் கதை.

சுட்டிக்கதைகள் – சிறுவர் கதைகள்

ஆசிரியர் – நீலாவதி

வெளியீடு- சுருதிலயம், சென்னை-88. செல் 9444124285

விலை ரூ125/-

இத்தொகுப்பில் 16 கதைகள் உள்ளன.  நீர்நிலைகளைக் காக்க வேண்டும், கார்பன் அளவைக் கட்டுப்படுத்த செடி வளர்க்க வேண்டும், மக்கும் குப்பை, மக்கா குப்பை போன்ற சுற்றுச்சூழல் கருத்துக்களை வலியுறுத்தும் சில கதைகள் இதில் உள்ளன.

பிற உயிர்களிடம் அன்பு செலுத்த வேண்டும், தாய் சொல்லைத் தட்டக்கூடாது  போன்ற அறநெறி கருத்துகளைக் கொண்ட கதைகளுடன்   எலி வடை சுட்ட கதை,சிப்ஸ் தின்னும் காக்கா போன்ற குழந்தைகளை மகிழ்விக்கும் சில கதைகளும் இதில் உள்ளன.

வழவழப்பு தாளில் வண்ணப்படங்களுடன் கூடிய அழகான வடிவமைப்பு.  .  மொழிநடை மட்டும் சற்றுக் கடினம்.

வாலைத் தேடிய பல்லி – சிறுவர் கதைகள்

ஆசிரியர் வ.விஜயலட்சுமி

வெளியீடு:- லாலிபாப் சிறுவர் உலகம், சென்னை-18. விலை ரூ 100/-

செல் 88257 69056.

இதில் 10 கதைகள் உள்ளன.  குழந்தைகளுக்கு மகிழ்வூட்டி, வாசிப்பில் ஈர்ப்பு ஏற்படுத்தும் விதத்தில் இக்கதைகள் சுவாரசியமாக உள்ளன. கம்பளி பூச்சியின் தவம் வண்ணத்துப்பூச்சியின் வாழ்வு சுழற்சியையும், ‘வாலைத் தேடிய பல்லி’ கதை, பல்லிக்கு வால் விழுந்து முளைக்கும் செய்தியையும் அழகாகச் சொல்கின்றன.

கரடி மேகத்தின் கண்ணீர் மழையாகப் பொழிவதும், அதன் சிரிப்பு  ஏழு வண்ணங்களாகப் பிரிந்து வானவில் தோன்றுவதும், கவித்துவமான கற்பனை.  

‘ஓணான் ஏன் தலையாட்டுகிறது? என்ற கதையில் அது தலையாட்டுவதற்கான காரணம் குறித்த ஆசிரியரின் நகைச்சுவை கலந்த கற்பனையும் சிறப்பு.  குழந்தைகள் வாசிப்புக்கேற்ற எளிய நடையில் சுவாரசியமான சிறுவர் கதைகள்.

Share this: