வாசிக்க வேண்டிய சில சூழலியல் நூல்கள் அறிமுகம்

Bookfair_2022_environ

பசுமைப்பள்ளி

ஆசிரியர்:- நக்கீரன்

வெளியீடு:- காடோடி பதிப்பகம்,6, விகேஎன் நகர், நன்னிலம்-610105.

விலை ரூ 100/-

செல் 8072730977.

நம் பிள்ளைகள் வகுப்புக்கு வெளியே கற்க வேண்டிய வாழ்வியல் பாடங்கள் ஏராளமாக உள்ளன.  அவர்களை வெளியே அழைத்துச் சென்று கற்பித்தால் என்ன என்ற சிந்தனையில் இந்நூல் பிறந்துள்ளது.

இதில் இயற்கை அறிவியல்,சுற்றுச்சூழல், மாசுபட்டு கிடக்கும் சூழலைக் காக்க வேண்டியதன் அவசியம் போன்றவை குறித்த பாடங்கள், சிறுவர்க்குக் கதை வழியாகவும், உரையாடல் மூலமாகவும் சுவாரசியமாகச் சொல்லப்படுகின்றன. இவற்றோடு நம் பழந்தமிழ் இலக்கிய மரபுகளையும், தொல்காப்பிய பார்வையையும் சேர்த்துச் சொல்லியிருப்பது சிறப்பு.

பசுமைப்பள்ளியின் முதல் பாடமே, வாசிக்கும் குழந்தைகளை மிகவும் ஈர்க்கும் விதமாக அமைந்துள்ளது.  “உலகின் ஆபத்தான விலங்கு உள்ளே உள்ளது; ஒவ்வொருவரும் மூடியைக் கவனமாகத் திறந்து பார்க்கவும்” என்ற அறிவிப்பைப் பார்த்துவிட்டுக் குழந்தைகள் ஒவ்வொருவராகப் பயந்து கொண்டே மூடியைத் திறந்து பார்க்கிறார்கள்.  உள்ளே எந்த விலங்கு இருந்தது என்றறிய ஆர்வமா?  அவசியம் இந்நூலை வாங்கி வாசியுங்கள். 

சூழலியல் குறித்து ஏராளமான தெரியாத தகவல்கள் இருப்பதால், சிறுவர்கள் மட்டுமின்றிப் பெரியவர்களும் வாசிக்க வேண்டிய புத்தகம்.    கெட்டியான அட்டையில் அழகான வடிவமைப்பு.

மழைக்காடுகளின் மரணம்

ஆசிரியர் நக்கீரன்

காடோடி பதிப்பகம்,6,விகேஎன் நகர், நன்னிலம்-610105. விலை ரூ 30/-

செல் 8072730977.

மழைக்காடு என்றால் என்ன?  அது எப்படியிருக்கும்? என்று குழந்தைகள் முதல் பெரியவர் வரை, அறிந்து கொள்ள உதவும் நூல்.  ஒரு காலத்தில் புவியின் மொத்தப்பரப்பில் 14 சதவீதம் இருந்த மழைக்காடுகள், தற்போது வெறும் 6 சதவீதமாகக் குறைந்துவிட்டன என்பதும், காட்டுத்தீ என்ற பெயரில், தொல்குடியினரின் இனப்படுகொலையும் நடக்கிறது என்பதும் அதிர்ச்சியூட்டும் செய்திகள்.

உலகில் மழைக்காடுகளைக் கொண்டிருப்பவை ஏழை நாடுகளே.  வருமானத்தைப் பெருக்க அந்நாடுகள் காட்டையழிக்கின்றன என்பது பொய்ப் பரப்புரையென்றும், காடழிப்பின் பின்னணியில், வளர்ந்த நாடுகளின் நுணுக்கமான பொருளாதார அரசியல் வலை பயங்கரமாகப்  பின்னப்பட்டுள்ளது என்றும், ஆதாரங்களுடன் இச்சிறு நூலில் விளக்கியுள்ளார் ஆசிரியர்.

தெரியாத செய்திகள் பல தெரிந்து கொள்ள உதவும் நூல் என்பதோடு, இம்மண்ணில் உயிர்கள் நிலைத்திருக்க மழைக்காடுகள் எவ்வளவு அவசியம் என்பதையும் உணர்த்தும் நூல்.

பல்லி – ஓர் அறிவியல் பார்வை

ஆசிரியர் கோவை சதாசிவம்

வெளியீடு:- குறிஞ்சி பதிப்பகம், 4/610, குறிஞ்சி நகர், வீரபாண்டி(அஞ்சல்)

திருப்பூர் – 641605

விலை ரூ 30/-

செல் 99650 75221.

நம் வீடுகளில் நம்முடனே வாழும் பல்லி குறித்து, எத்தனை வியப்பான அறிவியல் செய்திகள்? பல்லிக்கு இமைகள் இல்லை; பல்லியின் கால் பாதங்களில் 14000 க்கும் மேலான நுண்ணிய காற்றுப்பைகள் உள்ளன; இவற்றை உறிஞ்சு குழல்கள் போல் பயன்படுத்தி, சுவரில் ஒட்டிக்கொள்கின்றன போன்ற பலர்க்கும் தெரியாத செய்திகளை இந்நூலை வாசித்துத் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் பல்லியை அடிப்படையாக வைத்து நம் மக்களிடையே புழங்கும் மூடநம்பிக்கைகள் அனைத்தும் தவறு என்று இதில் ஆசிரியர் எடுத்துக்காட்டு தந்து விளக்கியுள்ளார். நம் மனப்பாடக்கல்வி முறைக்கும், அறிவியல் மனப்பான்மையோடு மாணவர்கள் அன்றாட நிகழ்வுகளை அணுகுவதற்கும் உள்ள நீண்ட இடைவெளியைச் சுட்டிக்காட்டி, அறிவியல் மட்டுமே உண்மையைத் தேடிப்பயணிக்கிறது என்று இந்நூலில் குறிப்பிட்டுள்ளார் ஆசிரியர்..

காலநிலை மாற்றம்: செய் அல்லது செத்துமடி

ஆசிரியர்:- ஆதி வள்ளியப்பன்

வெளியீடு:- பாரதி புத்தகாலயம், சென்னை-18.  விலை ரூ 45/-

செல்:- 8778073949.

காலநிலை மாற்றம் என்பது மனித குலத்துக்கு வாழ்வா சாவா என்பதை நிர்ணயிக்கும் மாபெரும் சுற்றுச்சூழல் பிரச்சினை. மனிதர்கள் இயற்கையை அழித்ததன் விளைவாக வாழ்வாதார அமைப்புகள் முற்றிலுமாகச் சீர்குலைந்து சிதையத் தொடங்கி விட்டதன் வெளிப்படையான அறிகுறி தான், இந்தக் காலநிலை மாற்றம். வளிமண்டலத்தில் பசுங்குடில் வாயுக்களின் அளவு அதிகமாவதே புவி வெப்பமடைவதற்கு முக்கிய காரணம்.

பருவநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக் குழு (ஐபிசிசி) அமைப்பு குறித்தும், அதன் மதிப்பீட்டு அறிக்கைகள் குறித்தும் இரண்டு கட்டுரைகள் விளக்குகின்றன. இந்தக் காலநிலை மாற்றத்தினால் இந்தியாவுக்கு என்னென்ன ஆபத்துகள் ஏற்படும்?  அதன் தீர்வுகள் யாவை? என்று ஒரு கட்டுரை விளக்குகிறது. 

2021ல் ஸ்காட்லாந்து கிளாஸ்கோவில் நடந்த 26வது பருவநிலை மாநாட்டில் தமது பேச்சால் உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்த திருவண்ணாமலையைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி வினிஷா குறித்தும், இந்நூலில் தெரிந்து கொள்ள முடிகிறது.

புவியில் நம் மனிதகுல வாழ்வுக்குப் பெரும் சவாலாக இருக்கும் காலநிலை மாற்றம் குறித்து, நம் இளையதலைமுறை அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.  அதற்கு இந்நூல் பெரிதும் துணை செய்யும்.

Share this:

2 thoughts on “வாசிக்க வேண்டிய சில சூழலியல் நூல்கள் அறிமுகம்

  1. பசுமை பள்ளி, மழைக்காடுகளில் மரணம், பல்லி அறிவியல் தகவல்கள் ஆகியவற்றை கண்டு வியப்பு மேலிட்டது . நிச்சயமாக படிக்க வேண்டிய புத்தகங்கள். தகவல்களுக்கு மிக்க நன்றி .

    1. கருத்துக்கு மிக்க நன்றி கீதா!

Comments are closed.