சென்னையில் இன்று (27/12/2024) மாலை 48வது புத்தகத்திருவிழா தொடங்கியது. 12/01/2025 வரை இது நடைபெறும்.
சென்னை நந்தனம் (ஒய்.எம்.சி.ஏ) உடற்கல்வியியல் கல்லூரி வளாகத்தில் துவங்கப்பட்டுள்ள இத்திருவிழா, வார நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 8.30 வரையிலும், விடுமுறை நாட்களில் முற்பகல் 11 மணி முதல் இரவு 8.30 வரையிலும் நடைபெறும். பபாசி (BAPASI) எனச் சுருக்கமாகச் சொல்லப்படும் தென்னிந்தியா புத்தக விற்பனையாளர் & பதிப்பாளர் சங்கத்தால் நடத்தப்படும் இத்திருவிழாவுக்காக 900 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
அனைத்துப் புத்தகங்களுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி தரப்படும். குழந்தைகளின் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச நுழைவு டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
வாய்ப்புள்ள பெற்றோர் அவசியம் குழந்தைகளுடன் இந்தப் புத்தகத் திருவிழாவுக்குச் சென்று வாருங்கள். அங்கே குழந்தைகள் வாங்க விரும்பும் ஓரிரு புத்தகங்களையாவது வாங்கிக் கொடுங்கள். புத்தகம் வாங்குவதற்காகும் செலவு செலவல்ல; அது அறிவுக்கான முதலீடு! ஒவ்வொரு வீட்டிலும் ஓர் அலமாரியிலாவது குழந்தைகளின் புத்தகங்களை வாங்கி வைத்து நூலகம் அமைத்துக் கொடுங்கள். பாடப்புத்தகம் தாண்டிய வாசிப்பே குழந்தைகளின் பன்முகத் திறமையை வளர்க்கும்.
இந்தக் காலக் குழந்தைகளுக்காகப் பல புதிய நூல்கள் வெளியாகியுள்ளன. பழைய காலப் பஞ்சதந்திரக் கதைகள், தெனாலிராமன் கதைகள், ராமாயணம், மகாபாரதக் கதைகள் போன்றவற்றையே மீண்டும் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்காமல், நவீன அறிவியல் சிந்தனைகளுடன் கூடிய நூல்களை வாங்கிக் கொடுங்கள்.
பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரன், வானம், நிவேதிதா, தமிழ்நாடு பாடநூல் கழகம், சுட்டி யானை, தூலிகா, தாரா, ப்ரதம், நேஷனல் புக் டிரஸ்ட், அறிவியல் வெளியீடு உள்ளிட்ட அரங்குகளில் குழந்தைகளுக்கான புத்தகங்கள் கிடைக்கும்.
நூற்றுக்கு மேற்பட்ட குழந்தைகளின் வயதுக்கேற்ற நூல் அறிமுகங்கள், எங்கள் சுட்டி உலகத்தில் உள்ளன. நூல் தேர்வு செய்ய எங்கள் நூல் அறிமுகத்தையும், நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சிறு வயதிலேயே வாசிப்புப் பழக்கத்தைக் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யுங்கள். மொபைல், இணையம் போன்றவற்றில் நேரத்தை வீணாக்கும் குழந்தைகளுக்கு வாசிப்பு சுவையை அறிமுகம் செய்வதே, சிறந்த மாற்று வழியாக அமையும்.
இனிய வாழ்த்துகளுடன்,
ஆசிரியர்,
சுட்டி உலகம்.