விலங்குகளின் பள்ளிக்கூடம்

vilangugalin pallikoodam book cover

தலைமையாசிரியராகப் பணிபுரியும் கதாசிரியர், பள்ளிக்கூடம் குழந்தைகளுக்கு விருப்பமானதாக இல்லாமல், வெறுக்கக் கூடிய இடமாக உள்ளது;  எனவே குழந்தைகள் விரும்பும் பள்ளியை, அவர்களுக்குப் பிடித்தமான விலங்குகள் மூலம் படைக்கலாம் என முடிவெடுத்தேன்;  அதன் விளைவு தான் இந்நாவல் என்று தம் முன்னுரையில் கூறியிருக்கிறார்.

தலைமையாசிரியராக சிங்கம் இருக்கக்கூடாது என்ற நான்காம் வகுப்பு மாணவனின் ஆசைப்படி, விலங்குகளின் பள்ளிக்கூடத்தில் குள்ளநரியை தலைமை ஆசிரியராகப் படைத்திருக்கிறார். ஒட்டகசிவிங்கியும், காண்டாமிருகமும் ஆசிரியராக இருக்கும் அப்பள்ளியில், சிங்கம், சிறுத்தைப்புலி, கரடி,மான்,யானை, முயல்,கழுதைப்புலி போன்ற விலங்குகள் படிக்கின்றன.  இடையில் சில ஆப்பிரிக்க கதைகளையும் இதில் சேர்த்திருக்கிறார்..

விலங்குகள் அனைத்தும் ,மந்திரக்கயிறு மூலமாகத் தங்கள் உருவத்தை மறைத்துக் கொண்டு, பக்கத்திலுள்ள நகரத்துக்குச் சென்று, மனிதர்களின் உணவுப் பழக்கத்தைக் கவனித்து விட்டுக் காடு திரும்புகின்றன.  மறுநாள் பள்ளியில் அதைப் பற்றி விரிவாக விவாதிக்கின்றன..

செயற்கையாக வண்ணங்கள் ஏற்றப்பட்டு, பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்கப்படும் உணவுப் பண்டங்களைச் சாப்பிட்டால் புற்று நோய் வரும் ஆபத்து உண்டு என்ற கருத்தை, அந்த விவாதத்தின் வழியாக ஆசிரியர் வாசிப்பவர் மனதில் பதிய வைக்கின்றார்.

குழந்தைகளின் உணவு குறித்து விழிப்புணர்வூட்டுவதோடு, சிறுவர்கள் வாசிக்கத் தோதாக எளிய நடையிலும் அமைந்துள்ள சிறார் நாவல்.

வகைசிறுவர் நாவல்
ஆசிரியர்க.சரவணன்
வெளியீடுபுக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை 9444960935
விலை40/-
விலங்குகளின் பள்ளிக்கூடம்
Share this: