உண்மை மற்றும் கற்பனைகளின் கலவையான இந்நூலில், 10 வரலாற்றுக் கதைகள் உள்ளன. தமிழில் சிறார்க்கான வரலாற்றுக் கதைகள் மிகவும் குறைவு. பழங்கால இந்திய வரலாற்று உண்மைகளைக் கற்பனையான கதை மாந்தர்கள் மூலம் சுவாரசியமாகச் சொல்லியுள்ளார் ஆசிரியர்.
அலெக்சாண்டர் படையெடுப்புக்குப் பின், கிரேக்க இந்தியக் கலப்பினத்தில் பிறந்த குழந்தைகள் கலப்பின அடையாளத்தால் கிண்டல் செய்யப்பட்டார்களா? வெளிநாட்டிலிருந்து நாலந்தா பல்கலைக்கழகத்தில் வந்து தங்கிய மாணவர்களுக்கு வீட்டின் ஏக்கம் இருந்ததா? இவை போன்று பண்டைய மனிதர்களின் அன்றாட வாழ்வியல் குறித்து, அவருக்கு எழுந்த சந்தேகங்களுக்குக் கற்பனை கதை மாந்தர் மூலம், விடை காண முயன்றுள்ளார் ஆசிரியர்.
கி.மு.3500 க்கு முன் வேட்டை சமூகமாக இருந்த போது, மனிதன் எப்படி வேட்டையாடினான்? காட்டு நாய் எப்படிக் கற்கால மனிதனால் பழக்கப்பட்டு, வீட்டு விலங்காயிற்று என்பதைக் கதை மூலம் விளக்குகிறது, ‘வேட்டை’ என்ற தலைப்பிலான முதல் கதை. கற்கால மனிதனின் புதைகுழிகளில், நாயும் உடன் புதைக்கப்பட்டிருப்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளதாம்!
‘நகரத்தில் ஒரு பட்டணத்தான்’ என்ற கதையில், கிராமத்திலிருந்து விளைந்த தானியத்தை விற்பதற்காகத் தந்தையும், மகனும் மாட்டுவண்டி கட்டிக் கொண்டு நகரத்துக்குப் போகிறார்கள். முதல் முறையாகப் பட்டிணம் செல்லும் மகன், அங்குள்ள நேர்த்தியான சாலை அமைப்பு, பெரிய சந்தை, கட்டிடஅமைப்பு, முத்திரை பட்டறை பெண்கள் அணிந்திருந்த அணிகலன்கன் எனப் பலவற்றையும் பார்த்து வியப்புக்குள்ளாகிறான். அவனது பார்வையின் வழியாகச் சிந்து சமவெளி நாகரிகத்தின் பல்வேறு சிறப்புகள் சொல்லப்பட்டுள்ளன.
அக்பர் விளையாடிய ஷாகன் விளையாட்டு, சோழ மன்னர்களின் கப்பல் கட்டும் திறன் செழித்திருந்த அவர்களுடைய கடல் வாணிகம், வெள்ளையருக்கு எதிராக ஏற்பட்ட சுதந்திர தாகம், பிறப்பால் தாழ்ந்தவள் என்று சொல்லிக் கோவிலுக்குள் அனுமதிக்கப்படாத தீண்டாமைக் கொடுமை எனப் பல்வேறு வரலாற்று உண்மைகளைப் பேசுகின்றது, இந்நூல்.
ஒவ்வொரு கதைக்குப் பக்கத்திலும், பெட்டிச் செய்தியாக, அக்கதை சம்பந்தப்பட்ட வரலாற்று உண்மைகளைக் கொடுத்துள்ளது, சிறப்பு. The Forbidden Temple: Stories from the Past என்ற ஆங்கில நூலிலிருந்து . ஜே.ஷாஜஹான் எளிய சரளமான நடையில் அருமையாக மொழிபெயர்த்திருக்கிறார் .
சிறுவர்கள் வாசிப்பதற்கு ஏற்றவாறு, பண்டைய இந்திய வரலாற்றின் சில பக்கங்களைச் சுவையாக எடுத்துரைக்கும் நூல்.
வகை | மொழிபெயர்ப்பு (வரலாற்றுக் கதைகள்) |
ஆசிரியர் | த.வெ.பத்மா – தமிழில் ஜே.ஷாஜஹான் |
வெளியீடு | எதிர் வெளியீடு,பொள்ளாச்சி, (+91) 9942511302 |
விலை | ₹160/- |