தமிழ்க் குழந்தை இலக்கியம்

Tamil_kulandai_pic

(விவாதங்களும் விமர்சனங்களும்)

சிறார் எழுத்தாளர் சுகுமாரன் எழுதிய ‘தமிழ்க் குழந்தை இலக்கியம்’ என்ற இந்நூலில், குழந்தை இலக்கியம் குறித்த 15 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. 

“தமிழ்க் குழந்தை இலக்கியத்தின் இன்றைய நிலை, பிரச்சினைகள், தீர்வுகள் பற்றிப் பெற்றோர், ஆசிரியர், எழுத்தாளர்களின் கவனத்தை இந்நூல் கோருகின்றது; இலக்கியத்தின் மிக முக்கியமான துறையைக் குறித்து, விவாதங்களை எழுப்ப முயன்றிருக்கிறேன். இது முழு ஆய்வு நூலல்ல; அதன் தொடக்கம், அவ்வளவே” என்று இந்நூலின் ஆசிரியர் தம் முன்னுரையில் எழுதியுள்ளார்.

“தமிழில் குழந்தை இலக்கியத்தின் இன்றைய நிலை” என்ற முதல் கட்டுரையில், தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தை இலக்கியத்தில் சிறுவர் பாடல்,நாடகம், கதைகள்,சிறுவர் இதழ்கள் ஆகியவை எவ்வாறு செழிப்புற்றிருந்தன என்பதை, எடுத்துக்காட்டுகள் தந்து விளக்கியுள்ளார் ஆசிரியர்.

“சுமார் 50 சிறுவர் இதழ்கள் தமிழில் வந்த காலம் அது. பாலியர் நேசன், அணில், டமாரம், கண்ணன், கரும்பு, அம்புலிமாமா, கோகுலம் போன்ற பத்திரிக்கைகள் 25 ஆயிரம் பிரதிகளுக்கு மேல் விற்பனை ஆகியிருக்கின்றன. சிறுவர்கள் காசு கொடுத்து வாங்கிப் படித்திருக்கிறார்கள்” என்று சொல்லும் ஆசிரியர், “இன்று நீரின்றி வாடும் பயிர்போல் தமிழில் குழந்தை இலக்கியத்தின் நிலை உள்ளது. வாருங்கள் காப்போம்” என்று வேதனையுடன் கட்டுரையை முடிக்கிறார்.

இரண்டாவது கட்டுரை தமிழ்க் குழந்தை இலக்கியத்தின் தளர்ச்சிக்கான காரணங்களை அலசுகிறது. மாறிவரும் சமூகத்துக்கேற்ப புதிய படைப்புகள் வராமலிருப்பதும், அரசு நூலகம், பள்ளி நூலகம் என்ற சந்தையைக் குறிவைத்துக் குறுகிய காலத்தில் தயாரிக்கப்படும் வணிகப்பண்டமாகக் குழந்தை இலக்கிய நூல்கள் மலிவடைந்து விட்டதும் முக்கிய காரணங்கள் என்கிறார் ஆசிரியர்.

“இப்போது குழந்தைகளை நாம் ஓடும் முயல்களாக்கிவிட்டோம்.  வாழ்க்கை பந்தய மைதானமாகி விட்டதால், குழந்தைகளைப் போட்டிகளுக்குத் தயார்ப்படுத்த வேண்டியிருக்கிறது. குழந்தைகள் இலக்கியம் படித்துக் கொண்டிருந்தால், கல்வி, வேலை வாய்ப்பு போட்டிகளில் பங்கேற்க நேரம் கிடைக்குமா? அதுமட்டுமில்லாமல் போட்டி உலகில் கதைப்புத்தகம் படிப்பதற்கான இடமென்ன?  இது குறித்துப் பெற்றோரும் ஆசிரியரும் கொண்டுள்ள பார்வைகள், தமிழில் குழந்தை இலக்கியத்தின் வளர்ச்சியைப் பாதித்துள்ளன” என்ற ஆசிரியரின் கூற்று சிந்திக்கத்தக்கது.

குழந்தை இலக்கியத்துக்கான குறிக்கோள் பற்றி, மூனறாவது கட்டுரை பேசுகிறது.  “தமிழ்க்குழந்தை இலக்கியத்தின் குறிக்கோள்கள் கவிமணி,பாரதி.அழ.வள்ளியப்பா ஆகியோரிடமிருந்து பயிலப்பட்ட ஒன்றாகவே இருக்கின்றது. குழந்தை இலக்கியத்தில் குழந்தையின் உணர்வுகளும், எண்ணங்களும், செயல்களுமே வெளிப்பட வேண்டும்.  ஆனால் வெளிப்பட்டவை எல்லாம் குழந்தை எழுத்தாளரின் எண்ணங்களும் உணர்வுகளுமே! குழந்தை இலக்கியம் குழந்தையை விடுதலை செய்ய வேண்டும். அதற்கு முதலில் தமிழ்க் குழந்தை இலக்கியத்தை அதன் பழைய குறிக்கோள்களிலிருந்து விடுதலை செய்வோம்” என்கிறார் ஆசிரியர்.

குழந்தை இலக்கியத்தில் கதைப்பாடல்களின் இடம் பற்றி, நாலாவது கட்டுரை விவரிக்கின்றது. கற்பித்தலில் குழந்தை இலக்கியம் என்ற கட்டுரை குழந்தைகளுக்கான மழலைப்பாடல்கள் கற்பித்தலைக் கொண்டாட்டமாக மாற்ற உதவ வேண்டும் என்றும், இதற்குப் பள்ளி ஆசிரியரின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் வலியுறுத்துகிறார் ஆசிரியர். 

குழந்தைகளுக்குக் கதை சொல்லும் கதைசொல்லியின் பங்களிப்புக் குறித்து, 6 வது கட்டுரையும், குழந்தைகளின் வாசிப்பை வளர்த்தெடுக்க நூலகம் ஆற்றும் பங்குப் பற்றி, 7 வது கட்டுரையும் விளக்குகிறது. 8 வது கட்டுரை நம் குழந்தை இலக்கியத்தில், சோவியத் குழந்தை இலக்கியத்தின் தாக்கம் பற்றிச் சான்றுகளுடன் விவரிக்கிறது.

9 வது கட்டுரையில், ‘சாகித்திய பால புரஸ்கார் விருது’ வென்ற முதல் நான்கு படைப்புகளை வாசகர்களுக்கு ஆசிரியர் அறிமுகம் செய்கின்றார். 10 வது கட்டுரை தமிழில் தற்போதுள்ள உயர்ந்த மனிதர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்கள் குழந்தைகள் வாசிக்க ஆர்வம் ஊட்டக்கூடியதாக இல்லை என்று சொல்லும் ஆசிரியர், குழந்தை இலக்கியத்தில் வாழ்க்கை வரலாற்று நூல்களின் முக்கியத்துவத்தைத் தமிழ்ச்சமூகம் உணருவது மிக அவசியம் என்றும் வலியுறுத்துகிறார்.

குழந்தை இலக்கியத்தில் பாடல், கதை, நாடகம் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து மூன்று கட்டுரைகள் பேசுகின்றன. குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா குறித்து ஒரு கட்டுரையும், சிறார் எழுத்தாளர் லூர்து எஸ்.ராஜ் பங்களிப்புக் குறித்து ஒரு கட்டுரையும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

தமிழில் சிறுவர் இலக்கியம் குறித்து அறிய விரும்புவோர்க்கும், இது குறித்து ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்க்கும் பெரிதும் பயன்படக்கூடிய நூல். 50 ஆண்டுகளுக்கு முன் டாக்டர் பூவண்ணன் எழுதிய ‘குழந்தை இலக்கிய வரலாறு’ என்ற நூலுக்குப் பிறகு, குழந்தை இலக்கியம் குறித்துத் தமிழில் எழுதப்பட்ட மிக முக்கியமான நூல் இது எனலாம்.

வகைகட்டுரை
ஆசிரியர்சுகுமாரன்
வெளியீடுதாமரை பப்ளிகேஷன்ஸ்(பி) லிட் அம்பத்தூர், சென்னை 98. 044 26241288, 26258410,26251968
விலைரூ 115/-
Share this: