வெள்ளை பலூன்  (The white balloon)

The white balloon_pic

‘வெள்ளை பலூன்’1995 ஆம் ஆண்டு வெளிவந்த, ஈரானிய திரைப்படம்.  உலகளவில் கேன்ஸ் திரைப்படவிழா விருது உட்பட, பல விருதுகளைப் பெற்ற படம். இதன் திரைக்கதையை எழுதியவர், அப்பாஸ் கியாரோஸ்டமி (Abbas Kiarostami) என்பவர். இதன் இயக்குநர், ஜாபர் பனாஹி (Jaffer Panahi). உலகளவில் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கத்தக்க, சிறந்த 50 படங்களுள், இதுவும் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

படத்தின் முதல் காட்சி டெஹ்ரான் கடைத்தெருவில் துவங்குகிறது. புத்தாண்டு துவங்க இன்னும் சில மணி நேரங்களே இருக்கின்றன. ஏழு வயது ரஸியா என்ற சிறுமியும், அவள் அம்மாவும் கடைத்தெருவில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.      

அலங்கார மீன் விற்பனையகத்தில், ஒரு அழகான குண்டு தங்க மீனைப் பார்த்த ரஸியா, அதை வாங்கிக் கொடுக்குமாறு, அம்மாவை நச்சரிக்கிறாள். புத்தாண்டு துவங்கும் சமயம், புது அலங்கார மீனை வாங்குவதோ, குளத்திலிருந்து புது மீனைப் பிடித்து வீட்டுக்குக் கொண்டு வருவதோ, ஈரானியர்களின் வழக்கம். “வீட்டிலுள்ள சிமெண்ட் தொட்டியில், ஏற்கெனவே பல தங்க மீன்கள் உள்ளன; அவற்றைப் பிடித்துக் கண்ணாடி ஜாடியில் போட்டுக் கொள்” என்று அவள் அம்மா சொல்கிறார். 

“வீட்டில் இருப்பவை ஒல்லியாக இருக்கின்றன; கடையில் இருப்பது கொழு கொழு என்று அழகாக இருக்கிறது; துடுப்புகள் அதிகம் இருப்பதால், நீந்தும் போது, மிகவும் அழகாக இருக்கின்றது; எனவே அது தான் வேண்டும்” என ரஸியா அடம் பிடிக்கின்றாள். ஆனால் அம்மா அவள் சொல்வதைச் சட்டை செய்யாமல், சாமான்களைத் தூக்கிக் கொண்டு, மகளையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்குத் திரும்புகிறார்.

அம்மா வாங்கிக் கொடுக்காததால், ரஸியா மிகவும் வருத்தத்துடன் இருக்கிறாள். அவளுடைய அண்ணன் அலிக்கு, ஒரு தங்க மீனுக்கு 100 தோமானைச் செலவு செய்வது, பண விரயம் என்று தோன்றுகிறது. ஈரானில் ஒரு தோமான் (toman) என்பது,10 ரியாலுக்குச் சமம். ஆனாலும் தங்கைக்காக அம்மாவிடம் பேசி, பணம் வாங்கித் தருகிறான். 

கடைசியாகத் தம்மிடம் இருந்த ஒரே ஒரு 500 மதிப்புள்ள தோமான் பணத்தை, அம்மா அலியிடம் கொடுக்கிறார். மீனை வாங்கிவிட்டுப் பாக்கியைக் கொண்டு வரச் சொல்கிறார்.  ரஸியா மகிழ்ச்சியுடன் அந்தப் பணத்தை ஒரு கண்ணாடி ஜாடிக்குள் போட்டுக் கொண்டு, தெருவில் ஓடுகிறாள். வழியில் பாம்புகளை வைத்துக் கொண்டு, இருவர் வித்தை காட்டிக் கொண்டிருக்கின்றனர். சிறுமியும் கூட்டத்துக்குள் புகுந்து, வேடிக்கை பார்க்கிறாள். 

“பாம்புக்குக் காசு போடுங்க; அப்ப தான் வெளியில வரும்” என்று சொல்லிக் கொண்டே சுற்றி வரும் வித்தைக்காரன், திடீரென்று அவள் ஜாடிக்குள் கையை விட்டு, அந்தப் பணத்தை எடுத்துவிடுகிறான். பணத்தை எடுத்துப் போய் பாம்பு இருக்கும் பிரம்பு பெட்டிக்கருக்கில் வைத்து விடுகின்றான். ‘சின்னப் பெண்ணை ஏமாற்றி, இப்படிப் பணத்தைப் பறித்துக்   கொண்டு விட்டானே!’ எனப் படம் பார்க்கும் நமக்கும், பதற்றமாக இருக்கிறது.

ரஸியாவுக்கு ஆத்திரமும், அழுகையுமாக வருகின்றது. பணத்துக்குப் பக்கத்தில் பாம்பு இருப்பதால், போய் எடுக்கவும் பயம். அழுது கொண்டே தன் பணத்தைத் திரும்பத் தருமாறு கேட்கின்றாள். முடிவில் நல்ல வேளையாக அந்த வித்தைக்காரன், பணத்தைத் திரும்பத் தந்து விடுகின்றான். அவள் அதை வாங்கிக் கொண்டு, ஒரே ஓட்டமாக ஓடுகின்றாள்.

மீன் விற்கும் கடைக்காரரிடம் சென்று, தான் ஆசைப்பட்ட அந்த மீனைத் தருமாறு கேட்கின்றாள்.  அவர் இப்போது அதன் விலை 200 தோமான் என்கின்றார். ‘ஏற்கெனவே கேட்ட போது, 100 தான் சொன்னீர்கள்’ என்று அவள் சொல்லவே, அவர் சரியென்று குறைத்துக் கொடுக்கச் சம்மதிக்கிறார். ஆனால் அப்போது அவள் கையில் இருந்த பணத்தைக் காணோம். “வரும் வழியில் எங்காவது விழுந்திருக்கும்; போய்த் தேடி எடுத்து வா” என்கிறார் அவர்.

அந்தக் கடைக்கு வந்திருந்த ஒரு பாட்டி, அவளை அழைத்துச் செல்கிறார்.  அவள் வந்த வழி நெடுக, இருவரும் போய்த் தேடுகின்றார்கள்.  பூட்டப்பட்டிருக்கும் ஒரு கடையின் முன்புறக் கிரில்லுக்குக் கீழே, அவள் பணம் மாட்டிக் கொண்டு கிடப்பதைக் கண்டுபிடிக்கிறார்கள். ஆனால் அவள் குனிந்து அதை எடுப்பதற்குள், ஒருவன் ஸ்கூட்டரை வேக வேகமாக பிளாட்பாரத்தில் ஓட்டிச் செல்கிறான். அந்த அதிர்வில், கையை விட்டு எடுக்க முடியாத தூரத்துக்குப் பணம் கீழே போய் விழுந்து விடுகின்றது.

பக்கத்துக் கடைக்காரரிடம் சென்று, பூட்டியிருக்கும் கடை பற்றி விசாரிக்கிறார்கள்.  புத்தாண்டு விடுமுறை முடிந்து தான், அந்தக் கடையைத் திறப்பார்கள் என்று அவர் சொல்கிறார். அந்தப் பணத்தைச் சிறுமிக்குக் கொடுத்து உதவுமாறும், அக்கடை திறந்தவுடன் அதை எடுத்துக் கொள்ளுமாறும், அந்தப் பாட்டி அவரிடம் சொல்கின்றார்.

அவரிடம் சரியென்று சொல்லும் அந்த நபர், பாட்டி போனபின் சிறுமி நிற்பதைச் சட்டை செய்யாமல், தொடர்ந்து ஒரு வாடிக்கையாளரிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றார். நின்று நின்று பார்த்த பிறகு, அவர் பணம் கொடுத்து உதவுவார் என்ற நம்பிக்கை சிறுமிக்குப் போய்விடுகின்றது.  மீண்டும் கவலையுடன், அந்தக் கடைக்கு முன்புறம் வந்து உட்கார்ந்து கொள்கின்றாள்.

அவளைத் தேடிக்கொண்டு அண்ணன் அலி வருகின்றான். பணம் கீழே விழுந்ததை அறிந்து, அந்தக் கடைக்காரரைப் போய்ப் பார்க்கின்றான்.  ஆனால் அவர் அவனுக்கு உதவத் தயாராக இல்லை என்பதைத் தெரிந்து கொள்கின்றான். அவர் கடையைப் பூட்டும் போது, ஷட்டரை இறக்கப் பயன்படுத்தும் கம்பை வாங்கி வந்து, அந்தப் பணத்தை எடுக்கப் பார்த்தும் முடியவில்லை. அவரிடம் பூட்டிய கடையின் உரிமையாளர் முகவரியைக் கேட்டுப் பெறுகின்றான் அலி.  அவர் வீட்டுக்கு ஓடிச் சென்று, விஷயத்தைச் சொல்கின்றான்.  அவர் குளித்துக் கொண்டு இருப்பதாகவும், அதற்குப் பிறகு வருவார் என்றும், அவர்கள் வீட்டில் சொல்கின்றார்கள்.

கம்பில் ஏதாவது பசையை வைத்து ஒட்டிப் பணத்தை எடுக்கலாம் என இருவரும் முடிவு செய்கின்றார்கள்.  தெருவில் பலூன் விற்கும் ஆப்ஹன் பையன், அவர்களுக்கு உதவ முன் வருகின்றான். அவனுடைய பலூன் கம்பை வைத்துப் பணத்தை எடுக்கப் பார்க்கிறார்கள். அவன் ஓடிச் சென்று பப்பிள்கம் பாக்கெட் ஒன்றை வாங்கி வருகின்றான்.

அந்த பப்பிள்கம்மை மூவரும் வேகவேகமாகத் தின்று, அந்தப் பசையை ஒட்டிப் பணத்தை எடுக்க, ஒருவர் மாற்றி ஒருவர் முயலுகின்றனர். முடிவில் அலி வெற்றிகரமாகப் பணத்தைக் கம்பினால் தொட்டு மேலே தூக்குகின்றான். மேலே கம்பிக்கருகில் வந்தவுடன், ரஸியா கையை விட்டுப் பணத்தை எடுத்துவிடுகின்றாள்.  உடனே அண்ணனும், தங்கையும் மீன் கடைக்கு ஓடுகின்றார்கள். கம்பின் மேலே ஒற்றை வெள்ளை பலூனுடன், அந்தப் பையன் அவர்களுக்காக அங்குக் காத்திருக்கிறான்.

இருவரும் மீனை வாங்கிக் கொண்டு, அங்கு வருகின்றார்கள். அவனிடம் எதுவும் பேசாமலே, நன்றி எதுவும் சொல்லாமலே அவர்கள் வீட்டுக்குப் போய்விடுகின்றார்கள். அவன் அங்கேயே அமர்ந்து இருக்கின்றான். அப்போது புத்தாண்டு துவங்கிவிட்டதாக, ஒலிபெருக்கியில் அறிவிப்பு வருகின்றது. எங்கும் புத்தாண்டுக் கொண்டாட்டம்! அவன் அந்த ஒற்றை பலூனுடன் அங்கிருந்து நகர்ந்து செல்லும் காட்சியுடன், படம் முடிகின்றது. அக்காட்சி நம் மனதைக் கனக்கச் செய்கிறது.

படம் முழுக்க அப்பணத்தை எடுக்கச் சிறுவர்கள் படும் பாடு, விரிவாகக் காட்டப்படுகின்றது. நம் பிரச்சினை முடிந்தவுடன், அதற்கு உதவி செய்தவர்களையும், உதவியையும் மறப்பது தவறு என்ற முக்கியமான செய்தி, இப்படத்தைப் பார்ப்பவர்களுக்குக் கிடைக்கின்றது. சிறுவர் முதல் பெரியவர் வரை, அனைவரும் பார்க்க வேண்டிய சிறந்த படம். 

(ஜூன் 2022 பொம்மி இதழில் எழுதியது)

Share this: