செவ்வாயில் ஓர் சாகசம் – செ.அனந்தராஸ்ரீ (12 வயது)

Sevayil_pic

(சுட்டி உலகமும், லாலிபாப் சிறுவர் உலகமும் இணைந்து நடத்திய சிறுவர்க்கான கதைப்போட்டியில் ஊக்கப்பரிசு பெற்ற கதை)

இரவு நேரம். அனைவரும் இரவின் மடியில் தங்களை மறந்து, தூங்கிக் கொண்டிருந்தனர். நேரம் போவதே தெரியாமல் அனு பிராஜக்ட் வேலைகளில் மூழ்கி, தூக்கத்தை மறந்து தன் மேஜையின் மேல் அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தாள். திடீரென்று மின்சாரம் போய்விட்டது.

இதனால், சற்று நேரம் தன் பால்கனியில் நின்று வானில் ஒளி விட்டுக்கொண்டிருந்த நட்சத்திரங்களின் அழகை ரசித்துக் கொண்டே இருந்தாள். அப்போது வானிலிருந்து கண்களைக் கூசும் வண்ணம் ஒரு சிறிய விமானம் ஒன்று அவளை நோக்கி வர ஆரம்பித்துக் கொண்டிருந்தது. அனு மிகவும் ஆச்சரியத்துடனும் சற்றே பயத்துடனும் அதைப் பார்த்தாள்.

அந்த விமானம் அவள் பால்கனியில் வந்து நின்று, அவளுடன் பேசத் தொடங்கியது. “நீங்கள் எங்கள் செவ்வாய் கிரகத்தின் விருந்தாளியாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளீர்கள்; ஆகையால் எங்கள் செவ்வாய் கிரகத்தின் சார்பாக வரவேற்க வந்துள்ளேன்” எனக் கூறியது.

அனுவுக்கு அளவுகடந்த மகிழ்ச்சி! ஏனெனில் அவளது இந்தப் பயணம் அவளது பிராஜக்டிற்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று பெரிதாகக் கனவு கண்டாள். மிகவும் மகிழ்ச்சியுடன் அவள் அந்த விமானத்தில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

அது காடுகள், மலைகள் தாண்டி சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு பெரிய நீர்வீழ்ச்சியைக் கண்டு, அதை கடக்க முடியாமல் அந்த விமானம் தடுமாறியது. உடனே அனு தன் நண்பர்களாகிய சோட்டா பீம் மற்றும் சுக்கியின் உதவியைக்கேட்டு உதவுமாறு மனதில் நினைத்தாள்.

நினைக்கும் பொழுதெல்லாம் தன் கண்ணெதிரே வருவதாகச் சோட்டா பீம் வாக்கு கொடுத்திருந்தான். அனுவின் அவசர நிலையைப் புரிந்து கொண்ட சோட்டா பீமும், சுக்கியும் அங்கு வந்தனர். விமானத்தைத் தன் பலத்தால் மிகவும் வேகமாகத் தள்ளினான். இருந்தும் விமானம் சிறிதளவே நகர்ந்தது. உடனே சுக்கி தன் பையில் இருந்து ஒரு லட்டுவை எடுத்து பீமிற்குத் தர அதை உண்டபின் மிகவும் பலம் பெற்றவனாக விமானத்தை எடுத்துப் பிடித்து அருவியின் அக்கரைக்குச் சென்று இறக்கிவிட்டான்.

மிகவும் நன்றி தெரிவித்துவிட்டு, விமானம் தொடர்ந்து சென்றது. இன்னும் சிறிது தூரம் சென்றவுடன் விமானம் வழியைத் தவறவிட்டு அங்கு காற்றில் ஒரே இடத்தில் சுழன்று கொண்டே இருந்தது. காரணம் புரியாமல் அனு கீழே உற்றுநோக்க, அந்த விமானம் பெர்முடா முக்கோணம் இருந்தபடியால் தன் கட்டுப்பாடு மற்றும் திசைகளைத் தவறவிட்டது.

மீண்டும் தன் நண்பர்களின் உதவியை நாடி அவர்களை மனதில் நினைத்தாள் அனு. உடனே அங்கு வந்து சேர்ந்தனர் டோராவும் புஜ்ஜியும். வழியைத் தவற விட்டவர்களுக்கு வழி கண்டுபிடித்துச் சொல்லும் வரைபடம்தான் புஜ்ஜியிடம் உள்ளதே! ஐயா!! ஜாலி!!! நான் உதவி செய்கிறேன் என்று வரைபடம் அனுவிற்கு வழியைக் காண்பித்துக் கொடுத்தது. அவர்களுக்கு மீண்டும் நன்றியை சொல்லிவிட்டு அனு விமானத்தில் பறந்து வெற்றிகரமாகச் செவ்வாய் கிரகத்தில் கால் பதித்தாள்.

அங்கே அவள் விருந்தாளி ஆனதால் அவளுக்கு ஏகப்பட்ட வரவேற்பு! ராஜ உபச்சாரம் தான்! அவள் தனக்குத் தேவையான தகவல்களைக் கேட்டு அறிந்து கொண்டாள். பின் மண் துகள் மாதிரிகளைச் சேகரித்தாள். பின் அவளின் அறிவார்ந்த யோசனையைக் கேட்டு, பேச்சைக் கேட்டு அவர்கள் அனுவை நிரந்தரமாகத் தங்கும்படி வற்புறுத்தினர்.

தனது ஈ.எஸ்.பி. பவரின் மூலம் அவர்களின் தவறான நோக்கத்தை அவள் புரிந்து கொண்டாள். பூமியில் இருந்து அனுப்பப்பட்ட அனைத்துச் செயற்கைக்கோள்களையும் தகர்த்து எறிவது, செவ்வாய் கிரகத்தின் நோக்கமாக இருந்தது என்பதை மிகத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொண்டாள்.

இந்தத் திட்டத்தை ஒரு மிஷினில் வடிவமைத்து, அதற்கு ஒரு பட்டன் கண்ட்ரோல் இருப்பதைப் புரிந்து கொண்டாள். அந்தப் பட்டனைச் செயலிழப்பது மூலம் அந்த முயற்சி தோல்வி அடையும் என்பதையும் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொண்டவுடனே தன் நண்பர்களாகிய சோட்டா பீம், சுக்கி, டோரா, புஜ்ஜி அனைவரையும் மனதில் நினைத்து அவர்களை உடனே வரவழைத்தாள்.

அங்கே வந்த அவர்கள் நால்வரும் அனுவின் திட்டத்தைப் புரிந்து கொண்டு   அந்த பட்டன் கண்ட்ரோல் மிஷினைச் செயலிழக்கச் செய்தனர். இதன்மூலம் பூமியில் இருந்து அனுப்பப்பட்ட அனைத்து செயற்கைக்கோள்களும் மிகவும் பாதுகாப்பாக இருந்தன.

செயற்கைக்கோள்களைக் காப்பாற்றிய மகிழ்ச்சியில் அனுவும் சோட்டா பீம், சுக்கி, டோரா, புஜ்ஜி அனைவரும் வேறு ஒரு டைம் மிஷின் மூலமாக பூமியை வந்தடைந்தனர். அனு தன் நண்பர்களுக்கு மீண்டும் நன்றி தெரிவித்தாள்.

(நடுவர் கருத்து:-

‘செவ்வாயில் ஓர் சாகசம்’ என அறிவியல் கருவை எடுத்துக் கொண்டு விறுவிறுப்பாகக் கதை எழுதியமைக்குப் பாராட்டுகள்!  செவ்வாயிலிருந்து ஒளி வேகத்தில் பயணம் செய்யும் விண்கலம், பூமியிலுள்ள அருவியைத் தாண்டத் திணறியது என்பது போன்ற தகவல் பிழைகளைத் தவிர்த்தால் இன்னும் சிறப்பாயிருக்கும்.)

அன்பு அனந்தராஸ்ரீ,

கதைப்போட்டியில் ஊக்கப்பரிசு பெற்றமைக்குப் பாராட்டுகள்!  மேலும் பல கதைப்புத்தகங்களை வாசித்துத் தொடர்ந்து எழுதுங்கள்.  வருங்காலத்தில் சிறந்த எழுத்தாளராக மிளிர எங்கள் வாழ்த்துகள்!

அன்புடன்,

ஆசிரியர்,

சுட்டி உலகம்.

Share this: