விநோத விலங்குகள்-20 – அணில் குரங்கு

Squirrelmonkey_pic

குரங்கு இனத்தில் குட்டியாக இருக்கும் ஒரு வகை குரங்குக்கு, அணில் குரங்கு என்று பெயர். இது சாய்மிரி (Saimiri) என்ற இனத்தைச் சேர்ந்தது. சாய்மிரி என்றால், சின்னக் குரங்கு என்று அர்த்தமாம்.

இது தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்கா காடுகளில் வசிக்கின்றது. கூட்டமாக வாழும். இதன் முகம் வெள்ளை; முதுகுப் பகுதி கரும்பச்சை; தோள்பட்டை பகுதி கறுப்பாக இருக்கும். இதன் முடியுடன் கூடிய நீண்ட வால், பாலன்ஸ் செய்ய உதவுகிறது. பழம், விதைகள், பூக்கள், பூச்சிகள் ஆகியவற்றை உண்பதால், இது  அனைத்துண்ணி (omnivores).

இதன் கை, கால்கள் வழியாக மட்டுமே, வியர்வை வெளியேறும். அதனால் கடுமையான வெப்ப காலத்தில், உடலைக் குளிர்விக்க இது தன் கைகளில் சிறுநீர் பெய்யும். அதைப் பிடித்து, உள்ளங்கால்களில் தேய்த்துவிடும். சிறுநீர் ஆவியாகும் போது, அதன் உடலின் வெப்பநிலை குறையும்.

அமெரிக்கா ராக்கெட்டில் விண்வெளிக்கு அனுப்பி, உயிருடன் பத்திரமாகப் பூமிக்கு மீண்ட முதல் இரு விலங்குகளில், மிஸ் பேக்கர் (Miss Baker) என்ற அணில் குரங்கும் ஒன்று.

28/05/1959 அன்று மிஸ் பேக்கரும், ஏபிள்  (Miss Able) என்ற இன்னொரு செம்முக குரங்கும், விண்வெளியில் பறந்து திரும்பின. நான்கு நாட்களுக்குப் பிறகு, ஏபிள் இறந்துவிட்டது.

விண்வெளி பயணத்துக்குப் பிறகு, மிஸ் பேக்கர் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மைய விலங்கு காட்சிச் சாலைக்கு அனுப்பப்பட்டது. தினமும் அதைப் பார்க்க ஏராளமான கூட்டம் வந்தது. பள்ளிக் குழந்தைகள் பேக்கருக்குத் தினமும், நூற்றுக்கும் மேற்பட்ட கடிதம் எழுதினார்கள்.  

பேக்கரின் விண்வெளிப் பயணத்தின் 25ஆம் ஆண்டு நிறைவு விழாவின் போது, ஆயிரக்கணக்கான மக்கள் கூடி வாழ்த்தினர். அது 1984ஆம் ஆண்டு, இறந்த பிறகு, அதன் உடல் அமெரிக்கா விண்வெளி மைய வளாகத்தில் புதைக்கப்பட்டு நினைவுச்சின்னம் எழுப்பப்பட்டது. அதன் கல்லறையைப் பார்க்க வருபவர்கள் தவறாமல், அதன் மீது ஒரு வாழைப்பழத்தை வைத்து, நினைவு அஞ்சலி செலுத்துகிறார்கள். இப்படியாக மிஸ் பேக்கர் அமெரிக்க மக்கள் மனதிலும், வரலாற்றிலும் இடம் பிடித்து விட்டது.

அடுத்த மாதம் இன்னொரு விலங்கு பற்றிய தகவல்களுடன், உங்களைச் சந்திக்கிறேன்.

Share this: