அம்மாடி….அப்பாடி

Ammadi_pic

ஒரு ஊர்ல ஒரு தாத்தா – வீட்டிலும்..வீதியிலும்…

இந்நூலில் இடம் பெற்றுள்ள தாத்தாவுக்கும், சுட்டிப் பேத்திகளுக்குமிடையேயான 16 உரையாடல்களும்,பகிர்வுகளும்,வாசிக்க மிகவும் சுவாரசியமாக இருக்கின்றன. இவை உண்மையும், கற்பனையும் கலந்த பகிர்வுகள் என்கிறார் ஆசிரியர்.

தமிழ்நாட்டின் முன்னணிக் கல்வி சிந்தனையாளர்களில் ஒருவரான ச.மாடசாமி அவர்கள், இந்நூலை எழுதியிருக்கிறார். இவர் தம் முன்னுரையில் கூறியிருப்பது போல இந்நூல் தமிழில் புது வகைமை என்பதில் சந்தேகமில்லை. சில பதிவுகள் சிறந்த சிறுகதைகள் ஆவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டிருக்கின்றன. இந்நூலில் பாட்டி பேத்திகளிடம் நடத்திய உரையாடலே இல்லையென்பதால், இதைத் தாத்தா இலக்கியம் எனலாம்.

தாத்தாவுக்குக் கதிர், கனல் என இரண்டு பேத்திகள். தம் பார்வையாலேயே மற்றவர்களை மிரட்டி, அரசு அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தாத்தா, இப்போது ஓர் ஆட்டுக்குட்டி! செல்லப் பேத்திகளின் மிரட்டலுக்குப் பயந்து அவர்கள் சொல்வதற்கெல்லாம், ‘ஆமாம் சாமி’ போட்டுத் தலையாட்டும் ஆட்டுக்குட்டி!

உட்காரும் போதும், எழும் போதும் “அம்மாடி அப்பாடி” என்று தம் உடம்பின் அயர்ச்சியை வெளிப்படுத்தும் தாத்தா, சிங்கம் மாதிரி பேத்திகள் நடக்கச் சொன்னவுடன், எழுந்து ‘சரக் சரக்’கென்று நடக்கிறார். பேத்திகள் சூழ இருக்கும் போது மட்டும், ‘அம்மாடியும் அப்பாடியும்’ இவரிடமிருந்து சொல்லாமல் கொள்ளாமல், விடைபெற்றுப் போய்விடுகின்றன.

பெரும்பாலான முதியவர்கள் வாயைத் திறந்தாலே, “எங்க காலத்துல” என்று தான் ஆரம்பிப்பார்கள். இவரும் அப்படி ஒரு தடவை சொல்லத் துவங்கியதுமே, “Once upon a time story யா? வேணாம் தாத்தா” என்று பேத்தி வாயை அடைத்து விடுகின்றாள். இதற்காகத் தாத்தா வருத்தமோ கோபமோ படவில்லை. தாம் சொல்வதைக் கேட்டேயாக வேண்டும் என்ற வறட்டுத்தனமான பிடிவாதமும் இவரிடமில்லை.

‘கடந்த காலத்தைப் பேசி, நிகழ்காலத்தை நியாயப்படுத்தும் சாமர்த்தியம் பேத்திகளிடம் பலிக்காது’ என்ற புதுப்பாடத்தை, எழுபது வயதுக்கு மேல் கற்றுக் கொண்டதாக, இவர் மகிழ்கின்றார். இப்படி எந்த வயதிலும் குழந்தைகள் உட்பட, எல்லோரிடமிருந்தும் கற்கத் தயாராயிருக்கும் இவரைப் போன்ற ஓர் அறிவாளி தாத்தா கிடைப்பது, பேரக் குழந்தைக்குப் பெரும் வரமே!

பென்சில்களைத் தொலைத்துவிட்டுப் பாட்டியிடம் ரகசியமாய்க் காசு வாங்கிச் சமாளிக்கும் பேத்தியிடம், கருத்துக் கந்தசாமியாக மாறித் ‘திருட்டுத்தனம் கூடாது’ என்று நீதிநெறி போதிக்காமல், ‘சின்ன வயதில், நானும் இப்படித் தானே திருட்டுத்தனம் செய்தேன்’ என்று நினைவுகூர்ந்து சிரித்துக் கொள்கிறார் தாத்தா.

தாத்தா மனிதநேய மிக்கவர். பிரம்மாண்ட கடைகளில் உட்கார முக்காலியில்லாமல், நாள் முழுதும் நின்று கொண்டே பணிசெய்யும் இளம் பெண்ணைக் கண்டு, மனம் வருந்துகிறார். அவளைப் புயலிலே ஒரு தோணியாகக் கற்பனை செய்து, விரைவில் அத்தோணி கரை சேர வேண்டும் என்று, மனதின் அடியாழத்திலிருந்து விரும்புகிறார்.

இவரிடம் பாசமாக இருந்து, கொரோனாவில் இறந்து போன ஆட்டோ ஓட்டுநரின் இறப்புச் செய்தி கேட்டு மனமுடைந்த நிலையில், யார் வண்டியிலும் ஏறாமல் நடந்தே வீட்டுக்குத் திரும்புகிறார்.

‘ஹிஜாப்’ போடக்கூடாது என்று புது ஆணை போட்டதால், 20000 முஸ்லீம் பெண் குழந்தைகளின் படிப்பில் மண் விழுந்துவிட்டது என்று வேதனைப்படுவது, மதநல்லிணக்கத்தின் மேல், இவர் வைத்திருக்கும் பற்றுக்குச் சான்று!

வண்ணங்கள் குறித்த கனவுகளில் மூழ்கியிருந்த பேத்திகளுக்குக் கதை சொல்லித் ‘தைரியம் தான் அழகு’ என்று யதார்த்த உலகுக்குத் திருப்புகிறார். பேத்தியின் கிறுக்கல்களை விண்மீன்களாக உருவகப்படுத்தி உற்சாகமூட்டுகிறார்.

தந்தை பெரியாரின் வாக்குப்படி, இவர் கடவுளை மறந்து, மனிதனை நினைக்கிறார். வேலையிழந்து துன்பத்தில் வாடும் சகமனிதனுக்குச் சரியான சமயத்தில் ஊக்கமும், உற்சாகமும் அளித்து, வாழ்வில் முன்னேற வழிகாட்டுகிறார். சகமனிதனைக் கவனித்து இவர் தரும் அங்கீகாரமே, இவரது பலமாகவும் அடையாளமாகவும் இருக்கின்றது. தன்னம்பிக்கையே இவருடைய வழித்துணை! ‘விலகுவதும் நேசம் தான்’ என்ற யதார்த்த உண்மை புரிந்தவர்!

கொரோனாவுக்குப் பிந்தைய காலக் கட்டத்தில் வகுப்புகளில் மாணவர்களின் வன்முறை போக்குப் பற்றி, ஊடகங்களில் வந்த செய்தி குறித்து, இவர் ஆற்றிய இந்த உரையிது:-

“வகுப்பறை முரண்பாடுகள் இன்று கூர்மை அடைந்திருந்தாலும், ஆசிரியர்களும், மாணவர்களும் சேர்ந்து நடக்கிறவர்கள் தாம்; ஒருவர் நிதானம் இழக்கும் போது, மற்றவர் பதறாமல் நடக்க வேண்டும்; அவரும் நிதானம் இழந்து கூச்சல் போடக்கூடாது; நிதானமிழந்தவர் கட்டாயம் நிதானம் பெற்றுத் திரும்புவார்”.  

ஆசிரியர்கள் என்றும் நினைவில் நிறுத்த வேண்டிய பாடமிது!

வயதான பிறகு, பொழுது போகவில்லை என்று புலம்புபவர்களே அதிகம். ‘புத்தக வாசிப்பிருந்தால், முதுமையில் பயனுள்ள வகையில் நேரத்தைச் செலவழிக்கலாம்; புத்தகமே நம்பகமான வழித்துணை’ என்று இந்நூல் சொல்லும் வழிமுறையைக் கடைபிடித்தால், முதுமையில் நாமும் இன்பமாக வாழலாம்! அவசியம் வாங்கி வாசியுங்கள்!   

வகைகட்டுரை
ஆசிரியர்பேராசிரியர் ச.மாடசாமி
வெளியீடுவாசல் 40D/3, முதல் தெரு, வசந்தா நகர், மதுரை – 605003 (+91) 98421 02133
விலைரூ 100/-
Share this: