அப்படியா சேதி?

appadiyasethi_pic

இந்தச் சிறுவர் கதைத் தொகுப்பில் 12 கதைகள் உள்ளன. ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளைச் சிறுவர் மனதில் எழுப்பி, அதற்கான அறிவியல் காரணங்களை எளிமையாகப் புரிந்து கொள்ளும்  வகையில் இக்கதைகள் அமைந்துள்ளமை, இத்தொகுப்பின் சிறப்பு.

ஒரு குளிர் சாதனப் பெட்டியில் இருந்த தக்காளி, முட்டை, வெங்காயம், ஐஸ்கிரீம் நான்கும் நண்பர்கள். கடற்கரையைப் பார்க்க ஆசைப்பட்டு நான்கும் செல்கின்றன. அங்கேயே இரவு முழுதும் விளையாடிவிட்டுத் தூங்கி விடுகின்றன. மறுநாள் காலை சூரியன் உதயமானவுடன், ஐஸ்கிரீம் உருகிவிடுகின்றது. எல்லாம் ஐஸ்கிரீம் நண்பனைப் பார்த்து அழுகின்றன. வீட்டுக்குத் திரும்பும் வழியில், தக்காளி நசுங்கி விடுகின்றது. முட்டை உடைந்து விடுகின்றது. வெங்காயம் மட்டுமே, அழுதுவிட்டு வீடு திரும்புகின்றது. “நண்பர்கள் இறந்த போது, நான் அழுதேன். நான் இறக்கும் போது, எனக்காக யார் அழுவார்கள்?” என்று வெங்காயம், சூரியன் அண்ணாவிடம் கேட்கின்றது.

“வருத்தப்படாதே! நீ வெட்டுப்படும் போது, உன்னை வெட்டுபவர் மட்டும் அல்ல; உன்னைச் சுற்றி உள்ளவர்களும் அழுவார்கள்” என்று சூரியன் வரம் கொடுக்கின்றது. இந்தக் கதையின் முடிவில், வெங்காயம் அரியும் போது, நம் கண்ணில் நீர் வருவதற்கான அறிவியல் காரணம் சொல்லப்பட்டுள்ளது.

இது போலவே கடலில் சிப்பியில் முத்து உருவாவது எப்படி?, சேவல் ஏன் சூரியன் ‌உதிக்கும் போதும், மறையும் போதும் நாள் தவறாமல் கூவுகிறது?  ஓட்டையிலும் பொந்திலும், வசிக்காமல், சிலந்தி ஏன் இத்தனை அழகாக, வலை பின்னுகிறது? தொட்டாச்சிணுங்கி இலையைத் தொட்டவுடன், ஏன் சுருங்குகிறது? என்பன போன்ற கேள்விகளுக்கும், சுவாரசியமான கதைகள் மூலம் அறிவியல் காரணங்களை விளக்கியுள்ளார் ஆசிரியர்.

வகைசிறுவர் கதைகள்
ஆசிரியர்வித்யா செல்வம்
வெளியீடு:-பாரதி பதிப்பகம், சென்னை-92. +91 93839 82930.
விலைரூ 110/-
Share this: