சுட்டிகளுக்கு அன்பு வணக்கம்.
இம்மாதச் சுட்டி உலகத்தில், நீங்கள் தெரிந்து கொள்ளப் போகும் பறவையின் பெயர், கொண்டலாத்தி! (Eurasian hoopoe).
தலையில் விசிறி போல, கிரீடம் போல, அழகான ஒரு கொண்டையை வைத்து இருப்பதால், இதற்கு இந்தப் பெயர். தலையும் வயிறும் பழுப்பு நிறம். இறக்கை, வால் ஆகியவற்றில், கருப்பும், வெள்ளையும் பட்டை பட்டையாக இருக்கும். அலகு நீண்டு கீழ் நோக்கி வளைந்து இருக்கும். தலை அலங்காரத்துடன் இருக்கும் இப்பறவையை எளிதில் அடையாளம் காணலாம். இதன் நீண்ட அலகைப் பார்த்து, மரங்கொத்தி எனத் தவறாக சிலர் நினைப்பார்கள்.
இந்த நீண்ட அலகால் தரையில் நடந்து, மண்ணைக் குத்திக் கிளறிப் பூச்சிப் புழுக்களைப் பிடித்துத் தின்னும். இதன் முக்கிய உணவு பூச்சிகளே. இப்பறவை ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா கண்டங்களில் காணப்படுகின்றது.
இதன் ஆங்கிலப் பெயர் Eurasian hoopoe. ஊப் ஊப் ஊப் (oop-oop-oop) எனக் குரல் எழுப்புவதால், இதற்கு hoopoe என்று, ஆங்கிலத்தில் பெயர் வந்து இருக்கலாம் என்பது ஒரு கருத்து. கொண்டை என்ற அர்த்தம் உடைய Huppée என்ற பிரெஞ்சு சொல்லில் இருந்து, இப்பெயர் வந்து இருக்கலாம் என்பது, இன்னொரு கருத்து.
இது மரப் பொந்துகளிலும், கட்டிட இடுக்குகளிலும் கூடு கட்டும். பொந்தின் வாய் குறுகலாக இருக்கும். பெண் மட்டுமே அடை காக்கும். 15 முதல் 18 நாட்கள் அடை காக்கும் பெண் பறவைக்கு, ஆண் தீனி கொண்டு வந்து கொடுக்கும்.
அடை காக்கும் சமயத்தில் பெண் பறவை, துர்நாற்றம் வீசக்கூடிய திரவத்தைச் சுரக்கும். இந்தத் திரவத்தைக் குஞ்சுகளின் இறக்கையில் தடவி விட்டுவிடும். அழுகிய கறியின் நெடி வீசக் கூடிய இந்தத் திரவம், எதிரிகளிடமிருந்து குஞ்சுகளைக் காப்பாற்றுகிறது.
கொண்டலாத்தி 2008 ஆம் ஆண்டு, இஸ்ரேல் நாட்டின் தேசியப் பறவையாகத் தேர்ந்து எடுக்கப்பட்டது என்பது, கூடுதல் தகவல்.
என்ன சுட்டிகளே! அக்கம் பக்கத்தில் கொண்டலாத்தி பறவையைப் பார்த்தால், உங்களால் அடையாளம் தெரிந்து கொள்ள முடியும் தானே?
Thanks:- Cover photo by Aboodi Vesakaran: https://www.pexels.com/photo/close-up-of-a-eurasian-hoopoe-16600047/