மரம் மண்ணின் வரம் – 21 – கொன்றை

Konrai_pic

இதன் பொன் மஞ்சள் மலர்கள் தங்கக் காசுகளைச் சரம் சரமாகக் கோர்த்துத் தொங்க விட்டது போல் ஜொலிக்கும்! அதனால் சரக்கொன்றை என்ற பெயரும், இதற்கு உண்டு.

Cassia fistula என்பது, இதன் தாவரப்பெயர். Fabaceae குடும்பத்தைச் சேர்ந்தது.  தெற்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட மரம். எனவே வெப்பத்தையும், வறட்சியையும் தாக்குப் பிடித்து வளரக்கூடியது. 

அச்சிருபாக்கம், திருக்கோவிலூர், திருத்துறையூர் உள்ளிட்ட 20 சிவன்  கோவில்களில், தல மரமாக இருக்கும் சிறப்புப் பெற்றது.  தற்காலத்தில் தெரு ஓரங்களில், அழகுக்காக வளர்க்கப்படுகிறது.

இதன் காய்கள் பச்சையாக உருளை வடிவத்தில் நீண்டு இருக்கும். இதன் காய் முருங்கைக் காய்களை நினைவூட்டும். காய் முற்றிய பின், கருமை கலந்த காப்பிக்கொட்டை நிறம் ஆகிவிடும்.

நாட்டு மருத்துவத்தில் தமிழர்கள் பயன்படுத்திய முக்கிய தாவரங்களில், இதுவும் ஒன்று.  ஆயுர் வேதத்திலும், இது முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் பட்டை, பூ ஆகியவற்றில் இருந்து எடுக்கப்பட்ட சாயம் தோல், மற்றும் ஓவியங்களுக்கு வண்ணம் தீட்டப் பயன்பட்டன. முதிர்ந்த கொன்றை மரத்தைக் கொண்டே, அந்தக் காலத்தில் உலக்கை செய்தனர் என்கிறார், காட்டுயிர் எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன்.

Pic-G.Kalayarassy

ஏப்ரல், மே மாதங்களில் இலைகளை முழுவதுமாக உதிர்த்து விட்டு, மரம் முழுக்க பொன் மஞ்சள் மலர்களால் நிறைந்து, சரம் சரமாகத் தொங்கும் இது, நம் மண்ணின் மரங்களுள் ஒன்று.

சங்கக் காலத்தில் நம் முன்னோர் காடும், காடு சேர்ந்த பகுதியுமான முல்லை நிலத்துக்குரிய மரமாக, இதனை வகைப்படுத்தி இருக்கிறார்கள்.

இந்த மரத்தின் கனிகளை, இதன் பிசுபிசுப்பு நிறைந்த தித்திப்பான சதைப் பகுதிக்காக நரி, குரங்கு போன்ற விலங்குகள் விரும்பித் தின்னுமாம். 

என்ன சுட்டிகளே! கொன்றை மரம் பற்றித் தெரிந்து கொண்டீர்களா?

அடுத்த மாதம், வேறொரு மரம் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

Share this: