சக்தி வை.கோவிந்தன் (1912 – 1966)

‘தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடி’ என்று சிறப்புடன், குறிப்பிடத்தக்க வை. கோவிந்தன், எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். புதுக்கோட்டை மாவட்டம், ராயவரத்தில் பிறந்த இவர், பர்மாவில் சிலகாலம் பணியாற்றிவிட்டுத் தமிழகம் திரும்பினார். 1934-ஆம் ஆண்டு  ‘சக்தி’ இதழையும் ‘சக்தி’ அச்சகத்தையும் தொடங்கினார். பல்வேறு எழுத்தாளர்களின் படைப்புகளையும் மொழிபெயர்ப்புப் படைப்புகளையும், சர்வதேசத் தரத்தில் வெளியிட்டார். 

அச்சுத் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்திராத அக்காலத்தில், பாரதியார் கவிதைகள், திருக்குறள், கம்பராமாயணம், பஞ்சதந்திரக் கதைகள் போன்ற பல நூல்களை, நல்ல தாளில், பிழையின்றியும், நேர்த்தியாகவும் மலிவு விலைப் பதிப்பாக வெளியிட்டு, சாமான்யரையும் சென்றடையச் செய்தார். அதனால் ‘சக்தி வை. கோவிந்தன்’ என்று பெருமையோடு குறிப்பிடப்பட்டார்.

1938-ஆம் ஆண்டு ‘அன்பு நிலையம்’ என்னும் பதிப்பகத்தையும் 1939-ஆம் ஆண்டு ‘காரியாலயம்’ என்னும் பதிப்பகத்தையும் தொடங்கி, மேலும் பல நூல்களை வெளியிட்டார். 

அழ.வள்ளியப்பாவுடன் இணைந்து, ‘குழந்தை எழுத்தாளர் சங்கம்’ தோற்றுவித்ததோடு, அதன் தலைவராகவும் சில காலம் பணியாற்றினார். தென்னிந்தியப் புத்தகத்தொழில் கழகத்தின் பொருளாளராகவும் தலைவராகவும் பணியாற்றிய போது ‘வீட்டுக்கொரு நூலகம்’ என்ற முயற்சியில் ஈடுபட்டார். தலைசிறந்த பதிப்பாளராக மட்டுமல்லாது, எழுத்தாளராக குழந்தை இலக்கியத்துக்கும் பெரும் பங்காற்றியுள்ளார். இவர் குழந்தைகளுக்காக எழுதிய நூல்களுள் சில, குழந்தைக் கதைகள், பாப்பாவுக்குக் கதைகள், அணில் அண்ணன் கதைகள், நான்கு முட்டாள்கள், நாடோடிக் கதைகள், கடலோடியின் கதை, கூனன் கதை போன்றவை. இவரது கதைகளும் கட்டுரைகளும், அமேசான் தளத்திலும், நியூ செஞ்சுரி புத்தகாலயத்திலும் கிடைக்கின்றன.

Share this: