புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் கிராமம், இவர் பூர்வீகம். தொழில் காரணமாகக் கோவைக்கு, இடம் பெயர்ந்தார். குழந்தைகளுக்காக நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ள இவர், குழந்தை இலக்கிய வளர்ச்சிக்குச் சிறப்பான பங்காற்றியுள்ளார்.
பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் முதுகலைப்பட்டம் பெற்ற கவிஞர் செல்ல கணபதி அவர்களைக் குழந்தை இலக்கியப் பாதையில், திசை திருப்பியவர், அழ.வள்ளியப்பா. ‘குழந்தைக் கவிஞரின் வாரிசு’ எனப் போற்றப்படும் இவர், தம் குருவின் மீதுள்ள பக்தியினாலும், அன்பினாலும், அவர் பெயரில் ‘வள்ளியப்பா இலக்கிய வட்டம்’ எனும் அமைப்பை, டாக்டர் பூவண்ணன் அவர்களுடன் இணைந்து தொடங்கினார். அதன் வழி ஆண்டுதோறும் குழந்தை இலக்கிய விழாக்களைப் பல ஊர்களில் நடத்தி வருகிறார்.
இவரது தேடல் வேட்டை’ என்ற குழந்தைப்பாடல் நூலுக்கு, 2015 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் ‘பால சாகித்ய புரஸ்கார் விருது’ கிடைத்தது. பழனியப்பா பிரதர்ஸ், சென்னை பதிப்பகத்தால், 29/01/2011 அன்று காரைக்குடியில் நடைபெற்ற குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா கலை இலக்கிய பெருவிழாவில், இந்நூல் வெளியிடப்பட்டது.
இவரது ‘வெள்ளை முயல்’ என்ற நூலிருந்த குழந்தைப் பாடல்களைச் சிங்கப்பூர் பள்ளிப் பாடப்புத்தகத்தில் சேர்த்துள்ளனர். ‘மணக்கும் பூக்கள்’ என்ற நூல், தமிழக அரசு விருது பெற்றது. இது தவிர, குழந்தை எழுத்தாளர் சங்கப் பரிசு, திருப்பூர் தமிழ்ச்சங்கப் பரிசு என, பல பரிசுகளை வென்றிருக்கிறார். இவரின் ‘மழலையர் பாடல்கள்’ ஒலிப்பேழைகளாக வெளியிடப் பெற்றுக் குழந்தைகளிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை.