கவிமணி என்ற சிறப்பு அடைமொழியோடு குறிப்பிடப்படும் தேசிக விநாயகம் பிள்ளை, கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை அடுத்த தேரூரில் பிறந்தார். இவர் தந்தை, சிவதாணுப்பிள்ளை; தாயார் ஆதிலட்சுமி அம்மாள்.
அவர் வாழ்ந்த காலத்தில், அப்பகுதிப் பள்ளிகளில் பயிற்றுமொழியாக மலையாளமே இருந்த காரணத்தால், அவர் திருவாவடுதுறை மடத்தின் தலைவர் சாந்தலிங்கத் தம்பிரானிடம், தமிழ் மொழியை முறையாகக் கற்றுத் தேர்ந்தார். மேல்நிலைக்கல்வியை முடித்த பிறகு, நாகர்கோவிலிலும், திருவனந்தபுரத்திலும், ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
குழந்தைகளுக்கான பாடல்கள் அடங்கிய இவரது, ‘மலரும் மாலையும்’ தொகுப்பில் 25-க்கும் மேற்பட்ட குழந்தைப்பாடல்களும், 7 கதைப்பாட்டுகளும் இடம்பெற்றுள்ளன. அவருடைய பிரபலமான குழந்தைப்பாடல் இது:-
“தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு
துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி
அம்மா என்றது வெள்ளைப்பசு – உடன்
அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி”
அவருடைய பிரபலமான குழந்தைப்பாடல்
குழந்தைகளுக்கான பாடல்கள் தவிர, இயற்கை, இலக்கியம், பக்தி, வாழ்வியல், சமூகம், தேசியம், வரலாறு, வாழ்த்துப்பா என பல வகைமைகளிலும் பாடல்களும், கவிதைகளும் புனைந்துள்ளார். மொழிபெயர்ப்பாளர், ஆராய்ச்சியாளர், திறனாய்வாளர், தொகுப்பாளர் எனப் பன்முகத்திறமை படைத்த, தேசிக விநாயகம் பிள்ளையைச் சிறப்பிக்கும் முகமாக 2005-ஆம் ஆண்டு, இவரது உருவம் பொறித்த அஞ்சல் தலை மத்திய அரசால் வெளியிடப்பட்டது.
‘ஆசிய ஜோதி’, ‘மருமக்கள் வழி மான்மியம்’, ‘குழந்தைச் செல்வம்’, ‘அழகம்மை ஆசிரிய விருத்தம்’, ‘கதர் பிறந்த கதை’, ‘உமர் கய்யாம் பாடல்கள்’ போன்றவை, இவரது நூல்களுள் சில. நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ள இவரது படைப்புகளை, இணையத்தில் இலவசமாக வாசிக்கலாம்.