அழ.வள்ளியப்பா

Azha Valliyappa

குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா (நவம்பர் 7, 1922 – மார்ச் 16, 1989)

தமிழில் குழந்தை இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றிய அழ.வள்ளியப்பா, புதுக்கோட்டை மாவட்டத்தில் இராயவரம் என்ற ஊரில் பிறந்தார். இவர் தனது 13-ஆம் வயதில் எழுதத் தொடங்கி இறுதிக்காலம் வரை குழந்தைகளுக்காக தொடர்ந்து எழுதிவந்துள்ளார்.   

“குழந்தைக் கவிஞர்” என்று பெருமையுடன் குறிப்பிடப்படும் இவர், 2000-க்கும் மேற்பட்ட குழந்தைப் பாடல்கள் எழுதியுள்ளார். மேலும் குழந்தைகளுக்கான சிறுகதைகள், விடுகதை விளையாட்டுகள், விலங்கியற் கட்டுரைகள், தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள், கேள்வி பதில்கள் போன்றவற்றையும் எழுதியுள்ளார். ‘அம்மா இங்கே வா வா’, ‘மாம்பழமாம் மாம்பழம்’, ‘தட்டு நிறைய லட்டு’ ‘ஞாயிற்றுக்கிழமை பிறந்த பிள்ளை’ போன்ற இவருடைய பல பாடல்கள் குழந்தைகளிடத்தில் பிரசித்தமானவை.   

இந்தியன் வங்கியில் பணியாற்றியபடியே ‘பாலர் மலர்’, ‘டமாரம்’, ‘சங்கு’ ஆகிய பத்திரிகைகளில் கௌரவ ஆசிரியராகவும் ‘பூஞ்சோலை’ இதழின் ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். பணி ஓய்வுக்குப் பிறகு ‘கோகுலம்’ இதழின் ஆசிரியராகவும் சில ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். 1950-ல் ‘குழந்தை எழுத்தாளர்கள் சங்கம்’ என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் குழந்தைகளுக்காக எழுதும் எழுத்தாளர்களை ஒன்றிணைத்து குழந்தை இலக்கியம் தழைக்கப் பாடுபட்டார். 

இவர் பாடல்கள் மட்டுமல்லாது, புதினங்கள், கட்டுரைகள், நாடகம், ஆய்வுநூல், மொழிபெயர்ப்பு நூல், தொகுப்பு நூல் என பல நூல்களை வெளியிட்டுள்ளார். அவற்றுள் 2 நூல்கள் மத்திய அரசிடமிருந்தும், 6 நூல்கள் மாநில அரசிடமிருந்தும் பரிசுகளைப் பெற்றுள்ளன. இவர் சிறந்த பேச்சாளரும் கூட. 

இவருடைய படைப்புகள் அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. இணையத்தில் வாசிக்க…

Share this: