டொட்டாரோ – (My Neighbor Totoro)

Totoro_pic

1988 ஆம் வெளிவந்த இந்த ஜப்பானிய அனிமேஷன் படத்தை இயக்கியவர் ஹயோவோ மியாசாகி (Hayao Miyazaki) ஆவார். இவர் உலகளவில் புகழ் பெற்ற இயக்குநரும், தயாரிப்பாளரும் ஆவார்.

இதுவரை வெளிவந்திருக்கும் 100 சிறந்த அனிமேஷன் படங்களில், இப்படம் ஒன்றாகத் தேர்வு பெற்றிருப்பதுடன், உலகளவில் பல்வேறு விருதுகளையும் வாங்கிக் குவித்துள்ளது.

பல்லைக்கழகப் பேராசிரியராக வேலை பார்க்கும் டாட்சுவோ குசாகாபே (Tatsuo Kusakabe) என்பவர், தம் இரு மகள்களுடன் ஒரு புது வீட்டுக்குக் குடி பெயர்கிறார்.  அவருடைய மனைவி மருத்துவமனையில் நீண்ட காலமாகத் தொடர் சிகிச்சை பெறுவதால், மருத்துவமனைக்கு அருகில் உள்ள காட்டையொட்டிய பகுதியில் இருக்கும் வீட்டை வாடகைக்கு எடுக்கிறார்.

சாட்சுகி (Satsuki) என்ற சிறுமிக்குப் பத்து வயது; சின்னவள் (Mei) ‘மே’ க்கு நான்கு வயது.  இவர்கள் இருவரும் தாம், இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள்.

அது ஒரு பழைய வீடு.  இருவரும் அந்த வீட்டைச் சுற்றி, ஓடி ஓடிப் பார்க்கிறார்கள்.  போர்டிகோவில் இருக்கும் மரத்தூண் உளுத்துப் போய் ஆடுகின்றது. மூடியிருக்கும் கதவைத் திறந்தால், வெளிச்சத்துக்குப் பயந்து கருப்பான வட்ட வடிவ தூசி போன்ற சிறிய பொருட்கள், கூட்டங் கூட்டமாக அலமாரியுள்ளும், மேலே பரண் உள்ளேயும் போய் ஒளிந்து கொள்கின்றன.அவை போன பிறகு, சிறுமிகள் கால்கள் முழுவதும் தூசியில் நடந்தது போல் கருப்பாகி விடுகின்றன.   

அவை என்ன என்று அறியும் ஆர்வத்தில், சிறுமிகள் அவற்றைத் துரத்துகின்றனர். அந்த வீட்டைச் சுத்தம் செய்ய வரும் பாட்டியிடம் அவை என்ன என்று விசாரிக்கின்றனர்.  அவை காலியான வீட்டில் மட்டுமே குடியிருக்கும் ஆவிகள் என்றும், இப்போது வேறு காலியான வீட்டைத் தேடி அவை போயிருக்கும் என்றும் அவர் சொல்கின்றார்.

ஒரு நாள் சாட்சுகி பள்ளிக்குச் சென்ற பிறகு, மே மட்டும் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறாள்.  அவள் அப்பா வீட்டில் மும்முரமாக அலுவலக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.  அப்போது இரண்டு குட்டி ஆவிகள் அங்கு நடந்து வருவதை, மே பார்த்துவிட்டு அவற்றைத் தொடர்ந்து செல்கின்றாள். அடர்ந்த மரங்கள் மூடிய வழியே அவை செல்லவும், மேவும் பின்னாலேயே போகின்றாள்.  அவளுடைய தொப்பி மட்டும், வழியில் விழுந்து விடுகின்றது.

அந்தக் குட்டி ஆவிகள் வானளாவ உயர்ந்து நிற்கும், ஒரு பிரும்மாண்டமான மரத்தின் இடையே இருக்கும் பெரிய பொந்துக்குள், போய் மறைந்து விடுகின்றன. மேவும் அந்தப் பொந்துக்குள் விழுந்து விடுகின்றாள். 

அங்குப் படுத்திருக்கும் ஒரு ராட்சஸ ஆவியின் வயிற்றில் போய், மே விழுகின்றாள்.  துவக்கத்தில் அது தன் பெரிய வாயை அகலமாகத் திறந்து கர்ஜிக்கிறது.  ஆனால் சீக்கிரமே சிறுமிக்கு நட்பாகி, அவளைப் பார்த்துச் சிரிக்கின்றது.  அதனை ‘டொட்டொரோ’ என்று அழைக்கும் மே, அதன் வயிற்றிலேயே படுத்துத் தூங்கி விடுகின்றாள். 

வீட்டுக்குத் திரும்பிய அவள் அக்கா, தங்கையைத் தேடுகின்றாள்.  மண்ணில் கிடக்கும் அவள் தொப்பியைப் பார்த்துவிட்டு அந்த வழியே போகின்றாள்.  அங்கே தரையில் படுத்து மே தூங்கிக் கொண்டிருக்கிறாள். 

அப்பாவும், சாட்சுகியும் அவளை எழுப்பி, வீட்டுக்கு அழைத்து வருகின்றனர்.  தான் அம்மரத்துப் பொந்தில் டொட்டோரோவைப் பார்த்ததாகச் சிறுமி சொல்கின்றாள். ஆனால் எவ்வளவு முயன்றும் அவளால் டொட்டோரோவை அக்காவுக்கும், அப்பாவுக்கும் காட்டமுடியவில்லை. டொட்டோரோ விரும்பினால், மீண்டும் அது நமக்குக் காட்சி தரும் என்று அப்பா, அவளைச் சமாதானப் படுத்துகின்றார்.

ஒரு நாள் இரவு நல்ல மழை பெய்கின்றது.  அவர்களுடைய அப்பாவை குடையில் அழைத்துச் செல்வதற்காகச் சிறுமிகள் இருவரும் பேருந்து நிறுத்தத்தில் குடையைப் பிடித்துக் கொண்டு காத்திருக்கின்றனர்.  மே தூங்கி வழிவதால், அவளைத் தன் முதுகில் சுமந்து கொண்டு சாட்சுகி நிற்கிறாள்.

திடீரென்று பார்த்தால், பக்கத்தில் டொட்டோரோ வந்து நிற்கின்றது.  மழையில் நனையாமல் இருக்க, ஒரு இலையை மட்டும் தலைக்கு மேல்  பிடித்துக் கொண்டு நிற்கின்றது. உடனே சாட்சுகி, தன் அப்பாவுக்காகக் கொண்டு வந்திருந்த குடையை, அதனை நோக்கி நீட்டுகிறாள்.

மகிழ்ச்சியடைந்த டொட்டோரோ குடையை வாங்கிக் கொண்டு, அதற்குப் பதிலாக விதைகள், கொட்டைகள் நிரம்பிய ஒரு பொட்டலத்தை, அவள் கையில் கொடுக்கின்றது. ஒரு பிரும்மாண்ட பூனை வடிவ பேருந்து ஒன்று அங்கு வந்து நிற்க, டொட்டோரோ குடையுடன் அதில் ஏறிப் போய் விடுகின்றது.

அடுத்த பேருந்தில், அவள் அப்பா வந்து இறங்குகிறார்.  அவரிடம் தான் டொட்டோரோவைப் பார்த்த விஷயத்தைச் சாட்சுகி சொல்கின்றாள்.  அது கொடுத்த விதைகளையும், கொட்டைகளையும் சிறுமிகள் மண்ணில் விதைக்கின்றார்கள். ஆனால் அவை முளைவிடவே இல்லை.

திடீரென்று ஒரு நாள் நள்ளிரவில், டொட்டோரோவும், அதன் கூட்டமும் அவர்கள் விதை போட்ட மண்ணைச் சுற்றிப் பாரம்பரிய நடனம் ஆடுகின்றன.  உடனே திடீரென்று அங்கே பிரும்மாண்டமான மரங்கள் எழுந்து வானைத் தொடுமளவு உயர்ந்து கொண்டே செல்கின்றன.

டொட்டோரோ சிறுமிகள் இருவரையும் தூக்கிக் கொண்டு, மரத்தின் உச்சிக்குச் செல்கின்றது.  அவர்கள் மகிழ்ச்சியுடன் வானில் பறக்கின்றார்கள். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தால், வானளாவ உயர்ந்த அந்த மரத்தைக் காணோம்.  ஆனால் அவர்கள் நட்ட விதைகள் அனைத்தும் முளை விட்டுக் கிளம்பியிருந்தன.

மருத்துவமனையிலிருந்து அவர்கள் அம்மா வீட்டுக்குத் திரும்ப வேண்டிய சமயத்தில், மீண்டும் உடல்நலக் கோளாறு ஏற்பட்டு, அங்கேயே தங்க வேண்டியதாகிவிடுகின்றது.  அம்மாவுக்குக் கொடுப்பதற்காகச் சோளத்தைப் பறித்து வைத்துக் கொண்டு ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் மே, அம்மாவின் உடல்நலம் மீண்டும் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதையறிந்து அழுகிறாள். “எனக்கு அம்மா வேணும்” என்று அழுது கொண்டே மருத்துவமனையை நோக்கி ஓடுகின்றாள். 

அவள் எங்குச் சென்றாள் என்பதை அறியாத அக்காவும், ஊர் மக்களும் சிறுமியைத் தேடுகின்றார்கள்.  குளத்தில் ஒரு சின்ன செருப்பு மிதக்க, குளத்தில் இறங்கிப் பதற்றத்துடன் தேடுகின்றார்கள்.  முடிவில் அந்தச் செருப்பு தன் தங்கையுடையது இல்லை என்று சாட்சுகி சொன்னவுடன் தான் எல்லாருக்கும் பதற்றம் நீங்குகிறது.

எங்குத் தேடியும் அவள் கிடைக்கவில்லை என்றவுடன், சாட்சுகி அந்தப் பெரிய மரத்திடம் வந்து, தன் தங்கையை கண்டுபிடித்துத் தருமாறு வேண்டுகிறாள்.  உடனே டொட்டோரோ தன் பூனை வடிவப் பேருந்தை அனுப்புகிறது. 

அது மேலே பறக்கிறது; மின்சாரக் கம்பியில் ஓடுகின்றது. அதில் ஏறிச் சாட்சுகி ஊரைச் சுற்றி வருகின்றாள்.  பின்னர் வழி தெரியாமல் ஒரு இடத்தில் அழுது கொண்டே உட்கார்ந்து இருக்கும் தங்கையைக் கண்டுபிடிக்கிறாள். 

இருவரும் சேர்ந்து அம்மாவின் மருத்துவமனைக்குச் சென்று மேலிருந்து பார்க்கிறார்கள்.  அம்மாவுக்குச் சாதாரண சளி தான்;பயப்படும்படியாக எதுவுமில்லை என்று தெரிந்து கொண்டு, மகிழ்ச்சியாக வீட்டுக்குத் திரும்புகிறார்கள். 

அம்மாவின் ஜன்னலுக்குப் பக்கத்தில் தான் பறித்த சோளத்தை ‘அம்மாவுக்கு’ என்று எழுதி ரகசியமாக வைத்துவிட்டு வருகின்றாள் சின்னவள்.  அம்மா அதை எடுத்துப் பார்த்து மகிழ்ச்சியடைகிறார்.

படத்தில் பயமுறுத்தும்படியாகப் பெரிய காட்டு ஆவியாக டொட்டோரோ வந்தாலும், அது குழந்தைகளுக்கு நன்மை செய்வதாக அமைந்திருப்பது சிறப்பு. இந்த டொட்டோரோ ஜப்பானில் சிறந்த கார்ட்டூன் பாத்திரமாகவும் புகழ்பெற்றுவிட்டது.  இயக்குநர் ஹயோவோ மியாசாகியின் திரைப்பட வரலாற்றில், இப்படம் ஒரு மைல்கல்லாகவும் கருதப்படுகின்றது.

மாயாஜாலமும், அனிமேஷனும் நிறைந்து, குழந்தைகள் விரும்பி ரசித்துப் பார்க்கக்கூடிய திரைப்படம். குழந்தைகளுக்குக் காடு,மரங்கள் என  இயற்கையின் மீது ஆர்வம் ஏற்படுத்தும் படமும் கூட.

(ஏப்ரல் 2022 பொம்மி சிறுவர் இதழில் எழுதியது)

Share this: