தலையங்கம் – மே 2022

Adithi_reading_pic

அன்புடையீர்! வணக்கம். 

அனைவருக்கும் அனைத்துலக உழைப்பாளர் தின வாழ்த்துகள்!

மே 10 ஆம் தேதி, ‘சுட்டி உலகம்’ பிறந்த நாள்! இம்மாதத்தில், ‘சுட்டி உலகம்’ ஓராண்டை நிறைவு செய்து, வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது. வளரும் தலைமுறைக்குப் புத்தக வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தி, வாசிக்க வைக்க வேண்டும் என்பதே, சுட்டி உலகம் துவங்கப்பட்டதன் முக்கிய நோக்கம்.

தமிழில் தற்போது வெளியாகும் சிறுவர் நூல்கள் என்னென்ன?  இக்காலக் குழந்தைகளின் மாறுபட்ட சிந்தனைக்கேற்ப, புதிய கருப்பொருள்களுடன் எழுதும் சிறார் எழுத்தாளர்கள் யார் யார்? அவர்களின் படைப்புகள் யாவை? வயது வாரியாக என்னென்ன நூல்களைச் சிறுவர்க்கு அறிமுகப் படுத்தலாம்? வாசிப்பின் முதல் படியில் இருக்கும் குழந்தைகளுக்கு ஏற்ற புத்தகங்கள் எவை? இவற்றை வெளியிடும் பதிப்பகங்கள் எவை? என்பன போன்ற விபரங்களைப் பெற்றோருக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டு, செயல்பட்டு வருகின்றோம்.

நூற்றுக்கு மேற்பட்ட சிறார் நூல்கள் குறித்த விபரங்களை, இந்த ஓராண்டில் வெளியிட்டுள்ளோம். குழந்தைகளுக்குக் கதை சொல்வதன் அவசியம் பற்றியும், பாடப் புத்தகம் தாண்டிய வாசிப்பின் அவசியம் பற்றியும், பெற்றோருக்கு விளக்கும் சிறப்புப் பதிவுகளையும், இத்தளத்தில் வாசிக்கலாம். பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் குழந்தைகளின் பெற்றோர், அவர்களை அணுகும் முறை குறித்து உளவியல் மருத்துவரின் ஆலோசனைகள் அடங்கிய சிறப்புப் பதிவும், பெற்றோர் பக்கத்தில் உள்ளது.

குழந்தைகள் என்றாலே, பழைய இராமாயண, மகாபாரதக் கதைகளைச் சொல்வது நம் வழக்கம்.  குழந்தைகளுக்கு இந்தக் கதைகளைச் சொல்லலாமா என்பது குறித்து, சிறப்புப் பதிவில் எழுத்தாளர் உதயசங்கர் எழுதியுள்ளவை, அவசியம் சிந்தித்து மறுபரிசீலனைக்கு உட்படுத்த  வேண்டிய கருத்துகள் ஆகும்.  

பெரும்பாலான குழந்தைகள் ஆங்கில மீடியத்தில் படிப்பதால், தமிழ்ச் சொற்களைச் சரியாக உச்சரிக்கவும், எழுத்துக் கூட்டி வாசிக்கவும் மிகவும் திணறுகின்றனர். இரண்டு ஆண்டுகள் கொரோனா காரணமாகப் பள்ளிப் படிப்பில், பெரிய தேக்கம் ஏற்பட்டுவிட்டதும், இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

பெற்றோர் குழந்தைகளை ஆங்கில மீடியத்தில் படிக்க வைத்தாலும், நம் தாய்மொழியான தமிழில் குழந்தைகளைத் தேர்ச்சி பெற வைப்பதை முக்கிய கடமையாகக் கொள்ள வேண்டும்.

தமிழ் தான் நம் அடையாளம்! என்பதை எக்காலத்திலும், நாம் மறக்கக் கூடாது. அடுத்த தலைமுறைக்குத் தமிழைப் பாதுகாப்பாகக் கொண்டு சேர்ப்பது, நம் அனைவரின் கடமை!  அதற்குப் பெற்றோர் செய்ய வேண்டியது, தமிழில் வெளியாகும் பாடநூல்கள் அல்லாத சிறார் நூல்களைக் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்து, வாசிக்கச் செய்வது தான். 

ஆங்கில நூல்கள் அளவுக்குத் தமிழில் நூல்கள் வழ வழ அட்டையில் கண்ணைக் கவரும் வண்ணப்படங்களோடு தரமாக இல்லை என்பது உண்மை தான்! ஆனால் ஆங்கில நூல்களுக்கிணையாகத் தமிழில் நூல்கள் வெளிவர வேண்டும் என்றால், அவற்றின் விலை அதிகமாகும். விலையைப் பார்க்காமல், பெற்றோர் காசு செலவழித்துப் புத்தகங்கள் வாங்கிப் பதிப்பக உரிமையாளர்களை ஆதரித்தால் மட்டுமே, அவர்கள் தரமான நூல்களை வெளியிட முன்வருவார்கள். ஆனால் தமிழ்ச் சூழலில் 30 ரூபாய்க்கு 300 பிரதிகள் போட்டாலே, ஆண்டுக்கணக்கில் விற்பனையாவதில்லை என்கிறார்கள்.  ஏழரை கோடி தமிழர்கள் வாழும் தமிழ் நாட்டில், ஒரு நூலின் 300 பிரதிகள் கூட விற்பனையாவதில்லை என்பது, எவ்வளவு பெரிய வெட்கக்கேடு!

குழந்தைகளின் பிறந்த நாளுக்கு ஆடம்பரமாக ஆயிரக்கணக்கில் செலவழிக்கத் தயங்காத பெற்றோர், அவர்களுக்கான புத்தகங்கள் வாங்க சில நூறுகளைச் செலவு செய்யத் தயங்குகிறார்கள். இந்நிலை மாற வேண்டும்.  குழந்தைகளின் பிறந்த நாளின் போது, பரிசுகளாகப் புத்தகங்களை வாங்கிக் கொடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ஓய்வு நேரத்தில் அண்மையில் உள்ள நூலகங்களுக்குச் சென்று வாசிக்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.    

சிறந்த தமிழ்ப் பாடல்களையும், கதைகளையும், சுட்டி உலகம் யூடியூப் காணொளி மூலம் வெளியிட்டு வருகின்றோம். இப்பாடல்களைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுத்தால், தமிழ்ச் சொற்களை உச்சரிக்கும் திறன் மேம்படும்; புதிய சொற்களைப் பாடல்கள் மூலம், எளிதாகக் கற்றுக் கொள்வார்கள். நாக்குக்கு நல்ல பயிற்சியாகவும் அமையும். அனிமேஷன் படங்களுடன் கூடிய கதைகளையும், குழந்தைகள் விரும்பிப் பார்ப்பார்கள்.

குழந்தைகள் தினத்தில் சிறுவர்க்குக் கதைப்போட்டி நடத்திப் பரிசுகள் கொடுத்து ஊக்குவித்தோம். பரிசு பெற்ற கதைகளைப் புத்தகமாக வெளியிடும் பணிதான், சில தவிர்க்க முடியாத காரணங்களால், தாமதமாகின்றது. கண்டிப்பாக விரைவில் அவை தொகுக்கப் பெற்றுப் புத்தகமாக வெளியிடப்படும்.

குடும்பத்துடனும், குழந்தைகளுடனும் சேர்ந்து பார்த்து ரசிக்கத் தக்கவாறு சிறந்த சிறுவர் படங்களாகத் தேர்வு செய்து, அறிமுகம் செய்கின்றோம். இன்னும் பல புதிய பகுதிகளைப் படிப்படியாக வெளியிடுவோம்!

உங்கள் ஆதரவுடன் தொடர்ந்து பயணிப்போம்!

நன்றியுடன்,

ஆசிரியர்

சுட்டி உலகம்.

Share this: