தோள்சீலைப் போராட்டம்

Tholseelai_pic

இந்நூல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மேலாடை அணிய தடைவிதிக்கப்பட்ட நாடார் இனப்பெண்கள், கிறிஸ்தவ பாதிரிமார்களின் உதவியுடன் மேலாடை அணியும் உரிமையைப் பெறுவதற்காகப் போராடிய போராட்டத்தைப் பற்றி விவரிக்கின்றது. கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு முன், உயர் சாதியினர் சாதியின் பெயரால், தங்களுக்குக் கீழே இருந்த எளிய மக்களை எப்படியெல்லாம் துன்புறுத்தி, அநியாயம் செய்திருக்கிறார்கள் என்று படித்தபோது, வேதனையாக இருந்தது. இந்நூலிலிருந்து சிறுபகுதி:-

“சாதிக்குப் புறம்பட்டவராகக் கருதப்பட்டவர்களில், தெற்கில் நாடார்களும், வடக்கில் ஈழவர்களும், முதல் நிலையில் இருந்தனர்.  குடைகளை எடுத்துச் செல்வது, காலணிகளை அணிந்து கொள்வது, தண்ணீர்க்குடங்களைப் பெண்கள் இடுப்பில் எடுப்பது, பசுக்களை வளர்த்துப் பால் எடுப்பது போன்றவை, இவர்களுக்கு அனுமதிக்கப்படவில்லை……….பெண்கள் பொன் அணிகள் அணியக்கூடாது; இடைக்கு மேல் உடை உடுத்தக் கூடாது; முண்டு எனப்படும் ஒரு முரட்டுத் துணியை மட்டும் இடுப்பில் கட்ட வேண்டும்; பெண்களும் மார்பகங்களை மூடக்கூடாது; இத்தகைய கடுமையான கட்டுப்பாடுகள், நாடார்கள் மீது, சாதியின் அடிப்படையில் விதிக்கப்பட்டன..” (பக் 31).

தென் திருவிதாங்கூரில் சாதிய அடக்குமுறையால், ஒடுக்கப்பட்டு வாழ்ந்து வந்த நாடார் இன மக்களுக்குக் கிறிஸ்தவத்தைப் பரப்ப வந்த ஆங்கிலேய பாதிரிமார்கள், பெரிதும் உதவியிருக்கின்றனர். அதனால் தான் கிராமம் கிராமமாக, நாடார் இன மக்கள் கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொண்டனர். தங்கள் சாதிய இழிநிலையைத் துடைத்தெறிய, மதத்தை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி, அதில் வெற்றியும் பெற்றனர் என்கிறார் ஆசிரியர்.

தாழ்ந்த சாதி மக்களை விலை கொடுத்து வாங்கும் அடிமை வியாபாரமும் அப்போது இருந்திருக்கிறது. அவர்கள் உயர் சாதி மக்களின் கடவுள்களுக்குப் பலியிடப்பட்டார்கள் என்ற செய்தி, கொடுமையின் உச்சம்.  போரில் அரசர் பெற வேண்டிய வெற்றிக்காகவும், ஆறு உடைப்பெடுக்கும் சமயம், அது தீயசக்தியின் கோபமென்று நம்பி, அக்கோபத்தைத் தணிப்பதற்காகவும், அடிமைகள் உயிரோடு மண்ணில் புதைக்கப் பட்டார்களாம்.

உயர் சாதிப் பெண்கள் போல்,நாடார் இனப் பெண்களும், தங்கள் மார்பகத்தை மூட மேலாடை அணிய வேண்டும் என்பதற்காக நடத்திய போராட்டத்தை, இந்நூல் விரிவாகப் பேசுகின்றது. இப்போராட்டம் 3 கட்டமாக நடந்து முடிந்து, வெற்றியடைந்திருக்கிறது.  1812இல் துவங்கிய இப்போராட்டம் 1865இல் தான் முடிவுக்கு வந்து இருக்கின்றது. கிறித்தவ மிஷனரிகளின் தொடர் விண்ணப்பங்களால், ஆங்கிலேய அரசு விக்டோரியா மகாராணி பெயரில், அனுமதி அளித்த பிறகே அப்பெண்கள் மேலாடை அணியும் உரிமையைப் பெற்றிருக்கின்றனர்.  

சாதி ஒழிப்பு, சமூக விடுதலைக்காகப் போராடிய அய்யா வைகுண்டசாமியைப் பற்றியும், கிறிஸ்தவ பாதிரிமார்கள் பற்றியும் இந்நூலின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.  தோள்சீலைப் போராட்டத்தின் வழியே, அக்காலச் சமூக நிகழ்வுகளையும், நாம் அறிந்து கொள்ளவுதவும் நூல்.

வகைவரலாற்றுக் கட்டுரை நூல்
ஆசிரியர்கொல்லால் எச்.ஜோஸ்
வெளியீடு:-Dravidian Stock, Chennai-21 (Cell No +91 9092787854)
விலைரூ 120/-
Share this: