குருவி நடக்குமா?

Kuruvinadakkuma_pic

இத்தொகுப்பில் 11 இயற்கை அறிவியல் சிறுவர் கதைகள் உள்ளன. உயிரினங்கள் குறித்த பல்வேறு அறிவியல் உண்மைகளைச் சிறுவர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக, இக்கதைகள் உள்ளன. ‘குருவி நடக்குமா?’ என்ற முதல் கதையில், நம்பி என்கிற சிறுவன்  சிட்டுக்குருவி பற்றி ஒரு பாடல் எழுதித் தன் மாமாவிடம் காட்டுகிறான்:-

சிட்டுக் குருவி வாவா

சின்னக்குருவி வாவா

நடந்து அருகே வாவா

நெல்லு தாரேன் வாவா!”

என்ற பாடலில், “ஒரு பிழையிருக்கிறது” என்கிறார் மாமா. அதற்குப் பிறகு சிட்டுக்குருவியைக் கூர்ந்து கவனித்துக் குருவி நடக்கவில்லை, தத்தி வருகிறது என்று கண்டுபிடித்துப் “பட்டுக்குருவி வாவா! பறந்து தத்தி வாவா!” என்று பாடலைத் திருத்துகிறான் நம்பி. இது போல் சில கதைகளில் இடையிடையே சில சிறார் பாடல்களும் சேர்ந்தே வருகின்றன. நமக்கு நன்கு தெரிந்த சிட்டுக்குருவி, காகம் போன்றவற்றில், நமக்குத் தெரியாத, சில அறிவியல் உண்மைகளையும், ஆசிரியர் கொடுத்திருப்பது சிறப்பு.

எடுத்துக்காட்டாகக் காகம் கூடி உண்ணும் என்று, நாம் நம்பிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் தன் முயற்சியால் கிடைக்கும் உணவை, இது தானே தின்னும். சந்தேகத்துக்குரிய உணவை மட்டுமே, பகிர்ந்து உண்ணும் என்ற அறிவியல் உண்மையறிந்து வியப்பு.

‘அணிலின் முதுகில் உள்ள கோடுகள், அணை கட்ட உதவியதற்காக ராமர் போட்டவை’ என்ற மூடநம்பிக்கைக்கு எதிராக, அறிவியல் உண்மையைச் சிறுவர் தெரிந்து கொள்ளும் விதமாக, “இது ராமருக்கு அணில் போன்ற உயிரினங்களும் உதவின என்பதைக் காட்ட எழுந்த கற்பனை. இராமாயண காலத்திற்கு முன்பே, அணில்களின் முதுகில் கோடுகள் இருந்திருக்கின்றன” என்கிறார் ஆசிரியர்.  

ஒவ்வொரு கதைக்குப் பின்னாலும், அந்த உயிர்னத்தைக் குறித்த அறிவியல் செய்திகளைக் கொடுத்திருக்கிறார்.  சிறுவர்களைக் கவரும் விதத்தில் கதைகளின் தலைப்புகளையும் கொடுத்திருக்கிறார். “நீர்நாய் குரைக்குமா? புனுகுப்பூனை மியாவ் எனக் கத்துமா? கொண்டையை மடக்குமா கொண்டாலாத்தி?” என்பன, தலைப்புகளுள் சில. நீர்நாய், புனுகுப்பூனை, சுறா ஆகிய உயிரினங்கள் குறித்துபெ பெரியவர்களுக்கே கூடத் தெரியாத செய்திகள் இதில் உள்ளன.

உயிரினங்கள் குறித்த அறிவியல் செய்திகளைக் கட்டுரை வடிவில் கொடுக்காமல் அதைக் கதை வழியே சுவாரசியமாக க் கொடுத்திருக்கிறார் ஆசிரியர்.  எளிமையான மொழி நடையில், இயற்கை குறித்துத் தெரிந்து கொள்ளவும், இயற்கையை நேசிக்கவும் உதவும் சிறுவர் கதைகள்.

வகைசிறுவர் அறிவியல் கதைகள்
ஆசிரியர்‘ரேவதி’(டாக்டர் ஈ.எஸ்.ஹரிஹரன்)
வெளியீடுபழனியப்பா பிரதர்ஸ்,சென்னை-14
விலைரூ 35/-
Share this: