தோபா தேக் சிங்

Thoba_Dek_Singh_pic

சிறார்களை வாசிப்பை நோக்கி நகர்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் பதின்பருவத்தினருக்கான சிறு சிறு நூல்களை ஓங்கில் கூட்டம் மின்னூலாகத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. அந்த வரிசையில்  சதத் ஹசன் மண்டோ எழுதிய ‘தோபா தேக் சிங்’ என்ற முக்கியமான சிறுகதையைத் தற்போது வெளியிட்டுள்ளது. இதனை எழுத்தாளர் உதயசங்கர் தமிழாக்கம் செய்துள்ளார்.

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற எழுத்தாளர் சதத் ஹசன் மண்டோ இந்தியா பாகிஸ்தான் பிரிவினை நடந்த இருண்ட காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் சோகங்களையும், துயரங்களையும் கதைகளின் வழியே பதிவு செய்தவர். மத நம்பிக்கை மனித உயிர்களை எப்படிப் பலி வாங்கியது என்பதை வாசகர்கள் மனதில் உணரும்படி எழுதியவர்.

திடீரென்று ஒரு நாள் நாம் வாழ்ந்த ஊர் இந்தியாவில் இருக்கின்றதா? பாகிஸ்தானில் உள்ளதா? என்று தெரியாமல் போனால் எப்படியிருக்கும்?  நிலமும் எல்லைகளும் மனிதர்களை எப்படிக் கூறு போட்டது என்பதை உணர்ச்சிகரமாகப் பதிவு செய்திருக்கிறது, இக்கதை.

பிரிவினை நடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சிறைக்கைதிகளைப் போல மனநலக் காப்பகங்களில் இருந்த மனநோயாளிகளையும் பரிமாற்றம் செய்து கொள்ளலாம் என இரு நாடுகளும் முடிவெடுக்கின்றன.  அங்கிருந்த மனநோயாளிகளில் பிஷான் சிங்கும் ஒருவர்.  அவர் 15 ஆண்டுகளாக அங்கு அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார். தூங்குவதற்குக் கண்ணைக் கூட இமைக்காமல் தொடர்ந்து நின்று கொண்டேயிருக்கிறார். அவர் எப்போது பேசினாலும், அது யாருக்கும் புரியாத உளறலாகவே இருக்கிறது.

“தோபா தேக் சிங் இந்தியாவில் இருக்கின்றதா? பாகிஸ்தானில் இருக்கின்றதா?” என்று அவர் அடிக்கடிக் கேட்கும் கேள்விக்கு யாரிடமிருந்தும் அவருக்குத் திருப்தியான பதில் கிடைக்கவில்லை. 

பரிமாற்றத்துக்காகக் குறிப்பிட்ட நாளில் அவர் வாகா எல்லைக்குக் கொண்டுவரப்படுகிறார்.  அன்று என்ன நடந்தது? அவர் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டாரா? என்றறிய கதையை வாசியுங்கள்.

சதத் ஹசன் மண்டோ எழுதிய மற்ற கதைகளையும் வாசிக்கத் தூண்டும் உணர்ச்சிகரமான  கதை.

வகை – மொழிபெயர்ப்பு -மின்னூல்இளையோர் சிறுகதை- மின்னூல்
ஆசிரியர்
தமிழாக்கம்
சதத் ஹசன் மண்டோ
உதயசங்கர்
வெளியீடு:- இணைப்பு:-ஓங்கில் கூட்டம் https://www.amazon.in/dp/B0B1C2S65P
விலைரூ 49/-
Share this: