காற்றை வசப்படுத்திய சிறுவன்

The_boy_harnessed_pic

‘THE BOY WHO HARNESSED THE WIND’ என்ற தலைப்பில், வில்லியம் (William Kamkwamba) எழுதிய சுயசரிதையை அடிப்படையாகக் கொண்டு, சிவெடெல் எஜியோஃபார் (Chiwetel Ejiofor). என்பவர்,  இப்படத்தை இயக்கியுள்ளார்.  இவரே இதில் சிறுவனின் அப்பாவாகவும் நடித்திருக்கிறார், ஆப்பிரிக்காவின் செவா (Chewa) மொழியிலும், ஆங்கிலத்திலும் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்காவின் தென்கிழக்கு நாடான மலாவி (Malawi), பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நாடு என்பதால், மக்கள் பசியிலும், பஞ்சத்திலும், உழலுகின்றனர்.  இந்நாட்டைச் சேர்ந்த வில்லியம் என்ற சிறுவன், 13 ஆம் வயதில், தன் கிராமத்தில் நிகழ்த்திய சாதனையை இப்படம் பேசுகின்றது.

வில்லியம் தன் சகோதரியுடனும், பெற்றோருடனும் வசிக்கிறான். அவனுக்கு இளம் வயதிலிருந்தே எலெக்டிரிக்கல் மற்றும் எலக்டிரானிக்ஸ் துறைகளில் ஆர்வம் அதிகம். குப்பையில் கிடைக்கும் பாட்டரிகளைப் பொறுக்கி, தன் நண்பர்களின் டிரான்சிஸ்டர்களைப் பழுது பார்த்துக் கொடுக்கிறான். 

அக்கிராம மக்கள் அனைவருமே வேளாண்மையை நம்பி இருக்கின்றனர். கார்பரேட் கம்பெனிக்காரர்கள் அம்மக்களிடமிருந்து நிலங்களை வாங்கிக்கொண்டு, அங்கிருந்த மரங்களை வெட்டிவிடுகின்றனர்.  வெள்ளம் வருவதற்குத் தடையாக இருந்த மரங்களை வெட்டிவிட்டதால், கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து, பயிர்களை அழிக்கின்றது. 

மின்சார வசதியில்லா அக்கிராமத்தில், மழை பெய்யாமலும் அடிக்கடி வறட்சி ஏற்பட்டு தானிய உற்பத்தி குறைகின்றது.  ஒரு கட்டத்தில் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே உணவு உண்ண முடியும் என்கிற நிலைக்கு, வில்லியம் குடும்பம் தள்ளப்படுகின்றது.    

வில்லியம் அவ்வூர் பள்ளிக்கூடத்தில் படிக்கின்றான்.  வறுமையினால் அவனது பள்ளிக்கட்டணத்தைப் பெற்றோரால் கட்ட முடியவில்லை. பணம் கட்டவில்லை என்ற காரணத்துக்காக, அவன் பள்ளியிலிருந்து நீக்கப்படுகின்றான்.   ஆனால் அவனுக்குப் படிப்பில் அதிக ஆர்வம் இருக்கின்றது.

அப்பள்ளியில் வேலை செய்யும் அறிவியல் ஆசிரியரும், தன் அக்காவும் அடிக்கடித் தனிமையில் சந்தித்துப் பேசுவதை, வில்லியம் ஒரு நாள் பார்க்க நேரிடுகின்றது.  எனவே அறிவியல் ஆசிரியரிடம், சந்திப்பு ரகசியத்தை வெளிப்படுத்தாமல் இருக்க வேண்டுமானால், பள்ளி நூலகத்தைப் பயன்படுத்த அனுமதிக்குமாறு கேட்கின்றான்.  அவரும் பயந்து கொண்டு நூலகரிடம் அழைத்துச் சென்று, படிக்க அனுமதிக்கிறார்.

வில்லியம் நூலகத்தில் Using Energy என்ற புத்தகத்தை எடுத்துப் படிக்கிறான். பின் இது சம்பந்தமான அறிவியல் புத்தகங்களைத் தொடர்ச்சியாக வாசிக்கின்றான். ஏற்கெனவே அறிவியல் ஆசிரியரிடம், அவருடைய சைக்கிளில் இருக்கும் விளக்கு எவ்வாறு எரிகிறது என்று கேட்டு, டைனமோ பற்றித் தெரிந்து கொள்கிறான். அந்த டைனமோ உதவியால், சைக்கிளின் முகப்பு விளக்கு எரிவதைக் கண்டதும், அவனுக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. அதை அடிப்படையாக வைத்துத் தன் கிராமத்துக்கு ஒரு காற்றாலை தயாரிக்கலாம் என முடிவு செய்கிறான் வில்லியம்.

காற்றாலை (Windmill) மூலம் மின் உற்பத்தி செய்து, மோட்டாரைச் சுற்ற வைத்துத் தண்ணீர் இறைக்க முடியும்; அதன் மூலம் வேளாண்மை செய்ய முடியும்; பஞ்சத்தை வெல்ல முடியும் என அவன் நம்புகிறான்.  ஆனால் அதற்கு அவனுக்கு ஒரு சைக்கிள் தேவையாயிருக்கிறது.  அக்கிராமத்தில் அவன் அப்பாவிடம் மட்டுமே, ஒரே ஒரு சைக்கிள் இருக்கிறது.  அதைத் தந்தால் தான் ஒரு காற்றாலையை நிறுவ முடியும் என வில்லியம் அவன் அப்பாவிடம் கெஞ்சுகிறான்.

ஆனால் அவருக்கு அதில் நம்பிக்கையில்லை.  ஏற்கெனவே வறுமையில் வாடும் அவர் “என் சைக்கிளை வைத்துப் பொம்மை தயாரிக்க விரும்புகிறாயா?” என்று அவனைப் பயங்கரமாகத் திட்டி விட்டுக் கொடுக்க மறுத்துவிடுகின்றார். பஞ்சம் தலைவிரித்தாடுகின்றது.  பசிக்கொடுமை தாங்காமல் திருடர்கள் வீடு புகுந்து திருடுகிறார்கள். வில்லியம் வீட்டிலும் அவன் அம்மாவை மிரட்டி வீட்டில் இருந்த உணவு தானியங்களைத் திருடர்கள் கொள்ளையடித்துச் செல்கிறார்கள்.  அரசாங்கம் ரேஷனில் கொடுக்கும் உணவுப் பொருட்கள் அவர்களுக்குப் போதுமானதாக இல்லை. 

அக்கிராமத்தில் இருந்த முக்கால்வாசி மக்கள் பஞ்சம் காரணமாக வீடுகளைக் காலிசெய்து விட்டு, கிராமத்தை விட்டு வெளியேறுகிறார்கள்.  அவ்வூரில் இருந்த பள்ளியும் மூடப்படுகின்றது. பள்ளியில் வேலை செய்த அறிவியல் ஆசிரியர், தன்னுடன் வந்துவிடும்படி  தாம் காதலிக்கும் சிறுவனின் அக்காவைக் கூப்பிடுகிறார். ஆனால் பெற்றோருக்குத் துரோகம் செய்துவிட்டுத் தன்னால் வர முடியாது என அவள் மறுக்கிறாள்.

காற்றாலை தயாரிக்கத் தனக்கு ஆசிரியர் சைக்கிளில் இருக்கும் டைனமோவை வாங்கித் தரும்படி, வில்லியம் தன் அக்காவிடம் கேட்கிறான்.  எனவே அக்கா அவனுக்கு டைனமோவை வாங்கித் தந்துவிட்டு, வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு ஆசிரியருடன்  சென்றுவிடுகிறாள்.  ‘வீட்டுச் சாப்பாட்டுப் பங்கில், இனிமேல் ஒன்று குறையும்’ என்று அவள் எழுதிவைத்துவிட்டுப் போன கடிதத்தைப் படித்துவிட்டு, அவன் அம்மா அழுகிறார். 

தன்னால் ஒரு காற்றாலையை நிறுவி, கிராமத்தின் பஞ்சத்தைப் போக்க முடியும் என ஊரை விட்டு வெளியேற நினைக்கும் தன் நண்பர்களிடம் வில்லியம் சொல்கிறான்.  அவர்களுக்கு ஏற்கெனவே டிரான்சிஸ்டர் ரேடியோக்களை அவன் ரிப்பேர் செய்து கொடுத்திருக்கிறான். மேலும்  வெற்றிகரமாக இயங்கும் சிறிய மாதிரி காற்றாலை ஒன்றை அவர்களுக்குச் செய்து காட்டியிருக்கிறான்.  அதனால் அவனுடைய திறமையில் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டிருந்தது.

எனவே அவர்கள் அனைவரும் சேர்ந்து வந்து, வில்லியம் அப்பாவிடம் அவருடைய சைக்கிளைத் தருமாறு கேட்கின்றனர்.  ஆனால் அவரோ கொடுக்க முடியாது என்று அவர்களிடம் சண்டை போட்டுத் துரத்திவிடுகின்றார்.  வில்லியம் பாசமாக வளர்த்த நாயும், உண்ண எதுவுமின்றி பசியால் செத்துவிடுகின்றது.  அதனைப் புதைத்துவிட்டு வில்லியம் சோகமாக  அமர்ந்திருக்கிறான்.  அவன் அம்மா அவனுக்காகப் பரிந்து பேசி சைக்கிளைக் கொடுக்கச் சொல்லவே, அவன் அப்பாவும் சம்மதிக்கிறார்.   

அக்கிராமத்தில் இருந்த சிலருடன் சேர்ந்து, அதற்கான வேலைகளைத் துவங்குகிறான் வில்லியம்.  காற்றாலையை நிறுவ அங்கிருந்த சில மரங்களை வெட்டி 32 அடி உயரத்துக்குச் சாரம் கட்டுகிறார்கள்.  அறிவியல் ஆசிரியரிடமிருந்து பெற்ற டைனமோ, அவன் அப்பாவின் சைக்கிள் சக்கரங்கள் ஆகியவற்றைக் குப்பைமேட்டில் பொறுக்கிச் சேர்த்த  மின்விசிறி இறக்கைகளுடன் பொருத்தி, வில்லியம் ஒரு காற்றாலை தயாரிக்கிறான்.  அதை எடுத்துச் சாரத்தின் உச்சியில் பொருத்திக் கட்டுகிறான். அதைக் கீழே கிணற்று மோட்டாருடன் இணைக்கிறான்.

காற்று பலமாக வீச, மின்விசிறி சுழல ஆரம்பிக்கின்றது.  கீழே நிற்கும் வில்லியமின் பெற்றோரும், எஞ்சியிருக்கும் கிராம மக்களும் ஆர்வத்துடனும், ஏக்கத்துடனும் மோட்டாரிலிருந்து தண்ணீர் வருமா என எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.  காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தியாகி, மோட்டாரை இயக்குகிறது.  மோட்டார் ஓடத்துவங்கியவுடன் தண்ணீரை வெளியே இறைக்கின்றது.  நீரைக் கண்டவுடன் மகனை அணைத்துக் கொண்டு தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார் அப்பா.  மக்கள் கொண்டாட்டத்தில் குதித்து மகிழ்கின்றனர்.  மின்சார வசதி கூட இல்லாத அந்தப் பஞ்சப்பட்டி கிராமத்தில், தண்ணீர் கிடைத்து வேளாண்மை செழிக்கின்றது.  பூமி பசுமையாக மாறுகின்றது.       

வில்லியம் (William Kamkwamba) 2001 ஆம் ஆண்டு, இச்சாதனையை நிகழ்த்திய போது, அவருக்கு வயது 13.  இவரது சாதனையை அறிந்த டெட் குளோபல் (Ted Global) நிறுவனம், இவரை ஒரு கருத்தரங்குக்குப் பேச அழைத்தது.  இதன் மூலம் உலக முதலீட்டார்களின் கவனத்தை ஈர்த்தார் வில்லியம்.  இப்போது தம் முயற்சியால், பக்கத்துக் கிராமங்களுக்கும் மின்சாரம் கிடைக்க உதவியிருக்கிறார்.

ஆர்வம், கற்பனை, புத்திசாலித்தனம், வாசிப்பு, தொடர்ச்சியான தேடல், முயற்சி, கடின உழைப்பு ஆகியவை இருந்தால், எந்தக் குக்கிராமத்தில் வசிக்கும் குழந்தையும் சாதனை நிகழ்த்த முடியும் என்பதற்கு இவரது வாழ்வு, ஓர் எடுத்துக்காட்டு!

சாதிக்க நினைக்கும் குழந்தைகளுக்கு, இவரது வாழ்க்கை உந்துசக்தியாக விளங்கும். சிறுவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்!

(மார்ச் 2022 பொம்மி இதழில் எழுதி வெளிவந்தது)

Share this: